நியாயாதிபதிகள் 8 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 எப்ராயிம் மக்கள் கிதியோனிடம், “என்ன, எங்களுக்கு இப்படிச் செய்து விட்டீரே? நீர் மிதியானியருக்கு எதிராகப் போரிடச் சென்றபொழுது எங்களைக் கூப்பிடவில்லையே!” என்று சொல்லி அவர்கள் அவரோடு தீவிரமாக வாக்குவாதம் செய்தனர்.2 அவர் அவர்களிடம், “நான் இப்பொழுது உங்களைவிட என்ன சாதித்து விட்டேன்? எப்ராயிமின் இரண்டாம் திராட்சைப்பழப் பறிப்பு அபியேசரின் முதல் பறிப்பைவிடச் சிறந்ததல்லவா?3 ஆண்டவர் மிதியானியரின் சிற்றரசர்கள் ஒரேபையும் செயேபையும் உங்கள் கையில் ஒப்படைத்தார். நான் உங்களைவிட என்ன சாதித்துவிட முடிந்தது?” என்று சொன்னதும், அவர்மீது அவர்கள் கொண்ட சினம் தணிந்தது.⒫4 கிதியோன் யோர்தானுக்கு வந்து அதைக் கடந்தார். அவரும் அவரோடு இருந்த முந்நூறு பேரும் களைப்புற்றிருந்தாலும் துரத்திச் சென்றனர்.5 அவர் சுக்கோத்து மக்களிடம், “என் பின்னே வரும் இவர்களுக்கு உணவு கொடுங்கள். ஏனெனில் இவர்கள் களைத்திருக்கின்றனர். நான் மிதியானிய அரசர்களான செபாகு. சல்முன்னா என்பவர்களைத் தொடர்ந்து துரத்திக்கொண்டு செல்கிறேன்” என்றார்.6 “செபாகையும் சல்முன்னாவையம் நீ பிடித்துவிட்டாயா? உமது படைக்கு நாங்கள் ஏன் உணவு கொடுக்கவேண்டும்?” என்று சுக்கோத்தின் மக்கள் கேட்டனர்.⒫7 கிதியோன், “அவ்வாறே ஆண்டவர் செபாகையும் சல்முன்னாவையும் என்கையில் ஒப்படைக்கும்பொழுது நான் உங்கள் உடலைப் பாலைநில முட்களாலும் நெருஞ்சிகளாலும் கிழிப்பேன்” என்றார்.8 அங்கிருந்து பெனுவேலுக்குச் சென்று இதேபோல அவர்களிடமும் கேட்டார். சுக்கோத்து மக்கள் பதிலளித்தது போலவே, பெனுவேல் மக்களும் அவருக்குப் பதிலளித்தனர்.9 பெனுவேல் மக்களிடம், “நான் வெற்றியுடன் திரும்பி வரும்பொழுது இந்தக் கோபுரத்தை இடித்துத் தள்ளுவேன்” என்றார்.⒫10 செபாகும் சல்முன்னாவும் கற்கோரில் இருந்தனர். பதினைந்தாயிரம் பேர் கொண்ட படையும் அவர்களோடு இருந்தது. அவர்கள் அனைவரும் கிழக்கில் வாழும் மக்களின் படை அனைத்திலிருந்தும் எஞ்சி இருந்தவர்கள். ஏற்கெனவே, ஓர் இலட்சத்து இருபதாயிரம் போர் வீரர் மடிந்திருந்தனர்.11 கிதியோன் கூடாரங்களில் வாழ்வோரின் பாதைவழியாக நோபாவுக்கும் யோக்பகாவுக்கும் கிழக்காகச் சென்று, எதிர்பாராத நேரத்தில் படையைத் தாக்கினார்.12 செபாகும் சல்முன்னாவும் தப்பி ஓடினர். அவர் அவர்கள் பின்னே துரத்திச் சென்று மிதியானின் இரண்டு அரசர்களான செபாகையும் சல்முன்னாவையும் பிடித்தார். படைமுழுவதையும் சிதறடித்தார்.⒫13 யோவாசின் மகன் கிதியோன் போரிலிருந்து எரேசு மேட்டின் வழியாகத் திரும்பிக்கொண்டிருந்தார்.14 அவர் சுக்கோத்தைச் சார்ந்த ஓர் இளைஞனைப் பிடித்து அவனை விசாரித்தார். அவன் அவருக்குச் சுக்கோத்தின் தலைவர்களும் பெரியோர்களுமாக எழுபத்தேழுபேரின் பெயர்களை எழுதிக்கொடுத்தான்.15 அவர் சுக்கோத்து மக்களிடம் வந்து, “இப்பொழுதே செபாகையும் சல்முன்னாவையும் பிடித்துவிட்டாயா? களைப்புற்ற உன் வீரர்களுக்கு நாங்கள் ஏன் உணவு கொடுக்க வேண்டும் என்று கூறி என்னைப் பழித்தீர்களே! அந்தச் செபாகையும் சல்முன்னாவையும் இதோ பாருங்கள்” என்று கூறினார்.16 பாலைநில முட்களையும் நெருஞ்சிகளையும் கொண்டு நகரின் பெரியோர்களை வதைத்துச் சுக்கோத்து மக்களுக்குப் பாடம் புகட்டினார்.17 பெனுவேலின் கோபுரத்தை இடித்து நகரின் மக்களைக் கொன்றார்.