மத்தேயு 4 IRV ஒப்பிடு Tamil Indian Revised Version
1 அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்திரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார்.
2 அவர் இரவும் பகலும் நாற்பதுநாட்கள் உபவாசமாக இருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டானது.
3 அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: நீர் தேவனுடைய குமாரனென்றால், இந்தக் கற்கள் அப்பங்களாக மாறும்படிச் சொல்லும் என்றான்.
4 அவர் மறுமொழியாக: மனிதன் அப்பத்தினால்மட்டுமில்லை, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.
5 அப்பொழுது பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், தேவாலயத்தின் உச்சியில் அவரை நிறுத்தி:
6 நீர் தேவனுடைய குமாரனென்றால் கீழே குதியும்; ஏனென்றால், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் மோதாதபடி, அவர்கள் உம்மைத் தங்களுடைய கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்று எழுதியிருக்கிறதே என்றான்.
7 அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைச் சோதித்துப்பார்க்காமல் இருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே என்றார்.
8 மறுபடியும், பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் எல்லா ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து:
9 நீர் சாஷ்டாங்கமாக விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான்;
10 அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.
11 அப்பொழுது பிசாசு அவரைவிட்டு விலகிப்போனான். உடனே தேவதூதர்கள் வந்து, அவருக்கு பணிவிடை செய்தார்கள்.
12 யோவான் காவலில் வைக்கப்பட்டான் என்று இயேசு கேள்விப்பட்டு, கலிலேயாவிற்குத் திரும்பிப்போனார்.
13 பின்பு, அவர் நாசரேத்தைவிட்டு, செபுலோன், நப்தலி என்னும் நாடுகளின் எல்லைகளிலிருக்கும் கடற்கரைக்கு அருகில் உள்ள கப்பர்நகூமிற்கு வந்து தங்கியிருந்தார்.
14 கடற்கரை அருகிலும் யோர்தானுக்கு அப்புறத்திலும் உள்ள செபுலோன் நாடும் நப்தலி நாடுமாகிய யூதரல்லாதவர்களுடைய கலிலேயாவிலே,
15 இருளில் இருக்கும் மக்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையில் இருக்கிறவர்களுக்கு வெளிச்சம் தோன்றினது என்று,
16 ஏசாயா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
17 அதுமுதல் இயேசு: மனந்திரும்புங்கள், பரலோக ராஜ்யம் அருகில் இருக்கிறது என்று பிரசங்கிக்கத் தொடங்கினார்.
18 இயேசு கலிலேயாக் கடலோரமாக நடந்துபோகும்போது, மீனவர்களாக இருந்த இரண்டு சகோதரர்களாகிய பேதுரு என்ற சீமோனும், அவனுடைய சகோதரன் அந்திரேயாவும், கடலில் வலையைப் போட்டுக்கொண்டிருக்கின்றபோது, அவர்களைக் கண்டு:
19 என் பின்னே வாருங்கள், உங்களை மனிதர்களைப் பிடிக்கிறவர்களாக ஆக்குவேன் என்றார்.
20 உடனே அவர்கள் வலைகளைவிட்டு, அவருக்குப் பின்னே சென்றார்கள்.
21 அவர் அந்த இடத்தைவிட்டுப் போகும்போது, வேறு இரண்டு சகோதரர்களாகிய செபெதேயுவின் குமாரர்களான யாக்கோபும், யோவானும் தங்களுடைய தகப்பன் செபெதேயுவோடு படகிலிருந்து, தங்களுடைய வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருக்கிறபோது, அவர்களைக் கண்டு, அவர்களையும் அழைத்தார்.
22 உடனே அவர்கள் படகையும் தங்களுடைய தகப்பனையும்விட்டு, அவருக்குப் பின்னே சென்றார்கள்.
23 பின்பு, இயேசு கலிலேயா எங்கும் சுற்றி நடந்து, அவர்களுடைய ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கித்து, மக்களுக்கு உண்டாயிருந்த எல்லா வியாதிகளையும் எல்லா நோய்களையும் நீக்கி குணமாக்கினார்.
24 அவருடைய புகழ் சீரியா தேசமெங்கும் பரவியது. அப்பொழுது பலவிதமான வியாதிகளிலும் வேதனைகளிலும் இருந்த எல்லா நோயாளிகளையும், பிசாசு பிடித்தவர்களையும், வலிப்பு நோயாளிகளையும், பக்கவாதக்காரர்களையும் அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவர்களைக் குணமாக்கினார்.
25 கலிலேயாவிலும், தெக்கப்போலியிலும், எருசலேமிலும், யூதேயாவிலும், யோர்தானுக்கு அப்புறத்திலுமிருந்து அநேக மக்கள் வந்து, அவருக்குப் பின்னே சென்றார்கள்.