1 இயேசு இவ்வாறு உரையாற்றி முடித்த பின்பு கலிலேயாவை விட்டு அகன்று யோர்தானுக்கு அப்பாலுள்ள யூதேயப் பகுதிகளுக்குச் சென்றார்.2 பெருந்திரளான மக்கள் அவரைப் பின் தொடர்ந்தனர். அவர்களை அவர் அங்கே குணமாக்கினார்.3 பரிசேயர் அவரை அணுகி, அவரைச் சோதிக்கும் நோக்குடன், “ஒருவர் தம் மனைவியை எக்காரணத்தையாவது முன்னிட்டு விலக்கிவிடுவது முறையா?” என்று கேட்டனர்.4 அவர் மறுமொழியாக, “படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள் ‘ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்’ என்று நீங்கள் மறைநூலில் வாசித்ததில்லையா?” என்று கேட்டார்.5 ❮5-6❯மேலும் அவர், ⦃ “இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர். இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே, கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்.”⦄ என்றார்.6 Same as above7 அவர்கள் அவரைப் பார்த்து, “அப்படியானால் மணவிலக்குச் சான்றிதழைக் கொடுத்து மனைவியை விலக்கி விடலாம் என்று மோசே கட்டளையிட்டது ஏன்?” என்றார்கள்.8 அதற்கு அவர் “உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே உங்கள் மனைவியரை விலக்கிவிடலாம் என்று மோசே உங்களுக்கு அனுமதி அளித்தார். ஆனால், தொடக்கமுதல் அவ்வாறு இல்லை.9 பரத்தைமையில் ஈடுபட்டதற்காக அன்றி வேறு எக்காரணத்தையாவது முன்னிட்டுத் தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் விபசாரம் செய்கிறான் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்*” என்றார்.⒫10 அவருடைய சீடர்கள் அவரை நோக்கி, “கணவர் மனைவியர் உறவு நிலை இத்தகையது என்றால் திருமணம் செய்து கொள்ளாதிருப்பதே நல்லது” என்றார்கள்.11 அதற்கு அவர், “அருள்கொடை பெற்றவரன்றி வேறு எவரும் இக்கூற்றை ஏற்றுக் கொள்ள முடியாது.12 சிலர் பிறவியிலேயே மண உறவு கொள்ள முடியாதவராய் இருக்கின்றனர். வேறு சிலர் மனிதரால் அந்நிலைக்கு ஆளாக்கப்படுகின்றனர். மற்றும் சிலர் விண்ணரசின்பொருட்டு அந்நிலைக்குத் தம்மையே ஆளாக்கிக் கொள்கின்றனர். இதை ஏற்றுக் கொள்ளக் கூடியவர் ஏற்றுக்கொள்ளட்டும்” என்றார்.13 சிறுபிள்ளைகள் மேல் இயேசு தம் கைகளை வைத்து வேண்டுதல் செய்யுமாறு அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டு வந்தனர். சீடரோ அவர்களை அதட்டினர்.14 ஆனால், இயேசு, “சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்; அவர்களைத் தடுக்காதீர்கள்; ஏனெனில், ,விண்ணரசு இத்தகையோருக்கே உரியது” என்றார்.15 அவர்களைத் தொட்டு ஆசி வழங்கிய பின்பு அவர் அவ்விடத்தைவிட்டுச் சென்றார்.16 அப்பொழுது ஒருவர் இயேசுவிடம் வந்து, “போதகரே, நிலை வாழ்வைப் பெற்றுக்கொள்வதற்கு நான் என்ன நன்மை செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.17 இயேசு அவரிடம், “நன்மையைப்பற்றி என்னை ஏன் கேட்கிறீர்? நல்லவர் ஒருவரே. நீர் வாழ்வடைய விரும்பினால் கட்டளைகளைக் கடைப்பிடியும்” என்றார்.18 அவர், “எவற்றை?” என்று கேட்டார். இயேசு, “கொலை செய்யாதே; விபசாரம் செய்யாதே; களவு செய்யாதே; பொய்ச்சான்று சொல்லாதே;19 தாய் தந்தையை மதித்து நட. மேலும், உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக” என்று கூறினார்.20 அந்த இளைஞர் அவரிடம், “இவை அனைத்தையும் நான் கடைப்பிடித்துவந்துள்ளேன். இன்னும் என்னிடம் குறைபடுவது என்ன?” என்று கேட்டார்.21 அதற்கு இயேசு, “நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்பொழுது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்” என்றார்.22 அவர் சொன்னதைக் கேட்ட அந்த இளைஞர் வருத்தத்தோடு சென்றுவிட்டார். ஏனெனில், அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது.23 இயேசு தம் சீடரிடம், “செல்வர் விண்ணரசில் புகுவது கடினம் என நான் உங்களுக்கு உறுதியாகச் சொல்கிறேன்.24 மீண்டும் உங்களுக்குக் கூறுகிறேன்; செல்வர் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது” என்றார்.⒫25 சீடர்கள் இதைக் கேட்டு, “அப்படியானால் யார்தாம் மீட்புப் பெறமுடியும்?” என்று கூறி மிகவும் வியப்படைந்தார்கள்.26 இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி, “மனிதரால் இது இயலாது. ஆனால், கடவுளால் எல்லாம் இயலும்” என்றார்.27 அதன் பின்பு பேதுரு இயேசுவைப் பார்த்து, “நாங்கள் எல்லாவற்றையும் விட்டு விட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே; எங்களுக்கு என்ன கிடைக்கும்?” என்று கேட்டார்.28 அதற்கு இயேசு, “புதுப்படைப்பின் நாளில் மானிட மகன் தமது மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். அப்போது என்னைப் பின்பற்றிய நீங்களும் இஸ்ரயேல் மக்களின் பன்னிரு குலத்தவர்க்கும் நடுவர்களாய்ப் பன்னிரு அரியணைகளில் வீற்றிருப்பீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.29 மேலும், என் பெயரின் பொருட்டு வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தந்தையையோ, தாயையோ, பிள்ளைகளையோ, நிலபுலன்களையோ விட்டுவிட்ட எவரும் நூறு மடங்காகப் பெறுவர். நிலை வாழ்வையும் உரிமைப் பேறாக அடைவர்.30 ஆனால், முதன்மையானோர் பலர் கடைசியாவர். கடைசியானோர் பலர் முதன்மையாவர்” என்று அவர்களிடம் கூறினார்.
By continuing to browse the site, you are agreeing to our use of cookies.