1 தங்கம் எவ்வளவு ஒளி மங்கி இருக்கிறது என்று பார். நல்ல தங்கமானது எப்படி மாறியிருக்கிறது எனப் பார். எல்லா இடங்களிலும் நகைகள் சிதறி கிடக்கின்றன. ஒவ்வொரு தெருமுனையிலும் அவை சிதறி கிடக்கின்றன.
2 சீயோனின் ஜனங்கள் மிகுதியான நன்மதிப்புள்ளவர்களாயிருந்தார்கள். அவர்கள் தங்கத்தின் எடைக்குச் சமமான எடையுள்ளவர்களாக இருந்தனர். ஆனால் இப்பொழுது பகைவர்கள் அந்த ஜனங்களை பழைய மண் பாத்திரங்களைப்போன்று கருதுகின்றனர். பகைவர்கள், குயவனால் செய்யப்பட்ட மண் பாத்திரங்களைப்போன்று இவர்களைக் கருதுகிறார்கள்.
3 காட்டுநாய்கூடத் தன் குட்டிகளுக்கு உணவூட்டுகின்றன. ஓநாய் கூடத் தன் குட்டிகள் மார்பில் பால் குடிக்கும்படிவிடும். ஆனால் எனது ஜனங்களின் குமாரத்தியோ கொடூரமானவள். அவள் வனாந்தரத்தில் வாழும் நெருப்புக் கோழியைப் போன்றவள்.
4 சிறு குழந்தைகளின் நாக்கானது, தாகத்தால் வாயின்மேல் அன்னத்தோடு ஒட்டிக் கொள்கிறது. சிறு குழந்தைகள் அப்பம் கேட்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு எவரும் அப்பம் கொடுக்கவில்லை.
5 ஒரு காலத்தில், செல்வமான உணவை உண்ட ஜனங்கள் இப்போது, வீதிகளில் மரித்துக் கிடக்கின்றனர். மென்மையான சிவப்பு ஆடைகளை அணிந்த ஜனங்கள் இப்போது குப்பைமேடுகளை பொறுக்குகிறார்கள்.
6 எனது ஜனங்களின் மகள் செய்த பாவம் மிகப்பெரியது. அவளின் பாவம் சோதோமும் கொமோராவும் செய்த பாவத்தை விடப் பெரியது. சோதோமும் கொமோராவும் திடீரென அழிக்கப்பட்டது. எந்த மனிதனின் கையும் அழிவுக்கு காரணமாயிருக்க முடியவில்லை.
7 யூதாவிலுள்ள சில புருஷர்கள் விசேஷ முறையில் தேவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டனர். அம்மனிதர் மிகவும் பரிசுத்தமானவர்கள். அவர்கள் பனியைவிட வெள்ளையானவர்கள். அவர்கள் பாலைவிட வெண்மையானவர்கள். அவர்களின் உடல்கள் பவளத்தைப்போன்று சிவந்தவை. அவர்களின் தாடிகள் இந்திர நீலக் கற்களாயிருந்தன.
8 ஆனால் இப்பொழுது, அவர்களின் முகங்கள் கரியைவிட கருத்துப்போயின. வீதியில் எவராலும் அவர்களை அடையாளம் காணமுடியவில்லை. அவர்களின் தோல் எலும்புகளோடு ஒட்டிக் கொண்டது. அவர்களின் தோல் மரத்தைப் போலுள்ளது.
9 வாளால் கொல்லப்பட்ட ஜனங்கள் பஞ்சத்தால் கொல்லப்பட்ட ஜனங்களைவிடச் சிறந்தவர்கள். பட்டினியாக இருந்த ஜனங்கள் மிக துக்கமாக இருந்தார்கள். அவர்கள் பாதிக்கப்பட்டார்கள். அவர்கள் வயலிலிருந்து எந்த உணவையும் பெறாததால் மரித்தனர்.
10 அப்பொழுது, மிக மெல்லிய இயல்புடைய பெண்களும்கூடத் தம் சொந்த குழந்தைகளைச் சமைத்தனர். அக்குழந்தைகள் தம் தாய்மார்களின் உணவாயிற்று. என் ஜனங்கள் எல்லாம் அழிக்கப்பட்டபோது இது நிகழ்ந்தது.
11 கர்த்தர் தனது கோபம் அனைத்தையும் பயன்படுத்தினார். அவர் தனது கோபம் முழுவதையும் கொட்டித் தீர்த்தார். அவர் சீயோனில் ஒரு நெருப்பை உண்டாக்கினார். அந்த நெருப்பு சீயோனை அதன் அஸ்திபாரம்வரைக்கும் எரித்துபோட்டது.
12 பூமியிலுள்ள அரசர்கள் என்ன நிகழ்ந்தது என்பதைப்பற்றி நம்ப முடியவில்லை. உலகில் உள்ள ஜனங்களால் என்ன நடந்தது என்பதை நம்ப முடியவில்லை. பகைவர்களால் எருசலேமின் நகர வாசல்கள் மூலமாக நுழைய முடியும் என்பதை அவர்களால் நம்ப முடியவில்லை.
