லேவியராகமம் 13 IRV ஒப்பிடு Tamil Indian Revised Version
1 பின்னும் கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
2 ஒரு மனிதனுடைய உடலின்மேல் தொழுநோயைப்போலிருக்கிற ஒரு தடிப்பாவது, புண்ணின் தோலாவது, வெள்ளைப்படராவது உண்டானால், அவன் ஆசாரியனாகிய ஆரோனிடத்திலாகிலும், ஆசாரியர்களாகிய அவனுடைய மகன்களில் ஒருவனிடத்திலாகிலும் கொண்டுவரப்படக்கடவன்.
3 அப்பொழுது ஆசாரியன் அவனுடைய உடலின்மேல் இருக்கிற வியாதியைப் பார்க்கவேண்டும்; வியாதியுள்ள இடத்தில் முடி வெளுத்தும், வியாதியுள்ள இடம் அவனுடைய உடலின் மற்ற பகுதியைவிட அதிகமாகக் குழிந்தும் இருந்தால் அது தொழுநோய்; ஆசாரியன் அவனைப் பார்த்தபின்பு, அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்மானிக்கக்கடவன்.
4 அவனுடைய உடலின்மேல் வெள்ளைப்படர்ந்திருந்தாலும், அந்த இடம் அவனுடைய மற்றத் தோலைவிட அதிக பள்ளமாக இல்லாமலும், அதின் முடி வெள்ளையாக மாறாமலும் இருந்தால், ஆசாரியன் அவனை ஏழுநாட்கள் அடைத்துவைத்து,
5 ஏழாம் நாளில் அவனைப் பார்க்கக்கடவன்; தோலில் வியாதி அதிகமாகாமல், அவன் பார்வைக்கு வியாதி நின்றிருந்தால், ஆசாரியன் இரண்டாவதுமுறை அவனை ஏழுநாட்கள் அடைத்துவைத்து,
6 இரண்டாவதுமுறை அவனை ஏழாம் நாளில் பார்க்கக்கடவன்; தோலில் வியாதி அதிகமாகாமல் சுருங்கியிருந்தால், ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்மானிக்கக்கடவன்; அது தேமல்; அவன் தன் உடைகளைத் துவைத்துச் சுத்தமாக இருப்பானாக.
7 தன்னைச் சுத்தமுள்ளவன் என்று தீர்மானிக்கிறதற்கு அவன் தன்னை ஆசாரியனுக்குக் காண்பித்தபின்பு, தோலில் தேமல் அதிகமாகப் படர்ந்திருந்தால், அவன் மறுபடியும் ஆசாரியனுக்குத் தன்னைக் காண்பிக்கக்கடவன்.
8 அப்பொழுது தோலிலே தேமல் படர்ந்தது என்று ஆசாரியன் கண்டால், ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்மானிக்கக்கடவன்; அது தொழுநோய்.
9 ஒரு மனிதனுக்கு தொழுநோய் இருந்தால், அவனை ஆசாரியனிடத்தில் கொண்டுவரவேண்டும்.
10 அப்பொழுது ஆசாரியன் அவனைப் பார்த்து, தோலிலே வெள்ளையான தடிப்பிருந்து, அது முடியை வெண்மையாக மாறச்செய்தது என்றும், அந்தத் தடிப்புள்ள இடத்திலே புண் உண்டென்றும் கண்டால்,
11 அது அவனுடைய உடலிலுள்ள நாள்பட்ட தொழுநோய்; அவன் தீட்டுள்ளவன். ஆதலால், ஆசாரியன் அவனை அடைத்துவைக்காமல், தீட்டுள்ளவன் என்று தீர்மானிக்கக்கடவன்.
12 ஆசாரியன் பார்க்கிற இடங்களெங்கும் தோலிலே தொழுநோய் தோன்றி, அந்த வியாதியுள்ளவனுடைய தலைமுதல் கால்வரை அது உடல்முழுவதையும் மூடியிருக்கக்கண்டால்,
13 அப்பொழுது ஆசாரியன் பார்த்து, தொழுநோய் அவன் உடல் முழுவதையும் மூடியிருந்தால், அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்மானிக்கக்கடவன்; அவன் உடல்முழுவதும் வெண்மையாகிவிட்டதால், அவன் சுத்தமுள்ளவன்.
14 ஆனாலும், புண் அவனில் காணப்பட்டால், அவன் தீட்டுள்ளவன்.
