மாற்கு 8 ERV ஒப்பிடு Tamil Easy Reading Version
1 மற்றொருமுறை இயேசுவுடன் ஏராளமான மக்கள் இருந்தனர். மக்களுக்கு உண்ண உணவில்லாமல் இருந்தது. ஆகையால் இயேசு தன்னிடம் சீஷர்களை அழைத்தார்.
2 “நான் இம்மக்களுக்காகப் பெரிதும் வருந்துகிறேன். அவர்கள் என்னோடு மூன்று நாட்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு இப்போது உணவில்லை.
3 அவர்களைப் பசியோடு வீட்டுக்கு அனுப்ப நான் விரும்பவில்லை. அவர்கள் உண்ணாமல் போனால், வழியில் சோர்வடைந்து விடலாம். சிலர் இங்கிருந்து வெகு தூரத்துக்குச் செல்ல வேண்டும்” என்றார்.
4 இயேசுவின் சீஷர்களோ, “நாம் எந்த ஊருக்கும் அருகில் இல்லை. இங்குள்ள அனைவருக்கும் உணவளிக்க நாம் எங்கிருந்து உணவுகளைப் பெறுவது?” என்று கேட்டனர்.
5 “உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கின்றன?” என்று இயேசு கேட்டார். “எங்களிடம் ஏழு அப்பங்கள் மட்டுமே உள்ளன” என்று சீஷர்கள் கூறினர்.
6 இயேசு அந்த மக்களைத் தரையில் உட்காரச் சொன்னர். பிறகு அவர் ஏழு அப்பங்களையும் எடுத்து தேவனுக்கு நன்றி சொன்னார். இயேசு அப்பங்களைப் பங்குவைத்து சீஷர்களிடம் கொடுத்தார். அவற்றை மக்களுக்குக் கொடுக்குமாறு இயேசு கேட்டுக்கொண்டார். சீஷர்கள் அவர் சொன்னபடி செய்தனர்.
7 அச்சீஷர்கள் சில மீன்களையும் வைத்திருந்தனர். அவற்றையும் இயேசு வாங்கிப் பிரார்த்தனை செய்து, மக்களுக்குக் கொடுக்கும்படி சீஷர்களிடம் கூறினார்.
8 அனைத்து மக்களும் திருப்தியாக உண்டனர். பிறகு மீதியான உணவுப் பொருட்களை ஏழு கூடைகள் நிறையச் சேர்த்தனர்.
9 அங்கே ஏறக்குறைய 4,000 ஆண்கள் இருந்தனர். அவர்கள் உண்ட பின்னர், வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.
10 பிறகு இயேசு ஒரு படகில் ஏறி தன் சீஷர்களோடு தல்மனூத்தா பகுதிக்குச் சென்றார்.
11 பரிசேயர்கள் இயேசுவிடம் வந்து சில கேள்விகள் கேட்டனர். அவர்கள் அவரைச் சோதிக்க விரும்பினர். அவர் தேவனிடம் இருந்து வந்தவர் என்பதை நிரூபிக்க ஒரு அற்புதத்தைச் செய்யுமாறு அவர்கள் கேட்டனர்.
12 இயேசு வருத்தத்தோடு பெருமூச்சு விட்டார். அவர், “எதற்காக மக்கள் அற்புதங்களை ஒரு ஆதாரமாகப் பார்க்க விரும்புகிறார்கள்? நான் உண்மையைக் கூறுகிறேன். அத்தகைய எந்த ஆதாரமும் உங்களுக்குக் கொடுக்கப்படமாட்டாது” என்று கூறினார்.
13 பிறகு இயேசு பரிசேயர்களை விட்டு விலகி, படகில் ஏறி அக்கரைக்குப் போனார்.
14 அவர்கள் படகில் போகும்போது, சீஷர்களிடம் ஒரே ஒரு அப்பம் மட்டுமே இருந்தது, அவர்கள் போதுமான அப்பங்களைக் கொண்டுவர மறந்துவிட்டார்கள்.
