லேவியராகமம் 19 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 ஆண்டவர் மோசேயிடம் கூறியது:2 “நீ இஸ்ரயேல் மக்களிடம் கூறவேண்டியது; தூயோராய் இருங்கள். ஏனெனில், உங்கள் கடவுளும் ஆண்டவருமாகிய நான் தூயவர்!3 நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் தாய் தந்தைக்கு அஞ்சுங்கள். என் ஓய்வு நாளைக் கடைப்பிடியுங்கள். நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்!4 சிலைகள் பக்கம் திரும்ப வேண்டாம். உங்களுக்கெனத் தெய்வப் படிமங்களை வார்த்துக் கொள்ள வேண்டாம். நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்!⒫5 ஆண்டவருக்கு நல்லுறவுப்பலி செலுத்தினால் அதை மனமுவந்து செய்யுங்கள்.6 நீங்கள் பலி செலுத்தும் நாளன்றும், மறுநாளும் உண்டு, மூன்றாம் நாள் எஞ்சியதைச் சுட்டெரியுங்கள்.7 மூன்றாம் நாளில் எஞ்சியதை உண்டால், அது திகட்டும், விருப்பமாய் இராது.8 அவ்வாறு உண்போர் தம்பழியைத் தாமே சுமப்பர். ஏனெனில், அவர்கள் ஆண்டவரின் பார்வையில் தூய்மையானதை இழிவுக்குள்ளாக்கினர். அந்த மனிதர் அவர்கள் இனத்தில் இராதபடி அழிக்கப்படுவர்.9 உங்கள் நாட்டில் நீங்கள் பயிரிட்டதை அறுவடை செய்யும்போது, வரப்பு ஓரக் கதிரை அறுக்கவேண்டாம். சிந்திக் கிடக்கும் கதிரையும் பொறுக்க வேண்டாம்;10 திராட்சைத் தோட்டத்தில் பின்னறுப்பு வேண்டாம்; சிந்திக் கிடக்கும் பழங்களைப் பொறுக்க வேண்டாம். அவற்றை எளியோருக்கும் அந்நியருக்கும் விட்டுவிட வேண்டும். நானே உங்கள் ஆண்டவராகிய கடவுள்!11 களவு செய்யாமலும், பொய் சொல்லாமலும் ஒருவரை ஒருவர் வஞ்சியாமலும்,12 என் பெயரால் பொய்யாணையிட்டு, உங்கள் கடவுளின் பெயருக்கு இழுக்கு ஏற்படுத்தாமலும் இருங்கள். நான் ஆண்டவர்!13 அடுத்திருப்பவரை ஒடுக்கவோ அவருக்குரியதைக் கொள்ளையிடவோ வேண்டாம்; வேலையாளின் கூலி விடியும்வரை உன்னிடம் இருத்தல் ஆகாது.14 காது கேளாதோரைச் சபிக்காதே! பார்வையற்றோரை இடறச் செய்யாதே! உன் கடவுளுக்கு அஞ்சி நட. நான் ஆண்டவர்!15 தீர்ப்பிடுகையில், அநீதி இழைக்காதே. சிறியோர் பெரியோர் என முகம் பாராது, உனக்கு அடுத்து வாழ்வோர்க்கு நேர்மையுடன் நீதி வழங்கு.16 உன் இனத்தாருக்குள் புறங்கூறித் திரியாதே. உனக்கு அடுத்து வாழ்பவரின் குருதிப் பழிக்குக் காரணம் ஆகாதே! நான் ஆண்டவர்!17 உன் சகோதரரை உன் உள்ளத்தில் பகைக்காதே! உனக்கடுத்தவர் பாவம் செய்யாதபடி அவரைக் கடிந்து கொள்.18 பழிக்குப் பழியென உன் இனத்தார்மேல் காழ்ப்புக் கொள்ளாதே. உன் மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக! நான் ஆண்டவர்!19 என் கட்டளைகளைக் கடைப்பிடி. உன் கால்நடைகளை வேறுவகை விலங்குகளோடு பொலியவிடாதே. உன் வயலில் இருவகைத் தானியங்களை