15 ஆகையால், புண்ணை ஆசாரியன் பார்க்கும்போது, அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்மானிக்கக்கடவன்; புண் தீட்டுள்ளது; அது தொழுநோய்.
16 அல்லது புண் மாறி வெண்மையானால், அவன் ஆசாரியனிடத்திற்கு வரவேண்டும்.
17 ஆசாரியன் அவனைப் பார்த்து, வியாதியுள்ள இடம் வெண்மையாக மாறினதென்று கண்டால், ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்மானிக்கக்கடவன்; அவன் சுத்தமுள்ளவன்.
18 உடலின்மேல் புண் உண்டாயிருந்து ஆறிப்போய்,
19 அந்த இடத்திலே ஒரு வெள்ளைத்தடிப்பாவது சிவப்புக் கலந்த ஒரு வெள்ளைப்படராவது உண்டானால், அதை ஆசாரியனுக்குக் காண்பிக்கவேண்டும்.
20 ஆசாரியன் அதைப் பார்த்து, அந்த இடம் மற்ற தோலைவிட குழிந்திருக்கவும், அதின் முடி வெள்ளையாக மாறியிருக்கவும் கண்டால், ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்மானிக்கவேண்டும்; அது புண்ணில் உண்டான தொழுநோய்.
21 ஆசாரியன் அதைப் பார்த்து, அதில் வெள்ளைமுடி இல்லை என்றும், அது மற்ற தோலைவிட குழிந்திராமல் சுருங்கியிருக்கிறது என்றும் கண்டானாகில், அவனை ஏழுநாட்கள் அடைத்துவைத்து,
22 அது தோலில் அதிகமாகப் படர்ந்திருக்கக்கண்டால், அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்மானிக்கக்கடவன்; அது தொழுநோய்தான்.
23 அந்த வெள்ளைப்படர் அதிகமாகாமல், அந்த அளவில் நின்றிருக்குமானால், அது புண்ணின் தழும்பாயிருக்கும்; ஆகையால், ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்மானிக்கக்கடவன்.
24 ஒருவனுடைய உடலின்மேல் நெருப்புப்பட்டதினாலே வெந்து, அந்த தீக்காயம் ஆறிப்போன இடத்திலே சிவப்பான படராவது வெண்மையான படராவது உண்டானால்,
25 ஆசாரியன் அதைப் பார்க்கக்கடவன்; அந்தப் படரிலே முடி வெண்மையாக மாறி, அந்த இடம் மற்ற தோலைவிட பள்ளமாக இருந்தால், அது தீக்காயத்தினால் உண்டான தொழுநோய்; ஆகையால், ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்மானிக்கக்கடவன்; அது தொழுநோய்தான்.
26 ஆசாரியன் அதைப் பார்க்கிறபோது, படரிலே வெள்ளைமுடி இல்லை என்றும், அது மற்ற தோலைவிட குழிந்திராமல், சுருங்கியிருக்கிறது என்றும் கண்டானாகில், அவனை ஏழுநாட்கள் அடைத்துவைத்து,
27 ஏழாம்நாளில் அவனைப் பார்க்கக்கடவன்; அது தோலில் அதிகமாகப் படர்ந்திருந்தால், ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்மானிக்கக்கடவன்; அது தொழுநோய்.
28 படரானது தோலில் அதிகமாகாமல், அந்த அளவில் நின்று சுருங்கியிருந்ததானால், அது தீக்காயத்தினால் உண்டான தழும்பு; ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்மானிக்கக்கடவன்; அது சூட்டினால் வந்த தீக்காயம்.
29 ஆணுக்காகிலும் பெண்ணுக்காகிலும் தலையிலாவது தாடியிலாவது ஒரு சொறி உண்டானால்,
30 ஆசாரியன் அதைப் பார்த்து, அந்த இடம் மற்ற தோலைவிட பள்ளமும் அதிலே முடி பொன் நிறமும் மிருதுவாகவும் இருக்கக்கண்டால், ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்மானிக்கக்கடவன்; அது தலையிலும் தாடியிலும் உண்டாகிற சொறிதொழுநோய்.
