நெகேமியா 13 ERV ஒப்பிடு Tamil Easy Reading Version
1 அந்த நாளில், மோசேயின் புத்தகம் உரக்க வாசிக்கப்பட்டது. எனவே, அனைத்து ஜனங்களாலும் கேட்கமுடிந்தது. அவர்கள் இந்தச் சட்டம் மோசேயின் புத்தகத்தில் எழுதப்பட்டிருப்பதை கண்டுக் கொண்டனர்: அம்மோனியரும் மோவாபியரும் தேவசபையில் ஒன்றுகூட அனுமதிக்கக் கூடாது.
2 அந்தச் சட்டம் எழுதப்பட்டது. ஏனென்றால், அந்த ஜனங்கள் இஸ்ரவேல் ஜனங்களுக்கு தண்ணீரும் உணவும் கொடுக்கவில்லை. அந்த ஜனங்கள் இஸ்ரவேல் ஜனங்களை சபிக்கும்படி பலாமுக்குப் பணம் கொடுத்தனர். ஆனால் நமது தேவன் அச்சாபத்தை ஆசீர்வாதமாக மாற்றினார்.
3 எனவே, இஸ்ரவேல் ஜனங்கள் இச்சட்டம் இருப்பதைக் கேட்டவுடன் அவர்கள் அதற்குக் கீழ்ப்படிந்தனர். அவர்கள் தம்மை அயலவர்களின் சந்ததிகளிடமிருந்து தனியே விலக்கிக் கொண்டனர்.
4 ஆனால் அது நிகழும் முன்னால், ஆலயத்தின் அறையை எலியாசிப் தொபியாவுக்குக் கொடுத்திருந்தான். தேவனுடைய ஆலயத்தில் எலியாசிப் சேமிப்பு அறைகளின் அதிகாரியாக இருந்தான். எலியாசிப். தொபியாவின் நெருங்கிய நண்பனாக இருந்தான். அந்த அறையானது தானியக் காணிக்கைகளையும், நறுமணப் பொருட்களையும், ஆலயப் பாத்திரங்களையும் பொருட்களையும் வைக்கப் பயன்பட்டது. அவர்கள் பத்தில் ஒரு பங்காக வந்த தானியத்தையும் புதிய திராட்சைரசத்தையும் லேவியர் பாடகர் மற்றும் வாசல் காவலர்களுக்கான எண்ணெயையும் அந்த அறையில் வைத்திருந்தனர். அவர்கள் ஆசாரியர்களுக்கான அன்பளிப்புகளையும் அந்த அறையில் வைத்தனர். ஆனால் அந்த அறையை எலியாசிப் தொபியாவுக்கக் கொடுத்தான்.
6 இவை அனைத்தும் நிகழும்போது நான் எருசலேமில் இல்லை. நான் பாபிலோன் அரசனிடம் மறுபடியும் போயிருந்தேன். பாபிலோன் அரசனான அர்தசஷ்டாவின் முப்பத்திரண்டாவது ஆட்சியாண்டில் மறுபடியும் போனேன். பின்னர் நான் அரசனிடம் எருசலேமிற்குத் திரும்பிப் போக அனுமதி கேட்டேன்.
7 எனவே நான் எருசலேமிற்குத் திரும்பி வந்தேன். எலியாசிப் செய்திருந்த வருத்தத்திற்குரிய செயலை நான் கேள்விப்பட்டேன். நமது தேவனுடைய ஆலயத்தில் உள்ள ஒரு அறையை எலியாசிப் தொபியாவுக்குக் கொடுத்திருந்தான்.
8 எலியாசிப் செய்திருந்த செயலுக்காக நான் மிகவும் கோபமாக இருந்தேன். எனவே நான் அறையிலிருந்த தொபியாவின் பொருட்களை எல்லாம் எடுத்து வெளியே எறிந்தேன்.
9 அந்த அறையைச் சுத்தமும் பரிசுத்தமும் செய்யும்படி நான் கட்டளையிட்டேன். பிறகு நான் ஆலயப் பாத்திரங்களையும், பொருட்களையும், தானியக் காணிக்கைகளையும், நறுமணப் பொருட்களையும் மீண்டும் அந்த அறையில் வைத்தேன்.
10 ஜனங்கள் தங்களது பங்கை லேவியர்களுக்குக் கொடுக்கவில்லை என்பதையும் நான் கேள்விப்பட்டேன். எனவே லேவியர்களும் பாடகர்களும் தங்கள் வயல்களில் வேலை செய்ய திரும்பப் போயிருந்தனர்.
11 எனவே நான் அதிகாரிகளிடம் அவர்கள் தவறு செய்தனர் என்று கூறினேன். நான் அவர்களிடம், “நீங்கள் தேவனுடைய ஆலயப் பொறுப்பை ஏன் கவனிக்கவில்லை” என்று கேட்டேன். பிறகு நான் லேவியர்கள் அனைவரையும் கூட்டினேன். அவர்கள் ஆலயத்தில் தங்களுக்குரிய இடங்களுக்குச் சென்று தங்கள் பணியைச் செய்யுமாறு நான் சொன்னேன்.