13 எருசலேமில் உள்ள தீர்க்கதரிசிகள் செய்த பாவத்தால் இது நிகழ்ந்தது. எருசலேமில் உள்ள ஆசாரியர்கள் செய்த தீயச்செயல்களால் இது நிகழ்ந்தது. எருசலேம் நகரில் அந்த ஜனங்கள் இரத்தம் வடித்துக்கொண்டிருந்தார்கள். நல்ல ஜனங்களின் இரத்தத்தை அவர்கள் சிந்திக்கொண்டிருந்தார்கள்.
14 தீர்க்கதரிசிகளும் ஆசாரியர்களும் வீதிகளில் குருட்டு மனிதர்களைப்போன்று நடந்து திரிந்துகொண்டிருந்தார்கள். அவர்கள் இரத்தத்தினால் அழுக்காயிருந்தார்கள். அவர்களது அழுக்கால் எவரும் அவர்களுடைய ஆடையை தொடமுடியாதபடி இருந்தனர்.
15 “வெளியே போ! வெளியே போ! எங்களைத் தொடவேண்டாம்” என்று ஜனங்கள் சத்தமிட்டனர். அந்த ஜனங்கள் சுற்றி அலைந்தனர். அவர்களுக்கு வீடு இல்லை. மற்ற நாடுகளிலுள்ள ஜனங்கள், “அவர்கள் எங்களோடு வாழ்வதை நாங்கள் விரும்பவில்லை” என்றனர்.
16 கர்த்தர் தாமே அந்த ஜனங்களை அழித்தார். அதற்குப் பிறகு அவர்களை அவர் பாதுகாக்கவில்லை. அவர் ஆசாரியர்களை மதிக்கவில்லை. யூதாவிலுள்ள மூப்பர்களுடன் அவர் சிநேகம் வைக்கவில்லை.
17 நாங்கள் உதவிக்காகக் காத்திருந்து எங்கள் கண்கள் களைத்துப் பழுதாயிற்று. ஆனால் எந்த உதவியும் வரவில்லை. எங்களைக் காப்பாற்றப் போகிற ஒரு தேசத்திற்காக நாங்கள் காத்திருந்தோம். நாங்கள் பார்வை கோபுரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தோம். ஆனால் எந்தத் தேசமும் எங்களுக்கு உதவ வரவில்லை.
18 எங்கள் பகைவர்கள் எப்பொழுதும் எங்களை வேட்டையாடினார்கள். எங்களால் வீதிகளுக்குக் கூடப் போகமுடியவில்லை. எங்கள் முடிவு அருகில் நெருங்கி வந்தது. எங்கள் காலம் போய்விட்டது. எங்கள் முடிவு வந்தது!
19 எங்களைத் துரத்துகிற மனிதர்கள் வானத்தில் பறக்கும் கழுகுகளைவிட விரைவாக இருந்தனர். அம்மனிதர்கள் எங்களை மலைகளுக்குத் துரத்தினார்கள். எங்களைப் பிடிப்பதற்காக அவர்கள் வனாந்தரத்தில் மறைந்திருந்தனர்.
20 அரசன் எங்களுக்கு மிக முக்கியமானவனாக இருந்தான். எங்கள் நாசியின் சுவாசத்தைப் போல் இருந்தான். ஆனால் அரசன் அவர்களால் வலைக்குட்படுத்தப்பட்டிருந்தான். இந்த அரசன் கர்த்தராலேயே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தான். அரசனைப் பற்றி நாம், “நாங்கள் அவனது நிழலில் வாழ்வோம். அவன் எங்களை பிற தேசங்களிடமிருந்து காப்பாற்றுகிறான்” என்று சொல்லியிருந்தோம்.
21 ஏதோம் ஜனங்களே, மகிழ்ச்சியாய் இருங்கள். ஊத்ஸ் நாட்டில் வாழும் ஜனங்களே, மகிழ்ச்சியாய் இருங்கள். ஆனால் நினைத்துக்கொள், கர்த்தருடைய கோபமாகிய கிண்ணம் உங்களைச் சுற்றிலும் கூட வரும். நீ கிண்ணத்திலிருந்து (தண்டனை) குடிக்கும் போது நீ குடிகாரனாவாய். உன்னை நீயே நிர்வாணமாக்கிக்கொள்வாய்.
22 சீயோனே, உனது தண்டனை முடிந்தது. நீ மீண்டும் சிறைகைதியாகமாட்டாய். ஆனால் ஏதோம் ஜனங்களே கர்த்தர் உனது பாவங்களைத் தண்டிப்பார். அவர் உனது பாவங்களை வெளிப்படுத்துவார்.
புலம்பல் 4 ERV IRV TRV