லேவியராகமம் 25 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 ஆண்டவர் சீனாய் மலையில் மோசேயிடம் கூறியது:2 நீ இஸ்ரயேல் மக்களிடம் கூறவேண்டியது; நான் உங்களுக்கு வழங்கும் நாட்டில் நீங்கள் வந்து சேரும்போது, நாடு ஆண்டவருக்கென்று ஓய்வு நாளைக் கொண்டாட வேண்டும்.3 ஆறு ஆண்டுகள் வயலைப் பயிரிட்டுத் திராட்சைக் கொடிகளைக் கிளைநறுக்கி அவற்றின் பலனைச் சேர்ப்பாய்.4 ஏழாம் ஆண்டு ஆண்டவருக்காக ஓய்ந்திருக்கும் ஆண்டு, நிலத்துக்கும் ஓய்வு வேண்டும். வயலைப் பயிரிடாமலும், திராட்சைக் கொடிகளைக் கிளைநறுக்காமலும் இருங்கள்.5 தானாய் விளைந்த பயிரை அறுக்காமலும், கிளை நறுக்காத திராட்சைச் செடிகளிலிருந்து பழங்களைச் சேர்க்காமலும் இருக்க வேண்டும். அது நிலத்துக்கு ஓய்வு ஆண்டு.6 உனக்கும் உன் பணியாளனுக்கும், உன் வேலைக்காரிக்கும், உன் கூலியாளுக்கும், உன்னிடையே தங்கியிருக்கும் அந்நியனுக்கும் ஓய்வு நிலப் பயிர்விளைச்சல் உணவாயிருக்கட்டும்.7 வீட்டு விலங்குகளுக்கும் உன் நாட்டிலுள்ள காட்டு விலங்குகளுக்கும் அவையே உணவு.8 தொடர்ந்து வரும் ஏழு ஓய்வு ஆண்டுகளை ஏழேழு ஆண்டுகளாக ஏழுமுறை எண்ணிக்கையிட்டு அவை நாற்பத்தொன்பது ஆண்டுகள் ஆகும்.9 ஏழாம் மாதம் பத்தாம் நாள் எக்காள ஒலி எழட்டும்; பாவக் கழுவாய் நிறைவேற்றும் அந்த நாளில் உங்கள் நாடெங்கும் எக்காளம் முழங்கச்செய்யுங்கள்.10 ஐம்பதாம் ஆண்டைத் தூயதாக்கி, நாட்டில் வாழ்வோருக்கெல்லாம் தன்னுரிமை அறிவியுங்கள். அது உங்கள் யூபிலி ஆண்டு அந்த ஆண்டில் நீங்கள் உங்கள் நிலப்பகுதிக்கும் உங்கள் இனத்தாரிடமும் திரும்ப வேண்டும்.11 ஐம்பதாம் ஆண்டு உங்களுக்கு யூபிலி ஆண்டு; அந்த ஆண்டு பயிரிட வேண்டாம்; தானாய் விளைந்ததை அறுக்க வேண்டாம்; கிளைநறுக்காத திராட்சைச் செடியினின்று கனி சேர்க்கவும் வேண்டாம்.12 ஏனெனில், அந்த ஆண்டு யூபிலி ஆண்டு; அது உங்களுக்குத் தூயது. நிலத்தினின்று அவ்வப்போது கிடைக்கும் பலனை உண்ணுங்கள்.13 அந்த யூபிலி ஆண்டில் அவரவர் தம் காணியாட்சிக்குத் திரும்பிச் செல்லவேண்டும்.14 உங்களுக்குள் ஒருவனுக்கு நிலத்தை விற்கவோ அவனிடத்தில் வாங்கவோ செய்யும்பொழுது ஒருவரை ஒருவர் ஏமாற்றாதிருங்கள்.15 யூபிலி ஆண்டிற்குப் பின், ஆண்டுகளைக் கணக்கிட்டு அவற்றின் எண்ணிக்கைக்கு ஏற்ப வாங்கலாம். பயன்படுத்தும் ஆண்டுகளுக்கு ஏற்ப அவன் அதை உனக்கு விற்கவேண்டும்.16 பலனைப் பயன்படுத்தும் ஆண்டுகள் எண்ணிக்கை மிகுந்திருந்தால் விலையை உயர்த்த வேண்டும்; குறைந்திருந்தால் விலையைக் குறைக்க வேண்டும். ஏனெனில், பயனுள்ள ஆண்டுகளின் எண்ணிக்கைக்கு ஏற்பவே அவன் விற்கிறான்.17 உங்களுள் எவரும் தம் இனத்தாரை ஏமாற்றலாகாது. கடவுளுக்கு அஞ்சி நடங்கள்! ஏனெனில், நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்!