31 ஆசாரியன் அந்தச் சொறிதொழுநோயைப் பார்க்கும்போது, அந்த இடம் மற்ற தோலைவிட பள்ளமாக இல்லாமலும், அதிலே கறுத்தமுடி இல்லாமலும் இருக்கக்கண்டால், ஆசாரியன் அவனை ஏழுநாட்கள் அடைத்துவைத்து,
32 ஏழாம்நாளில் ஆசாரியன் அதைப் பார்ப்பானாக; அந்தச் சொறி படராமலும், அதிலே பொன்நிறமுடி இல்லாமலும், அந்த இடம் மற்றத் தோலைவிட பள்ளமில்லாமலும் இருந்தால்,
33 அந்தச் சொறியுள்ள இடம்தவிர, மற்ற யாவையும் அவன் சிரைத்துக்கொள்ளவேண்டும்; பின்பு, ஆசாரியன் இரண்டாவதுமுறை அவனை ஏழுநாட்கள் அடைத்துவைத்து,
34 ஏழாம்நாளில் அதைப் பார்க்கக்கடவன்; சொறி, தோலில் பரவாமலும், அந்த இடம் மற்றத் தோலைவிட பள்ளமில்லாமலும் இருந்தால், ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்மானிக்கக்கடவன்; அவன் தன் உடைகளைத் துவைத்தபின் சுத்தமாக இருப்பான்.
35 அவன் சுத்தமுள்ளவன் என்று தீர்க்கப்பட்டபின்பு, அந்தச் சொறி, தோலில் இடங்கொண்டதானால்,
36 ஆசாரியன் அவனைப் பார்க்கக்கடவன்; சொறி தோலில் பரவியிருந்தால், அப்பொழுது முடி பொன்நிறமா அல்லவா என்று ஆசாரியன் விசாரிக்க வேண்டியதில்லை; அவன் தீட்டுள்ளவனே.
37 அவன் பார்வைக்கு அந்தச் சொறி நீங்கி, அதில் கறுத்தமுடி முளைத்ததேயாகில், சொறி குணமாகிவிட்டது; அவன் சுத்தமுள்ளவன்; ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்மானிக்கக்கடவன்.
38 ஒரு ஆணுக்காகிலும் பெண்ணுக்காகிலும் அவர்கள் உடலின்மேல் வெள்ளைப் புள்ளிகள் உண்டாயிருந்தால்,
39 ஆசாரியன் பார்க்கக்கடவன்; அவர்களுடைய உடலிலே மங்கின வெள்ளைப் புள்ளிகள் இருந்தால், அது தோலில் எழும்புகிற வெள்ளைத்தேமல்; அவர்கள் சுத்தமுள்ளவர்கள்.
40 ஒருவனுடைய தலைமுடி உதிர்ந்து, அவன் மொட்டையனானாலும், அவன் சுத்தமாக இருக்கிறான்.
41 அவனுடைய முன்னந்தலை முடி உதிர்ந்தால், அவன் அரைமொட்டையன்; அவனும் சுத்தமாக இருக்கிறான்.
42 மொட்டைத்தலையிலாவது அரைமொட்டைத்தலையிலாவது சிவப்புக்கலந்த வெண்மையான படர் உண்டானால், அது அதில் ஏற்படுகிற தொழுநோய்.
43 ஆசாரியன் அவனைப் பார்க்கக்கடவன்; அவனுடைய மொட்டைத்தலையிலாவது அரைமொட்டைத்தலையிலாவது, மற்ற அங்கங்களின்மேல் உண்டாகும் குஷ்டத்தைப்போல, சிவப்புக்கலந்த வெண்மையான தடிப்பு இருக்கக்கண்டால்,
44 அவன் தொழுநோயாளி, அவன் தீட்டுள்ளவன்; ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்மானிக்கக்கடவன்; அவன் வியாதி அவன் தலையிலே இருக்கிறது.
45 அந்த வியாதி உண்டாயிருக்கிற தொழுநோயாளி உடை கிழிந்தவனாகவும், தன் தலையை மூடாதவனாகவும் இருந்து, அவன் தன் தாடியை மூடிக்கொண்டு, தீட்டு, தீட்டு என்று சத்தமிடவேண்டும்.
46 அந்த வியாதி அவனில் இருக்கும் நாட்கள்வரை தீட்டுள்ளவனாக கருதப்படக்கடவன்; அவன் தீட்டுள்ளவனே; ஆகையால், அவன் தனியே குடியிருக்கவேண்டும்; அவனுடைய குடியிருப்பு, முகாமிற்கு வெளியே இருப்பதாக.