15 அவர்களை இயேசு எச்சரித்தார். “கவனமாக இருங்கள். நீங்கள் பரிசேயருடைய புளித்த மாவைக் குறித்தும் ஏரோதின் புளித்த மாவைக் குறித்தும் எச்சரிக்கையாய் இருங்கள்” என்றார்.
16 இயேசுவின் சீஷர்கள் இதன் பொருளைப்பற்றித் தங்களுக்குள் விவாதம் செய்தார்கள். அவர்கள், “நம்மிடம் அப்பம் இல்லாததால்தான் இயேசு இவ்வாறு கூறுகிறார்” என்று முடிவு செய்தனர்.
17 இதுபற்றி இயேசுவும் அறிந்து கொண்டார். எனவே, “அப்பம் இல்லாததைப்பற்றி ஏன் விவாதித்துக் கொள்கிறீர்கள்? உங்களால் இன்னும் உண்மையைப் பார்க்கவோ, புரிந்துகொள்ளவோ முடியவில்லையே!
18 உங்களுக்குக் கண்கள் இருந்தும் காணமுடியாமல் இருக்கிறீர்களா? காதுகள் இருந்தும் கேட்கமுடியாமல் இருக்கிறீர்களா? நான் இதற்கு முன்னால் செய்தவற்றை நினைத்துப் பாருங்கள். நம்மிடம் போதுமான அப்பங்கள் இல்லாதபோது என்ன செய்தேன்?
19 ஐந்து அப்பங்களை ஐயாயிரம் மக்களுக்கு நான் பங்கிட்டுக் கொடுக்கவில்லையா? உண்டு மீதியான அப்பங்களை எத்தனைக் கூடைகளில் நிறைத்தீர்கள் என்று நினைத்துப் பாருங்கள்” என்றார். அதற்குச் சீஷர்கள், “நாங்கள் மீதியான உணவுப்பொருள்களை பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினோம்” என்றார்கள்.
20 மேலும் இயேசு, “நான் ஏழு அப்பங்களை நாலாயிரம் மக்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்ததை நினைத்துப் பாருங்கள். அப்போது எஞ்சிய உணவுப்பொருளை எத்தனைக் கூடைகளில் நிறைத்து வைத்தீர்கள்?” என்று கேட்டார். அதற்குச் சீஷர்கள், “அவற்றை ஏழு கூடைகளில் நிறைத்து வைத்தோம்” என்றனர்.
21 இயேசு அவர்களிடம், “நான் செய்தவற்றையெல்லாம் நினைவில் வைத்துள்ளீர்கள். ஆனால் இன்னமும் உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லையா?” என்றார்.
22 இயேசுவும் அவரது சீஷர்களும் பெத்சாயிதாவுக்கு வந்தனர். சிலர் இயேசுவிடம் ஒரு குருடனை அழைத்துக்கொண்டு வந்தனர். அவர்கள் குருடனைத் தொட்டுக் குணப்படுத்துமாறு கெஞ்சிக் கேட்டனர்.
23 ஆகையால் இயேசு குருடனின் கையைப் பிடித்துக்கொண்டு ஊருக்கு வெளியே அழைத்து வந்தார். பிறகு இயேசு அவனது கண்ணில் எச்சிலைத் துப்பினார். அவன் மீது தன் கையை வைத்து, “இப்போது உன்னால் கொஞ்சமாவது பார்க்க முடிகிறதா?” என்று கேட்டார்.
24 அக்குருடனால் பார்க்க முடிந்தது. எனவே அவன், “ஆமாம், நான் மக்களைப் பார்க்கிறேன். அவர்கள் மரங்களைப்போல் நடமாடுவதைப் பார்க்கமுடிகிறது” என்றான்.
25 மேலும் இயேசு அவன் கண்மீது கையை வைத்தார். அவன் தன் கண்களை அகலமாகத் திறந்தான். அவனது கண்கள் குணம் பெற்றன. அவனால் எல்லாவற்றையும் தெளிவாகப் பார்க்க முடிந்தது.
26 இயேசு அவனை வீட்டுக்குப்போகச் சொன்னார். “நகரத்திற்குள் போகாதே” என்று இயேசு சொன்னார்.