12 பிறகு யூதாவிலுள்ள ஒவ்வொருவரும் தங்கள் தானிய விளைச்சலில் பத்தில் ஒரு பாகத்தையும் புதிய திராட்சைரசத்தையும், ஆலயத்துக்கான எண்ணெயையும் கொண்டு வந்தனர். அவை சேமிப்பு அறைகளில் வைக்கப்பட்டன.
13 நான் சேமிப்பு அறைகளின் பொறுப்பாளர்களாகக் கீழ்க்கண்டவர்களை நியமித்தேன். ஆசாரியனாகிய செலேமியா, வேதபாரகனாகிய சாதோக், லேவியரில் பெதாயா, இவர்களுக்குத் துணையாக மத்தனியாவின் மகனான சக்கூரின் மகன் ஆனான் ஆகியோரை நியமித்தேன். இவர்களை நம்பமுடியும் என்று நான் அறிந்தேன். எனவே அவர்கள் உறவினர்களுக்குப் பங்கிட்டு வழங்குகிற பொறுப்பு அவர்களுடையது.
14 தேவனே நான் செய்திருப்பவற்றை நினைத்துப் பாரும். தேவனுடைய ஆலயத்திற்கும் அதன் சேவைகளுக்கும் நான் உண்மையோடு செய்திருப்பதை மறக்கவேண்டாம்.
15 யூதாவில் அந்தக் காலத்தில், ஜனங்கள் ஓய்வு நாளில் வேலை செய்வதை நான் பார்த்தேன். ஜனங்கள் திராட்சைரசத்தைச் செய்ய திராட்சைகளை மிதிப்பதைப் பார்த்தேன். ஜனங்கள் தானியங்களைக் கொண்டு வந்து கழுதைகள் மீது சுமை ஏற்றுவதைப் பார்த்தேன். ஜனங்கள் திராட்சைப் பழங்கள், அத்திப் பழங்கள் மற்றும் அனைத்துப் பொருட்களையும் நகரத்தில் சுமந்து செல்வதைப் பார்த்தேன். ஓய்வுநாளில் அவர்கள் இவை எல்லாவற்றையும் எருசலேமிற்குள் கொண்டுவந்தனர். எனவே, நான் இதைப்பற்றி அவர்களை எச்சரித்தேன். நான் அவர்களிடம் ஓய்வுநாளில் உணவை விற்கக்கூடாது என்று சொன்னேன்.
16 எருசலேமில் தீரு நகரத்திலுள்ள சில மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருந்தனர். அவர்கள் ஓய்வு நாளில் மீனையும் மற்றும் சில பொருட்களையும் எருசலேமிற்குள் கொண்டுவந்து விற்றனர். அவற்றை யூதர்கள் வாங்கிக்கொண்டிருந்தனர்.
17 யூதாவில் உள்ள முக்கியமான ஜனங்களிடம் நான் அவர்கள் தவறு செய்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னேன். நான் அந்த முக்கிய மனிதர்களிடம், “நீங்கள் மிக மோசமான செயலைச் செய்கிறீர்கள். நீங்கள் ஓய்வு நாளை அழித்துக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் ஓய்வுநாளை மற்ற நாட்களைப் போன்று ஆக்கிவிட்டீர்கள்.
18 உங்கள் முற்பிதாக்கள் இதைப் போன்றே செய்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். அதனால்தான் நமது தேவன் எல்லாத் துன்பங்களையும் அழிவுகளையும் நமக்கும் இந்த நகருக்கும் கொண்டுவந்தார். இப்பொழுது அதையே நீங்கள் செய்துக்கொண்டிருக்கிறீர்கள். இதைவிட அதிகமாக இஸ்ரவேலருக்குத் தீமைகள் ஏற்படும். ஏனென்றால் நீங்கள் ஓய்வுநாளை அசுத்தம் செய்து, இது ஒரு முக்கியமான நாளல்ல என கருதுகிறீர்கள்” என்றேன்.
19 எனவே நான் இதைத்தான் செய்தேன். ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலையிலும் இருட்டுவதற்கு முன்னால், வாசல் காவலாளர்களிடம் எருசலேமின் கதவுகளை மூடி தாழ்ப்பாள் போடுமாறு கட்டளையிட்டேன். ஓய்வுநாள் முடியும்வரை அவர்கள் கதவைத் திறக்கக்கூடாது. வாசல்களில் நான் எனது சொந்த மனிதர்கள் சிலரை நியமித்தேன். அவர்களுக்கு உறுதியாக ஓய்வுநாளில் எருசலேமிற்குள் எந்த சுமையையும் கொண்டு வரக்கூடாது என்று ஆணையிட்டேன்.
20 ஒன்று அல்லது இரண்டு தடவை வியாபாரிகளும் விற்பனையாளர்களும் எருசலேமிற்கு வெளியே இரவில் தங்கும்படி ஏற்பட்டது.