⒫18 கட்டளைப்படி நடங்கள்; என் நியமங்களைக் கடைப்பிடிப்பதில் கவனமாயிருங்கள், அப்போது நாட்டில் நலமாய்க் குடியிருப்பீர்கள்.19 நிலமும் பலனைத் தருவதனால் வயிறார உண்டு பாதுகாப்புடன் நாட்டில் வாழ்வீர்கள்.20 விதைக்காமலும் அறுவடை செய்யாமலும் இருந்தால் ஏழாம் ஆண்டு எதனை உண்போம்?” என்று கேட்பீர்களானால்,21 ஆறாம் ஆண்டு, நிலம் மூன்றாண்டுக்குரிய விளைச்சலைக் கொடுக்குமாறு என் ஆசியை அனுப்புவேன்.22 எட்டாம் ஆண்டு விதை விதைத்து, ஒன்பதாம் ஆண்டு விளைச்சல் கிடைக்கும்வரை பழைய விளைச்சலையே உண்பீர்கள்.23 நிலத்தை அறுதியாய் விற்றுவிட வேண்டாம். ஏனெனில், நிலம் என்னுடையது. நீங்களோ என்னைப் பொறுத்தவரையில் அந்நியரும் இரவற்குடிகளுமே.24 நீங்கள் காணியாட்சியாய்க் கொண்டுள்ள நாடு எங்கும் வாய்ப்பு வழங்கப்படவேண்டும்.25 உன் சகோதரருள் ஒருவன் ஏழ்மைக்கு உட்பட்டு, அவனுடைய சொத்தில் எதையேனும் விற்றால், அவனுடைய முறைஉறவினனான மீட்பன் வந்து, தன் சகோதரன் விற்றதை மீட்கட்டும்.26 மீட்க மீட்பன் இல்லாதவனுக்கு பின்னர் மீட்க வாய்ப்பும் வசதியும் ஏற்பட்டால் கீழ்க்கண்டவாறு அவன் மீட்பானாக;27 விற்ற ஆண்டிலிருந்து கணக்கிட்டு, அதற்கான தொகையைத் தள்ளி, வாங்கினவனுக்கு மீதித் தொகையைக் கொடுத்து, மீண்டும் தன் நிலத்திற்குத் திரும்பி வருவான்.28 திரும்பக் கொடுக்க வாய்ப்பில்லாமற்போனால், யூபிலி ஆண்டு மட்டும், அது வாங்கினவனிடமே இருக்கும். யூபிலி ஆண்டிலோ அவன் தன் நிலபுலங்களுக்குத் திரும்பிவர அவனுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.29 அரண்சூழ் நகரில் குடியிருக்கத்தக்க வீட்டைவிற்றால், விற்றபிறகு மீட்பதற்கான கெடு ஓராண்டு; அதற்குள் மீட்டுக் கொள்ள வேண்டும்.30 ஓராண்டிற்குள் மீட்கப்படவில்லையெனில், அரண்சூழ் நகரில் உள்ள அந்த வீடு, வாங்கியவனுக்கும் அவன் வழிமரபினருக்கும் என்றென்றும் உரிமை ஆகிவிடும். யூபிலி ஆண்டில் அதைத் திருப்ப முடியாது.31 அரணற்ற கிராமத்து வீடுகளோ நாட்டின் வயல் வெளிக்கு ஒப்பானவை. மீட்டெடுக்கலாம்; அல்லது யூபிலி ஆண்டில் விற்றவனுக்கே திரும்பக் கிடைக்கும்.32 லேவியரின் உடைமையான நகர வீடுகளை மீட்க என்றைக்கும் அவர்களுக்கு உரிமை உண்டு.33 இஸ்ரயேல் மக்கள் நடுவில் இருக்கும் லேவியரின் நகர இல்லங்கள் அவர்களின் உரிமை; அந்த உடைமைகள் மீட்கப்படத்தக்கன. அவர்களுக்குச் சொந்தமான விற்கப்பட்ட எந்த வீடும் யூபிலி ஆண்டில் திருப்பித் தரப்படும்.34 நகர்களின் பொதுநிலமான வயல்வெளிகளை விற்கலாகாது. ஏனெனில், அது அவர்களுக்கு நிலையான உடைமையாகும்.35 உன் சகோதரர்கள் ஏழ்மைப்பட்டு இளைத்துப்போனால், அவர்களுக்கு உதவு. அவர்கள் அந்நியர்போலும் விருந்தினர் போலும் உன்னோடு வாழட்டும்.36 அவர்களிடமிருந்து வட்டியோ இலாபமோ பெறவேண்டாம். உன் கடவுளுக்கு அஞ்சி நட; உன் சகோதரர்கள் உன்னோடு வாழட்டும்.37 அவர்களுக்கு உன் பணத்தை வட்டிக்குக் கொடாதே; உணவை அதிக விலைக்கு விற்காதே.38 உங்களை எகிப்து நாட்டிலிருந்து அழைத்து வந்து, உங்கள் கடவுளாய் இருக்கும்படி