47 ஆட்டுரோம உடையிலாவது, பஞ்சுநூல் உடையிலாவது,
48 பஞ்சுநூல் அல்லது ஆட்டுரோமத்தினாலான நெய்யப்பட்ட, பின்னப்பட்ட பொருட்களிலாவது, ஒரு தோலிலாவது, தோலினால் செய்யப்பட்ட எந்தவித பொருளிலாவது பூசணம் தோன்றி,
49 உடையிலாவது, தோலிலாவது, நெய்யப்பட்ட, பின்னப்பட்ட பொருட்களிலாவது, தோலினால் செய்த எந்தவித பொருளிலாவது பூசணம் பச்சையாகவோ சிவப்பாகவோ காணப்பட்டால் அது குஷ்டமாக இருக்கும்; அதை ஆசாரியனுக்குக் காண்பிக்கவேண்டும்.
50 ஆசாரியன் அதைப் பார்த்து, ஏழுநாட்கள் அடைத்துவைத்து,
51 ஏழாம் நாளிலே அதைப் பார்க்கக்கடவன்; உடையிலாவது, நெய்யப்பட்ட, பின்னப்பட்ட பொருட்களிலாவது, தோலிலாவது, தோலினால் செய்யப்பட்ட எந்தவித பொருளிலாவது அது பரவியிருந்தால், அது அரிக்கிற தொழுநோய்; அது தீட்டாயிருக்கும்.
52 அந்த பூசணம் இருக்கிற ஆட்டுரோமத்தினாலும் பஞ்சுநூலினாலும் செய்யப்பட்ட உடையையும், நெய்யப்பட்ட மற்றும் பின்னப்பட்டவைகளையும், தோலினால் செய்யப்பட்ட எந்தவித பொருளையும் சுட்டெரிக்கக்கடவன்; அது அரிக்கிற தொழுநோய்; ஆகையால் நெருப்பில் சுட்டெரிக்கப்படவேண்டும்.
53 உடையின் நெய்யப்பட்ட, பின்னப்பட்ட பொருட்களிலாவது, தோலினால் செய்யப்பட்ட எந்தவித பொருளிலாவது, அந்தப் பூசணம் பரவவில்லை என்று ஆசாரியன் கண்டால்,
54 அப்பொழுது ஆசாரியன் அதைக் கழுவச்சொல்லி, இரண்டாவதுமுறை ஏழுநாட்கள் அடைத்துவைத்து,
55 அது கழுவப்பட்டபின்பு, அதைப் பார்க்கக்கடவன்; அந்தப் பூசணம் பரவாமல் இருந்தாலும், அது நிறம் மாறாததாக இருந்தால் தீட்டாயிருக்கும்; தீயில் அதை எரித்துவிடவேண்டும்; அது அந்த உடையின் உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் ஆழமாக அரிக்கும்.
56 கழுவப்பட்டபின்பு அது குறைந்ததென்று ஆசாரியன் கண்டானேயாகில், அதை உடையிலாவது, தோலிலாவது, நெய்யப்பட்ட மற்றும் பின்னப்பட்டவைகளிலாவது இல்லாதபடி எடுத்துப்போடவேண்டும்.
57 அது இன்னும் உடையிலாவது, நெய்யப்பட்ட மற்றும் பின்னப்பட்டவைகளிலாவது, தோலினால் செய்த எந்தவித பொருளிலாவது காணப்பட்டால், அது படருகிற பூசணம்; ஆகையினால் அது உள்ளதை தீயில் எரித்துவிடவேண்டும்.
58 ஆடையின் பாவாவது, ஊடையாவது, தோலினால் செய்த எந்தவித பொருளாவது கழுவப்பட்டபின்பு, அந்தப் பூசணம் அதை விட்டுப் போயிற்றேயானால், இரண்டாவதுமுறை கழுவப்படவேண்டும்; அப்பொழுது சுத்தமாக இருக்கும்.
59 ஆட்டுரோமமாகிலும் பஞ்சுநூலாலாகிலும் நெய்த உடையையாவது, பாவையாவது, ஊடையையாவது, தோலினால் செய்த எந்தவித பொருளையாவது, சுத்தமென்றாவது தீட்டென்றாவது தீர்மானிக்கிறதற்கு, அதினுடைய தொழுநோய் தோஷத்திற்குரிய விதிமுறைகள் இதுவே என்றார்.