21 ஆனால் நான் அந்த வியாபாரிகளையும் விற்பனையாளர்களையும் எச்சரிக்கை செய்தேன். அவர்களிடம் நான், “இரவில் சுவருக்கு முன்னால் தங்க வேண்டாம். நீங்கள் மீண்டும் இவ்வாறு செய்தால் நான் உங்களைக் கைது செய்வேன்” என்று கூறினேன். எனவே அந்நாளிலிருந்து அவர்கள் ஓய்வு நாளில் தங்கள் பொருள்களை விற்க வருவதில்லை.
22 பிறகு நான் லேவியர்களிடம் தங்களை பரிசுத்தமாக்க கட்டளையிட்டேன். அதனைச் செய்தபிறகு அவர்கள் வாயில்களைக் காக்கச் செல்லவேண்டும். ஓய்வுநாள் பரிசுத்தமான நாளாக அனுசரிக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்த இது செய்யப்பட்டது. தேவனே, நான் இவற்றையெல்லாம் செய்ததற்காக என்னை நினைத்துப்பாரும், என்னிடம் இரக்கமாக இரும். உமது பெரும் அன்பை என்னிடம் காட்டும்.
23 அந்நாட்களில், சில யூதர்கள் அஸ்தோத், அம்மோன், மோவாப் ஆகிய நாடுகளில் உள்ள பெண்களை மணந்துகொண்டதைக் கவனித்தேன்.
24 அத்திருமணங்களால் வந்த குழந்தைகளில் பாதிபேருக்கு யூதமொழியை எப்படி பேசுவது என்று தெரியவில்லை. அக்குழந்தைகள் அஸ்தோத், அம்மோன் அல்லது மோவாப் மொழிகளைப் பேசின.
25 எனவே நான் அந்த மனிதர்களிடம் அவர்கள் தவறு செய்தார்கள் என்று சொன்னேன். நான் அவர்களிடம் கடின வார்த்தைகளைச் சொன்னேன். அத்தகைய மனிதர் சிலரை நான் அடித்தேன். நான் அவர்களின் தலை மயிரைப் பிடித்து இழுத்தேன். நான் அவர்களை தேவனுடைய பேரால் வாக்குறுதியளிக்குமாறு பலவந்தப்படுத்தினேன். நான் அவர்களிடம், “நீங்கள் அந்த ஜனங்களின் பெண்களை மணந்து கொள்ளக் கூடாது. உங்கள் மகன்களை அயல்நாட்டு ஜனங்களின் பெண்கள் மணந்துகொள்ளும்படி விடக்கூடாது. உங்கள் மகள்களை அயல்நாட்டு ஜனங்களின் மகன்களை மணந்துகொள்ளும்படிவிடக் கூடாது.
26 இது போன்ற திருமணங்கள் சாலொமோனைப் பாவம் செய்யும்படி செய்தது என்று உங்களுக்குத் தெரியும். அனைத்து நாடுகளிலும் சாலொமோனைப் போன்ற பேரரசன் இல்லை. தேவன் சாலொமோனை நேசித்தார். தேவன் சாலொமோனை இஸ்ரவேல் தேசத்தின் முழுவதற்கும் பேரரசனாகச் செய்தார். ஆனாலும் சாலொமோன் வெளிநாட்டுப் பெண்களால் பாவம் செய்யும்படி ஆயிற்று.
27 இப்பொழுது நீங்களும் இந்தப் பயங்கரமான பாவத்தைச் செய்வதாக நான் கேள்விப்படுகிறேன். நீங்கள் தேவனுக்கு உண்மையுள்ளவர்களாக இல்லை. நீங்கள் அயல்நாட்டுப் பெண்களை மணந்துகொண்டிருக்கிறீர்கள்” என்றேன்.
28 யொயதா, தலைமை ஆசாரியனாகிய எலியாசிபின் மகன். யொயதாவின் மகன்களில் ஒருவன் ஆரானிலுள்ள சன்பல்லாத்தின் மருமகனாக இருந்தான். நான் அவனை இந்த இடத்தை விட்டுப் போகும்படி வற்புறுத்தினேன். அவனை ஓடிவிடும்படி வற்புறுத்தினேன்.
29 எனது தேவனே, அந்த ஜனங்களைத் தண்டியும். அவர்கள் ஆசாரிய பதவியை அசுத்தம் செய்கிறார்கள். அது முக்கியமில்லை என்பது போல் நடந்துகொள்கிறார்கள். நீர் ஆசாரியர்களோடும், லேவியர்களோடும் செய்த உடன்படிக்கைக்கு அவர்கள் அடிபணிய மறுக்கிறார்கள்.
30 எனவே, நான் ஆசாரியர்களையும் லேவியர்களையும் சுத்தமாக்கினேன். வெளிநாட்டவர்களையும், அவர்களின் உபதேசங்களையும் எடுத்துப்போட்டேன். நான் லேவியர்களுக்கும், ஆசாரியர்களுக்கும் அவர்களது கடமைககளையும், பொறுப்புகளையும் கற்றுக் கொடுத்தேன்.
31 சரியான காலத்தில் ஜனங்கள் அன்பளிப்பாக விறகையும் முதற்பலன்களையும் கொண்டு வருவதை உறுதிபடுத்தினேன். எனது தேவனே, இத்தகைய நல்ல காரியங்களைச் செய்ததற்காக என்னை நினைவுக்கொள்ளும்.