நெகேமியா 4 ERV ஒப்பிடு Tamil Easy Reading Version
1 நாங்கள் எருசலேம் சுவர்களைக் கட்டிக்கொண்டிருப்பதை சன்பல்லாத் கேள்விப்பட்டான். அவன் மிகவும் கோபம்கொண்டான்: எரிச்சல் அடைந்தான். அவன் யூதர்களைக் கேலிச்செய்யத் தொடங்கினான்.
2 சன்பல்லாத் அவனது நண்பர்களோடும் சமாரியாவிலுள்ள படைவீரர்களோடும் பேசி, “பலவீனமுள்ள இந்த யூதர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்? அவர்களை தனியாக விடுவோம் என்று நினைக்கிறார்களா? அவர்கள் பலியிடலாம் என்று நினைக்கிறார்களா? ஒரே ஒரு நாளிலேயே கட்டி முடித்துவிடலாம் என்று நினைக்கிறார்களா? சாம்பல் மேடுகளிலும் புழுதிமேடுகளிலும் உள்ள கற்களுக்கு உயிர்கொடுக்க அவர்களால் முடியாது. இவை சாம்பல் மற்றும் புழுதிக் குவியல்களே” என்றான்.
3 அம்மோனியனாகிய தொபியா சன்பல்லாத்தின் பக்கத்தில் நின்றான். அவன், “இந்த யூதர்கள் எதைக் கட்டுவதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்? ஒரு சிறு நரி இதன் மேல் ஏறினாலும் சுவரிலுள்ள கற்கள் கீழே விழுந்துவிடும்” என்று சொன்னான்.
4 நெகேமியா தேவனிடம் ஜெபம் செய்தான். அவன், “எங்கள் தேவனே, எங்கள் ஜெபத்தைக் கேளும். அந்த மனிதர்கள் எங்களை வெறுக்கிறார்கள். சன்பல்லாத்தும் தொபியாவும் எங்களை அவமதிக்கிறார்கள். அவர்களுக்கே அந்தத் தீயச் செயல்கள் ஏற்படும்படி செய்யும். அவர்களை கைதிகளாக கொண்டு போகப்பட்டவர்களைப் போல வெட்க முறும்படிச் செய்யும்.
5 அவர்களது குற்றங்களை அகற்றவேண்டாம். அல்லது உமது கண்ணுக்கு முன்னால் செய்திருக்கிற பாவங்களை மன்னிக்கவேண்டாம். அவர்கள் கட்டிடம் கட்டுவோர்களை நிந்தனை செய்தும் அதைரியப்படுத்தவும் செய்தனர்” என்றான்.
6 நாங்கள் எருசலேமின் சுவரைக் கட்டினோம். ஆனால் இச்சுவர்கள் இருக்கவேண்டிய உயரத்திற்கு பாதி உயரம் தான் உள்ளது. நாங்கள் இதுவரை செய்தோம். ஏனென்றால் ஜனங்கள் தங்கள் முழு மனதோடு வேலைச் செய்தனர்.
7 ஆனால் சன்பல்லாத், தொபியா, அரபியர்கள், அம்மோனியர்கள் மற்றும் அஸ்தோத்தியரும் மிகவும் எரிச்சல் அடைந்தனர். அவர்கள், எருசலேம் சுவர்களில் ஜனங்கள் தொடர்ந்து வேலைச் செய்துகொண்டிருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டனர். சுவர்களில் உள்ள துவாரங்களை ஜனங்கள் அடைக்கின்றனர் என்றும் அவர்கள் கேள்விப்பட்டனர்.
8 எனவே, அம்மனிதர்கள் கூடி எருசலேமிற்கு எதிராகத் திட்டங்கள் தீட்டுகின்றனர். அவர்கள் எருசலேமிற்கு எதிராகத் தூண்டிவிட திட்டமிடுகின்றனர். அவர்கள் வந்து நகரத்திற்கு எதிராகச் சண்டையிடவும் திட்டமிட்டனர்.
9 ஆனால் நாங்கள் எங்கள் தேவனிடம் ஜெபம் செய்தோம். நாங்கள் சுவர்களில் இரவும் பகலும் கண்காணிக்க காவலர்களை ஏற்பாடு செய்தோம். நாங்கள் அவர்களை எதிர்கொள்ள தயாராக இருந்தோம்.
10 எனவே அந்த நேரத்தில் யூதாவின் ஜனங்கள், “வேலைக்காரர்கள் சோர்வாக இருக்கிறார்கள். வழியில் எல்லாம் மண்ணும் மேடுமாயும் இருக்கிறது. எங்களால் தொடர்ந்து சுவரைக் கட்ட முடியாது.
11 எங்கள் பகைவர்கள், ‘யூதா ஜனங்கள் அறிந்துக் கொள்வதற்கும் எங்களைப் பார்ப்பதற்கும் முன்னால் நாங்கள் அவர்கள் மத்தியில் இருப்போம். நாங்கள் அவர்களைக் கொல்வோம். அது வேலையை நிறுத்தும்’ என்கிறார்கள்” என்று கூறினர்.