ஒரே நேரத்தில் விதைக்காதே! இருவகை நூலுள்ள உடை அணியாதே!20 ஒருவனுக்கு மண ஒப்பந்தமான, ஆனால் பிணை கொடுத்து விடுவிக்கப்படாத அடிமைப் பெண்ணோடு வேறொருவன் உடலுறவு கொண்டால் அவர்கள் தண்டிக்கப்படவேண்டும்; கொல்லப்பட வேண்டாம்; அவள் தன்னுரிமை பெற்றவளல்ல.21 அவன் தன் குற்றப்பழி நீக்கும் பலியாக ஆட்டுக்கிடாய் ஒன்றை ஆண்டவருக்குச் சந்திப்புக் கூடார வாயிலுக்குள் கொண்டுவர வேண்டும்.22 அதனால் அவன் செய்த குற்றத்திற்காக, ஆண்டவர் திருமுன் குரு கறைநீக்கம் செய்வார். அப்போது அவன் செய்த பாவம் மன்னிக்கப்படும்.⒫23 நீங்கள் இந்நாட்டில் எவ்விதக் கனிமரங்களை நட்டாலும், அவற்றின் கனி துண்டிக்கப்பட வேண்டும்; அதாவது மூன்றாண்டு உண்ணப்படாமல் விலக்கப்பட்டிருக்கும்.24 நான்காம் ஆண்டு அவற்றின் கனி முழுவதும் ஆண்டவருக்குப் படைக்கப்பட்டுத் தூய்மையாகும்.25 ஐந்தாம் ஆண்டில் அவற்றின் கனியை உண்ணலாம். அதுமுதல் அவை உங்களுக்குப் பலன் அளித்துவரும். நான் உங்கள் கடவுளாகிய ஆண்டவர்!26 எந்த இறைச்சியையும் குருதியோடு உண்ண வேண்டாம்; குறி பார்க்க வேண்டாம்; நாள் பார்க்க வேண்டாம்.27 தலைமுடியைத் திருத்திக் கொள்ள வேண்டாம்; தாடியின் ஓரங்களைச் சிரைக்க வேண்டாம்.28 செத்தவனுக்காக உடலைக் கீறிக்கொள்ள வேண்டாம்; பச்சை குத்திக்கொள்ளவும் வேண்டாம்; நானே ஆண்டவர்!29 நாட்டில் விபசாரம் வளர்ந்து, ஒழுக்கக்கேடு பெருகாதபடி, உன் மகளை இழிவுபடுத்தி வேசித்தனம் பண்ண அனுமதியாதே!30 ஓய்வு நாள்களைக் கடைப்பிடித்து, என் தூயகத்தைக் குறித்து அச்சம் கொள்ளுங்கள்; நானே ஆண்டவர்!31 பில்லி சூனியம் பார்க்க வேண்டாம்; குறிகாரரை அணுகவேண்டாம்; அவர்களைத் தேடி அவர்களால் தீட்டாக வேண்டாம். நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்!32 நரை திரண்டவருக்குமுன் எழுந்து நில். முதிர்ந்தவர் முகத்தை மதித்து நட; உன் கடவுளுக்கு அஞ்சி வாழ்; நானே ஆண்டவர்!33 உங்கள் நாட்டில் தங்கியிருக்கும் அந்நியருக்குத் தீங்கிழைக்காதே!34 உங்களிடம் தங்கும் அந்நியர் உங்கள் நாட்டில் பிறந்தவரைப் போல் இருக்க வேண்டும். உங்கள் மீது நீங்கள் அன்புகூர்வதுபோல் அவர் மீதும் அன்புகூருங்கள். ஏனெனில், எகிப்தில் நீங்களும் அந்நியர்களாய் இருந்தீர்கள்; நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்!35 நீட்டல், நிறுத்தல், கொள்ளல் ஆகிய அளவுகளில் நேர்மையைக் கடைப்பிடியுங்கள்.36 தராசும், படிக்கல்லும், மரக்காலும் அளவு சரியான படியும் உங்களிடம் இருக்கட்டும்! உங்களை எகிப்து நாட்டினின்று வெளிக்கொணர்ந்த உங்கள் கடவுளாகிய ஆண்டவர் நானே!37 நீங்கள் என் எல்லா நியமங்களையும் கட்டளைகளையும் கடைப்பிடித்து ஒழுகுங்கள்; நானே ஆண்டவர்!