கானான் நாட்டைக் கொடுத்த நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்!39 உன் சகோதரர் ஏழ்மைப்பட்டு உனக்கு விலையாகிப் போனால் அவர்களை அடிமைபோல் நடத்த வேண்டாம்.40 அவர் கூலியாள்போலும் விருந்தினர்போலும், உன்னோடு தங்கி யூபிலி ஆண்டுவரை உன்னிடத்தில் பணியாற்றட்டும்.41 பின்னர், அவரும் அவர்தம் பிள்ளைகளும் விடுதலையாகித் தங்கள் இனத்திற்கும் மூதாதையரின் நிலபுலங்களிடத்திற்கும் திரும்பிச் செல்லட்டும்.42 எகிப்திலிருந்து அழைத்துவந்த இஸ்ரயேலராகிய அவர்கள் என் வேலைக்காரர்கள்; அவர்கள் அடிமையாக விற்கப்படலாகாது.43 உன் சகோதரரைக் கொடுமையாய் நடத்தாதே; உன் கடவுளுக்கு அஞ்சி நட.44 உன் அடிமைகள், ஆணும் பெண்ணும், உன்னைச் சுற்றிலும் உள்ள வேற்றினத்தவராய் இருக்கட்டும்; வேற்றினத்தாரிடமிருந்து நீ அடிமைகளை விலைக்கு வாங்கலாம்.45 உங்களிடம் தற்காலிகமாய்த் தங்குகிற அந்நியரின் பிள்ளைகளிலும், உங்கள் நாட்டில் உங்களிடையே பிறந்திருக்கிற அவர்களுடைய இனத்தவரிலும் உங்களுக்கு அடிமைகளை வாங்கி, உங்களுக்கு உடைமையாக்கிக் கொள்ளலாம்.46 அவ்வடிமைகளை, உங்களுக்குப் பின்னர் உங்கள் பிள்ளைகளுக்கும் பிறப்புரிமையாக்கி, என்றும் உரிமை கொண்டாடலாம். ஆனால், இஸ்ரயேல் மக்களாகிய உங்கள் சகோதரரைப் பொறுத்தமட்டில் எவரும் மற்றவரைக் கொடுமையாய் நடத்த வேண்டாம்.47 அந்நியரோ உன்னிடம் தற்காலிகமாகத் தங்கியிருப்பவரோ, வசதியாக வாழும்போது, அவர்களிடம் உள்ள உன் சகோதரர்கள் ஏழையாகி, அவர்களுக்கோ அவர்களின் இனத்திற்கோ விலையாகிப் போனால்,48 விலையாகிப்போன அவர்கள் மீட்கப்பட வேண்டும்; அவர்கள் உறவினருள் ஒருவர் அவர்களை மீட்கட்டும்.49 அவர்களுடைய தந்தையின் சகோதரனோ, அவரின் மகனோ, அவர்களின் முறை உறவினனோ அவர்களை மீட்கட்டும்; அல்லது வசதி ஏற்படும்போது அவர்கள் தம்மைத் தாமே மீட்டுக் கொள்ளட்டும்.50 அவர்களது பணிக்காலத்தை அவர்களும் அவர்களை வாங்கினவர்களும் அவர்கள் விலைப்பட்டுப்போன ஆண்டிலிருந்து யூபிலி ஆண்டுவரை கணக்கிட வேண்டும். அவர்கள் விடுதலை ஆவதற்கான விலை, கூலிக்காரன் ஒருவனுக்கு அந்த ஆண்டுகளில் கொடுக்கப்படும் கூலியைப் போலக் கணக்கிடப்படவேண்டும்.51 ஆண்டுகள் மிகுதியாய் இருந்தால், மிகுதியாகத் திருப்பிக் கொடுக்க வேண்டும்.52 யூபிலிக்கு சில ஆண்டுகள் இருந்தால், அவற்றைக் கணக்கிட்டு அவற்றிற்கு ஏற்பச் செலுத்த வேண்டும்.53 ஆண்டுதோறும் கூலிக்கு அமர்த்தப்பட்டவனைப் போல அவர்களைக் கருத வேண்டும். விலைக்கு வாங்கினவர்கள் அவர்களைக் கொடுமையாய் நடத்த இடம் கொடாதே.54 இவ்விதமாய் அவர்கள் மீட்கப்படாமல் போனால், யூபிலி ஆண்டில் அவர்களும் அவர்கள் பிள்ளைகளும் விடுதலை பெறுவர்.55 ஏனெனில், இஸ்ரயேல் மக்கள் என் வேலைக்காரர்கள்; எகிப்திலிருந்து நான் அழைத்து வந்த என் வேலைக்காரர்கள். நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்!லேவியராகமம் 25 ERV IRV TRV