⒫18 செபாகிடமும் சல்முன்னாவிடமும், “நீங்கள் போரில் கொன்ற மனிதர்கள் எத்தகையோர்?” என்று கேட்டார். அவர்கள், “உம்மைப் போல் அவர்கள் ஒவ்வொருவரும் அரச மைந்தரைப் போல் தோற்றமளித்தனர்” என்றனர்.19 அவர், “அவர்கள் என் சகோதரர்கள்; என் தாயின் மக்கள்; நீங்கள் அவர்களை உயிரோடு விட்டிருந்தால் நான் உங்களைக் கொல்லமாட்டேன். இது வாழும் ஆண்டவர் மீது ஆணை!” என்றார்.20 அவர் தம் தலைமகன் எத்தேரிடம், “எழு! அவர்களைக் கொல்” என்றார். இளைஞன் தன் வாளை உருவவில்லை. ஏனெனில், அவன் இன்னும் சிறுவனாக இருந்ததால் அஞ்சினான்.21 செபாகும் சல்முன்னாவும், “நீயே எழுந்து எங்களைத் தாக்கு. ஆளைப்போன்றே அவனது ஆற்றல்” என்றனர். கிதியோன் எழுந்து செபாகையும் சல்முன்னாவையும் கொன்றார். அவர்களது ஒட்டகங்களின் கழுத்தில் இருந்த இளம்பிறை அணிகளை எடுத்துக் கொண்டார்.⒫22 இஸ்ரயேலர் கிதியோனிடம், “எங்களை ஆள்வீர்! நீரூம் உம் மகனும், உம் மகனின் மகனும் ஆள்வீர்களாக! ஏனெனில், நீர் மிதியானியரின் கையிலிருந்து எங்களை விடுவித்தீர்!” என்றனர்.23 கிதியோன் அவர்களிடம், “நான் உங்களை ஆளமாட்டேன். என் மகனும் உங்களை ஆளமாட்டான். ஆண்டவரே உங்களை ஆள்வார்” என்றார்.24 அவர் அவர்களிடம், “நான் உங்களிடம் ஒரு வேண்டுகோள் விடுக்கின்றேன். நீங்கள் ஒவ்வொரு வரும் கொள்ளையடித்தவற்றிலிருந்து காதணியை எனக்குக் கொடுங்கள்” என்றார். ஏனெனில், இஸ்மயேலரான மிதியானியர் தங்கக் காதணிகள் அணிவது வழக்கம்.25 இஸ்ரயேலர், “நாங்கள் உறுதியாகச் செய்வோம்” என்றனர். அவர்கள் ஒரு துணியை விரித்தனர். அதன்மீது ஒவ்வொருவனும் தான் கொள்ளையடித்தவற்றிலிருந்து காதணியைப் போட்டான்.26 அவர் கேட்ட தங்கக் காதணிகளின் எடை ஆயிரத்து எழுநூறு செக்கேல் ஆகும். அத்தோடு இளம்பிறை அணிகள், தொங்கணிகள், மிதியான் அரசர்களின் பட்டாடைகள், அவர்களுடைய ஒட்டகங்களின் கழுத்தின்மீது இருந்த அணிகலன்கள் ஆகியவற்றையும் கொடுத்தனர்.27 கிதியோன் அவற்றைக் கொண்டு ஓர் ஏப்போதைச் செய்து தம் நகராகிய ஒபிராவில் அதை நிறுவினார். இஸ்ரயேலர் அனைவரும் அங்கே வேசித்தனம் செய்தனர். கிதியோனுக்கும் அவர் குடும்பத்தாருக்கும் அது ஒரு கண்ணியாக இருந்தது.28 மிதியானியர் இஸ்ரயேல் மக்கள் முன்னிலையில் தாழ்த்தப்பட்டனர். அவர்களால் தலைதூக்க முடியவில்லை. கிதியோனின் காலத்தில் நாற்பது ஆண்டுகள் நாட்டில் அமைதி நிலவியது.29 யோவாசின் மகன் எருபாகால் திரும்பிச்சென்று தம் வீட்டில் வாழ்ந்தார்.30 கிதியோனுக்கு அவருடைய சொந்த மக்கள் எழுபது பேர். ஏனெனில், அவருக்குப் மனைவியர் பலர் இருந்தனர்.31 செக்கேமிலிருந்த அவருடைய வைப்பாட்டி அவருக்கு ஓர் ஆண்மகனைப் பெற்றெடுத்தாள். அவர் அவனுக்கு அபிமெலக்கு என்று பெயரிட்டார்.32 யோவாசின் மகன் கிதியோன் மிகுந்த வயதாகி இறந்தார். அவரை அபியேசருக்குரிய ஒபிராவில் அவர் தந்தை யோவாசின் கல்லறையில் அடக்கம் செய்தனர்.33 கிதியோன் இறந்த பின் இஸ்ரயேல் மக்கள் மீண்டும் பாகாலிடம் திரும்பி வேசித்தனம் செய்தனர். பாகால் பெரித்தைத் தங்கள் தெய்வமாக வைத்துக்கொண்டனர்.34 தங்களைச் சூழ்ந்து வாழ்ந்த எதிரிகளின் கையிலிருந்து விடுவித்த தங்கள் கடவுளாகிய ஆண்டவரை இஸ்ரயேல் மக்கள் நினைவிற் கொள்ளவில்லை.35 கிதியோன் என்ற எருபாகால் இஸ்ரயேலுக்குச் செய்த அனைத்து நன்மைகளுக்கும் தக்க நன்றியை அவர்கள் அவரது வீட்டுக்குக் காட்டவில்லை.