1 யோசுவா அதிகாலையில் விழித்தெழுந்தார். அவரும் இஸ்ரயேல் மக்களனைவரும் சித்திமிலிருந்து புறப்பட்டு யோர்தான் வந்தடைந்தனர். அதைக் கடக்குமுன் அங்கே தங்கினர்.2 மூன்று நாள்கள் கழிந்தபின் மேற்பார்வையாளர் பாளையமெங்கும் போய்,3 மக்களுக்குக் கட்டளையிட்டுக் கூறியது: “உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையை லேவியக் குருக்கள் தூக்குவதை நீங்கள் பார்க்கும்போது, உங்கள் இடங்களிலிருந்து புறப்பட்டு அதன் பின்னால் செல்லவேண்டும்.4 ஆயினும், உங்களுக்கும் அதற்கும் இரண்டாயிரம் அடி இடைவெளி இருக்கட்டும். யாரும் அதன் அருகில் செல்ல வேண்டாம். நீங்கள் செல்லும் வழி உங்களுக்குத் தெரியவேண்டும். ஏனெனில், நீங்கள் அவ்வழியில் இதுவரை சென்றதில்லை.”5 யோசுவா மக்களிடம், “உங்களைத் தூய்மையாக்கிக்கொள்ளுங்கள். நாளை ஆண்டவர் உங்களிடையே வியத்தகு செயல்கள் புரிவார்” என்றார்.6 யோசுவா குருக்களிடம், “உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிப் பிடியுங்கள். மக்கள்முன் கடந்து செல்லுங்கள்” என்றார். அவ்வாறே, அவர்களும் உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிக் கொண்டு மக்கள்முன் சென்றனர்.⒫7 ஆண்டவர் யோசுவாவிடம், “இன்று இஸ்ரயேலர் அனைவரின் பார்வையில் உன்னை உயர்த்தத் தொடங்குகிறேன். அதனால் நான் மோசேயுடன் இருந்ததுபோல் உன்னோடும் இருப்பேன் என்று அவர்கள் அறிந்து கொள்வார்கள்.8 உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிவரும் குருக்கள் யோர்தான் ஆற்றங்கரைக்கு வந்தவுடன் அங்கேயே நிற்குமாறு அவர்களுக்குக் கட்டளையிடு” என்றார்.9 யோசுவா இஸ்ரயேல் மக்களிடம், “இங்கே வாருங்கள், உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் வார்த்தைகளைக் கேளுங்கள்.10 வாழும் இறைவன் உங்களிடையே இருக்கின்றார் என்று இதனால் அறிவீர்கள். அவர் உங்கள் முன்னிருந்து கானானியர், இத்தியர், இவ்வியர், பெரிசியர், கிர்காசியர், எமோரியர், எபூசியர் ஆகியோரை விரட்டிவிடுவார்.11 இதோ, உலகனைத்தின் ஆண்டவரது உடன்படிக்கைப் பேழை உங்கள்முன் யோர்தானைக் கடக்கின்றது.12 இப்போது இஸ்ரயேலின் பன்னிரு குலங்களிலிருந்தும் குலத்திற்கு ஒருவராக நீங்கள் தேர்ந்தெடுங்கள்.13 உலகனைத்தின் ஆண்டவரது உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிச் செல்லும் குருக்களின் காலடிகள் யோர்தான் நீரில் பட்டவுடன் அத்தண்ணீர் பிரிந்து போகும். மேற்பகுதியிலிருந்து ஓடிவரும் தண்ணீர் குவியலாக நிற்கும்” என்றார்.⒫14 மக்கள் தங்கள் கூடாரங்களிலிருந்து யோர்தானைக் கடக்கப் புறப்படும்போது குருக்கள் உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிக் கொண்டு மக்கள் முன்னே சென்றனர்.15 உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிச் சென்ற குருக்கள் யோர்தானை அடைந்தனர். அவர்கள் காலடிகள் யோர்தான் நீரின் விளிம்பில் நனைந்தவுடன், மேற்பகுதியிலிருந்து ஓடிவந்த யோர்தான் நீர் வெகுதொலையில் நின்றது. அறுவடை நாள்களில் இந்நதி கரைபுரண்டு ஓடும்.16 மேற்பகுதியிலிருந்து வந்த நீர், சாரத்தானின் அருகில் இருந்து ஆதாம் நகருக்கு எதிரில் வெகு தொலையில் மேலெழும்பி நின்றது. கீழே ஓடிய நீர் பாலைநிலக் கடலாகிய சாக்கடல்** வரை ஓடிமறைந்தது. மக்களும் எரிகோவுக்கு நேர்எதிராகக் கடந்து சென்றனர்.17 இஸ்ரயேலர் அனைவரும் கடந்து முடிக்கும்வரை, ஆண்டவரது உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிச் சென்ற குருக்கள் யோர்தான் நடுவே வறண்ட தரையில் நின்றனர். எல்லா இஸ்ரயேல் மக்களும் அவ்வறண்ட தரை வழியாக நடந்தனர்.
By continuing to browse the site, you are agreeing to our use of cookies.