12 பிறகு எங்கள் பகைவர்களின் மத்தியில் வாழும் யூதர்கள் வந்து எங்களிடம் பத்துமுறை, “எங்களைச் சுற்றிலும் எங்கள் பகைவர்கள் உள்ளனர். நாங்கள் திரும்பினாலும், அங்கேயும் இருக்கிறார்கள்” என்று சொன்னார்கள்.
13 எனவே நாம் கொஞ்சம் பேரைச் சுவரோடுள்ள பள்ளமான இடங்களில்விட்டேன். சுவர்களில் உள்ள துவாரங்களில் அவர்களை நிற்க வைத்தேன். நான் அவர்களைக் அவர்களது குடும்பங்களோடு அருகில் வாள்கள், ஈட்டிகள், மற்றும் வில்லுகளோடு நிறுத்தினேன்.
14 நான் மொத்த சூழ்நிலையையும் பார்த்தேன். பிறகு நான் எழுந்து நின்று முக்கியமான குடும்பங்களிடமும் அதிகாரிகளிடமும் மற்ற ஜனங்களிடமும் பேசினேன். நான் அவர்களிடம், “நமது பகைவர்களுக்குப் பயப்படவேண்டாம். நமது ஆண்டவரை நினைவு கொள்ளுங்கள். கர்த்தர் பெரியவராயும் வல்லமை உடையவராயும் இருக்கிறார். நீங்கள் உங்கள் சகோதரர்கள், மகன்கள், மகள்கள் ஆகியோருக்காகச் சண்டையிடவேண்டும். உங்கள் மனைவிகளுக்காகவும் வீடுகளுக்காகவும் போரிடவேண்டும்” என்று கூறினேன்.
15 பிறகு நாங்கள் அவர்களின் திட்டங்களை அறிந்துகொண்டதை எங்கள் பகைவர்கள் கேள்விப்பட்டனர். அவர்களது திட்டங்களைத் தேவன் அழித்துவிட்டதை அவர்கள் அறிந்தனர். எனவே நாங்கள் அனைவரும் சுவரில் வேலை செய்வதற்குத் திரும்பிப்போனோம். ஒவ்வொருவரும் தங்கள் சொந்த இடத்திற்குத் திரும்பிப்போய் தங்கள் வேலையைச் செய்தனர்.
16 அந்த நாளில் இருந்து, எனது பாதி ஜனங்கள் சுவர்வேலை செய்தனர். மீதி பாதி ஜனங்கள் ஈட்டிகள், கேடயங்கள், வில்லுகள் மற்றும் கவசங்கள் ஆகியவற்றோடு காவல் காத்தனர். படை அதிகாரிகள் சுவரைக்கட்டும் யூதாவின் ஜனங்களுக்குப் பின்னால் நின்றனர்.
17 கட்டிடம் கட்டுவோரும் அவர்களது உதவியாளர்களும் ஒரு கையில் கருவியையும், இன்னொரு கையில் ஆயுதத்தையும் வைத்திருந்தனர்.
18 கட்டிடம் கட்டும் ஒவ்வொருவரும் வேலை செய்யும்போது தன் இடுப்பில் வாளை அணிந்திருந்தனர். எனக்கு அடுத்திருந்தவன் எச்சரிக்கை செய்வதற்கு எக்காளம் ஊதுபவனாக இருந்தான்.
19 பிறகு நான் பிரதான குடும்பங்களிடமும், அதிகாரிகளிடமும், மற்ற ஜனங்களிடமும் பேசினேன். நான் அவர்களிடம், “இது மிகப் பெரிய வேலை. நாம் சுவர் முழுவதும் பரவியிருக்க வேண்டும். நாம் ஒருவருக்கு ஒருவர் தூரமாக இருக்கிறோம்.
20 எனவே, நீங்கள் எக்காள சத்தத்தைக் கேட்டால் அந்த இடத்திற்கு ஓடிப்போங்கள். அங்கே நாம் அனைவரும் கூடுவோம். தேவன் நமக்காக போரிடுவார்” என்று சொன்னேன்.
21 எனவே, நாங்கள் எருசலேம் சுவரில் தொடர்ந்து வேலைச் செய்துகொண்டிருந்தோம். பாதிபேர் ஈட்டிகளை வைத்திருந்தார்கள். நாங்கள் காலை வெளிச்சம் வந்தது முதல் இரவில் நட்சத்திரம் வரும்வரை வேலைச் செய்தோம்.
22 அந்த நேரத்தில் நானும் ஜனங்களிடம், “கட்டிடம் கட்டுகிற ஒவ்வொருவரும் தங்கள் உதவியாளர்களோடு இரவில் எருசலேமிற்குள்ளே தங்க வேண்டும். பிறகு அவர்கள் இரவில் காவல் செய்யவும் பகலில் வேலை செய்யவும் முடியும்” என்று சொன்னேன்.
23 எனவே நானாகிலும் எனது சகோதரராகிலும் எனது வேலைக்காரராகிலும் என்னைப் பின்பற்றி காவல் காக்கிற சேவகராகிலும் எங்கள் ஆடைகளைக் கழற்றிபோடாமல் இருந்தோம் எல்லா நேரமும் எங்களிடம் ஆயுதம் தயாராக இருந்தது. நாங்கள் தண்ணீர் எடுக்கப் போகும்போது கூட ஆயுதம் தயாராக இருந்தது.