எண்ணாகமம் 2 ERV ஒப்பிடு Tamil Easy Reading Version
1 கர்த்தர் மோசேயிடமும், ஆரோனிடமும்,
2 “இஸ்ரவேல் ஜனங்கள் ஆசரிப்புக் கூடாரத்தைச் சுற்றியே, தங்கள் முகாமை அமைத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு குழுவும், தங்களுக்கென்று தனியான கொடியை வைத்துக்கொள்ள வேண்டும். தங்கள் குழுக்கொடியின் அருகிலேயே, ஒவ்வொருவனும் தங்க வேண்டும்.
3 “யூதா முகாமின் கொடியானது சூரியன் உதிக்கின்ற, கிழக்குத் திசையில் இருக்க வேண்டும். யூதாவின் கோத்திரம், அக்கொடியின் அருகிலேயே தங்கள் முகாம்களை அமைத்துக்கொள்ள வேண்டும். அம்மினதாபின் மகனான நகசோன், யூதாவின் கோத்திரத்துக்குத் தலைவனாக இருப்பான்.
4 அவர்கள் குழுவில் 74,600 ஆண்கள் இருந்தனர்.
5 “இசக்காரின் கோத்திரம், யூதாவின் கோத்திரத்திற்கு அருகில் தங்கியிருக்க வேண்டும். சூவாரின் மகனான நெதனேயேல், இசக்கார் ஜனங்களின் தலைவனாய் இருப்பான்.
6 அவனுடைய குழுவில் 54,400 ஆண்கள் இருந்தனர்.
7 “செபுலோனின் கோத்திரமானது, யூதாவின் கோத்திரத்துக்கு அருகில் தங்கியிருக்க வேண்டும். ஏலோனின் மகனான எலியாப், செபுலோன் ஜனங்களின் தலைவனாவான்.
8 அவர்கள் குழுவில் 57,400 ஆண்கள் இருந்தனர்.
9 “யூதாவின் முகாமில் மொத்தம் 1,86,400 ஆண்கள் இருந்தனர். இவர்கள் அனைவரும், தங்கள் கோத்திரங்களின்படி பிரிக்கப்பட்டார்கள். ஜனங்கள் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் போகும்போது, யூதாவின் கோத்திரமே முதலில் செல்லும்.
10 “ரூபனுடைய முகாமின் கொடியைக் கொண்ட படைகள், பரிசுத்தக் கூடாரத்தின் தென்பகுதியில் இருக்கும். ஒவ்வொரு குழுவும் இக்கொடியின் அருகில் இருக்கும். சேதேயூரின் மகனான எலிசூர், ரூபன் ஜனங்களின் தலைவனாக இருப்பான்.
11 இக்குழுவில் 46,500 ஆண்கள் இருந்தனர்.
12 “சிமியோனின் கோத்திரம், ரூபனின் கோத்திரத்தின் அருகில் இருக்கும். சூரிஷதாவின் மகனான செலூமியேல், சிமியோன் ஜனங்களின் தலைவனாக இருப்பான்.
13 இக்குழுவில் 59,300 ஆண்கள் இருந்தனர்.
14 “காத்தின் கோத்திரமும், ரூபனின் கோத்திரத்தின் அருகில் இருக்கும். தேகுவேலின் மகனாகிய எலியாசாப், காத் ஜனங்களின் தலைவனாயிருப்பான்.
15 இக்குழுவில் 45,650 ஆண்கள் இருந்தனர்.
16 “ரூபனின் முகாமில் எல்லா கோத்திரங்களிலிருந்தும் மொத்தம் 1,51,450 ஆண்கள் இருந்தனர். ஜனங்கள் ஓரிடத்திலிருந்து, இன்னொரு இடத்திற்குப் போகும்போது இக்குழு இரண்டாவதாகச் செல்லும்.
17 “ஜனங்கள் பயணம் செய்யும்போது, அடுத்ததாக லேவியரின் குழு செல்ல வேண்டும். ஆசாரிப்புக் கூடாரமானது அவர்களுடைய எல்லா முகாம்களுக்கும் நடுவே இருக்க வேண்டும். அவர்கள் செல்லுகிற வரிசைப்படியே தங்கள் முகாம்களையும் அமைத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் குடும்பக் கொடிகளோடுதான் பயணம் செய்யவேண்டும்.