27 இயேசுவும், அவரது சீஷர்களும் பிலிப்பு செசரியா நகரத்தைச் சார்ந்த ஊர்களுக்குச் சென்றனர். அவர்களின் பயணத்தின்போது “மக்கள் என்னை யார் என்று சொல்கிறர்கள்?” என்று இயேசு கேட்டார்.
28 அதற்குச் சீஷர்கள், “சிலர் உம்மை யோவான் ஸ்நானகன் என்கின்றனர். சிலர் உம்மைத் தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்கின்றனர்” என்று சொன்னார்கள்.
29 பிறகு இயேசு அவர்களிடம், “நீங்கள் என்னை யார் என்று சொல்கின்றீர்கள்?” என்று கேட்டார் அதற்கு பேதுரு, “நீர்தான் கிறிஸ்து” என்று பதில் கூறினான்.
30 இயேசு சீஷர்களிடம், “நான் யார் என்று எவரிடமும் சொல்லவேண்டாம்” என்றார்.
31 பிறகு இயேசு தன் சீஷர்களுக்கு உபதேசிக்கத் தொடங்கினார். மனிதகுமாரன் பல வகையில் கஷ்டப்படவேண்டும். அவர் யூதத் தலைவர்களால் ஒப்புக்கொள்ளப்படமாட்டார். தலைமை ஆசாரியர்களும், வேதபாரகர்களும் அவரை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். மனித குமாரன் அவர்களால் கொல்லப்பட வேண்டும். இறந்த மூன்றாம் நாளில் உயிர்த்தெழுவார்.
32 இவ்வாறு இயேசு நடக்கப்போவதையெல்லாம் எடுத்துக் கூறினார். எதையும் அவர் இரகசியமாய் வைக்கவில்லை. பேதுரு இயேசுவிடம் தனியே பேசினான். அவர் இவ்வாறு கூறுவது குறித்து பேதுரு கண்டித்துக் கூறினான்.
33 ஆனால் இயேசு மறுபக்கம் திரும்பி தன் சீஷர்களைப் பார்த்தார். பிறகு அவர் பேதுருவைக் கண்டித்தார். “சாத்தானே என்னை விட்டு விலகிப்போ! நீ தேவனுடைய காரியங்களைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கிறாய். நீ மனிதர் முக்கியமாகக் கருதும் காரியங்களைப் பற்றி மட்டுமே அக்கறை கொண்டிருக்கிறாய்” என்றார்.
34 இயேசு மக்களைத் தம்மிடம் அழைத்தார். அவரது சீஷர்களும் அவரோடு இருந்தனர். பிறகு இயேசு “யாராவது என்னைப் பின்பற்ற விரும்பினால், அவனது விருப்பங்களையெல்லாம் வெறுத்து ஒதுக்க வேண்டும். அவனது சிலுவையைச் சுமந்து என்னைப் பின்தொடர வேண்டும்.
35 எவனொருவன் தன் வாழ்க்கையைக் காப்பாற்றிக்கொள்ள விரும்புகிறானோ அவன் அதனை இழப்பவனாகிறான். எவன் ஒருவன் எனக்காகவும் நற்செய்திக்காகவும் தன்னை இழக்கிறானோ அவனது வாழ்க்கை பாதுகாக்கப்படுகிறது.
36 ஒருவனுக்கு உலகம் முழுவதும் கிடைத்தாலும் நரகத்தில் ஒருவன் தன் ஆத்துமாவை இழந்து போவானேயானால் அதனால் அவனுக்கு என்ன லாபம்?
37 ஒருவன் தன் ஆன்மாவைத் திரும்பப் பெற்றுக்கொள்ள எந்த விலையையும் கொடுக்க முடியாது.
38 இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் கேடுகளிலும், பாவங்களிலும் வாழ்கிறார்கள். எவனாவது என்னைக் குறித்தும், என் போதனையைக் குறித்தும் வெட்கப்படுவானேயானால், நானும் அவனைக் குறித்து வெட்கப்படுவேன். நான் என் பிதாவின் மகிமையோடும், தேவ தூதர்களோடும் வரும்போது அவனைக் குறித்து வெட்கப்படுவேன்” என்றார்.