18 “எப்பிராயீமுடைய முகாமின் கொடியையுடைய படைகள் மேற்கு பக்கத்தில் தங்கள் முகாமை அமைத்துக்கொள்ள வேண்டும். அம்மியூதின் மகனான எலிஷாமா எப்பிராயீமின் ஜனங்களுக்குத் தலைவனாக இருப்பான்.
19 இக்குழுவில் மொத்தம் 40,500 ஆண்கள் இருந்தனர்.
20 “மனாசேயின் கோத்திரமானது எப்பிராயீமுடைய குடும்பத்துக்கு அருகில் தங்க வேண்டும். பெதாசூரின் மகனான கமாலியேல், மனாசே ஜனங்களுக்குத் தலைவனாக இருப்பான்.
21 இக்குழுவில் மொத்தம் 32,200 ஆண்கள் இருந்தனர்.
22 “பென்யமீனின் கோத்திரமும் எப்பிராயீமுடைய குடும்பத்துக்கு அருகில் தங்க வேண்டும். கீதெயோனின் குமாரனாகிய அபீதான் பென்யமீன் ஜனங்களுக்குத் தலைவனாக இருப்பான்.
23 அக்குழுவில் உள்ள ஆண்களின் எண்ணிக்கை 35,400 ஆகும்.
24 “எப்பிராயீமின் குழு தங்கி இருக்கும் இடத்தில், மொத்தத்தில் 1,08,100 ஆண்கள் இருந்தார்கள். ஜனங்கள் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் போகும்போது, மூன்றாவதாக இவர்கள் செல்ல வேண்டும்.
25 “தாண் குழுவின் கொடியானது வடக்குப் புறத்தில் இருக்க வேண்டும். தாணின் கோத்திரங்கள், அங்கே தங்கள் முகாம்களை அமைத்திருப்பார்கள். அம்மிஷதாயின் மகனான அகியேசேர், தாண் ஜனங்களின் தலைவனாக இருப்பான்.
26 இந்தக் குழுவில் 62,700 ஆண்கள் இருந்தனர்.
27 “ஆசேரின் கோத்திரத்தினர் தாணின் கோத்திரத்தினரை அடுத்து இருப்பார்கள். ஓகிரானின் மகனான பாகியேல், ஆசேர் ஜனங்களின் தலைவனாக இருப்பான்.
28 இக்குழுவில், 41,500 ஆண்கள் இருந்தனர்.
29 “நப்தலியின் கோத்திரத்தினரும் தாணின் கோத்திரத்தினருக்கு அடுத்துக் கூடாரமிட்டு இருப்பார்கள். ஏனானின் மகனாகிய அகீரா, நப்தலி ஜனங்களின் தலைவனாக இருப்பான்.
30 இக்குழுவில் 53,400 ஆண்கள் இருந்தனர்.
31 “தாணின் குழு தங்கி இருக்கும் இடத்தில் மொத்தத்தில் 1,57,600 ஆண்கள் இருந்தார்கள். மக்கள் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்லும்போது, கடைசியில் செல்ல வேண்டியவர்கள் இவர்களே, ஒவ்வொருவரும் தங்கள் குடும்பக் கொடிகளோடு இருக்க வேண்டும்” என்று கூறினார்.
32 இவர்கள்தான் இஸ்ரவேல் ஜனங்கள். அவர்கள் குடும்பவாரியாகக் கணக்கிடப்பட்டனர். எல்லா முகாம்களிலும் இருந்த மொத்த இஸ்ரவேல் ஆண்களின் எண்ணிக்கை 6,03,550 ஆகும்.
33 மோசே கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து, லேவியர்களை மற்ற இஸ்ரவேல் ஜனங்களோடு சேர்த்து எண்ணவில்லை.
34 கர்த்தர் மோசேயிடம் சொன்னபடி, இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாவற்றையும் செய்து முடித்தனர். ஒவ்வொரு குழுவும் தமது சொந்தக் கொடியின் கீழ் தங்கி இருந்தது. அனைவரும் தங்கள் குடும்பம், மற்றும் கோத்திரத்தின்படியே பிரயாணப்பட்டு போனார்கள்.