1 கர்த்தாவே, என் தொல்லைகளினின்று என்னை விடுவித்தீர். எனது பகைவர்கள் என்னைத் தோற்கடித்து என்னை நோக்கி நகைக்காமல் இருக்கச் செய்தீர். எனவே நான் உம்மை கனப்படுத்துவேன்.

2 என் தேவனாகிய கர்த்தாவே, நான் உம்மிடம் ஜெபித்தேன். நீர் என்னைக் குணமாக்கினீர்.

3 கல்லறையினின்று என்னை விடுவித்தீர். என்னை வாழவிட்டீர். குழிகளில் இருக்கும் பிணங்களோடு நான் தங்கியிருக்க நேரவில்லை.

4 தேவனைப் பின்பற்றுவோர் கர்த்தருக்குத் துதிகளைப் பாடுவார்கள்! அவரது பரிசுத்த நாமத்தைத் துதியுங்கள்!

5 தேவன் கோபங்கொண்டார். அதன் முடிவு “மரணமே”. ஆனால் அவர் அன்பை வெளிப்படுத்தினார், எனக்கு “உயிரைக்” கொடுத்தார். இரவில் அழுதபடி படுத்திருந்தேன். மறுநாள் காலையில் மகிழ்ச்சியோடு பாடிக்கொண்டிருந்தேன்!

6 இப்போது இவ்வாறு நான் கூறமுடியும். அது உண்மையென நிச்சயமாய் நான் அறிவேன். “நான் ஒருபோதும் தோற்கடிக்கப்படமாட்டேன்!”

7 கர்த்தாவே, என்னிடம் தயவாயிருந்தீர். எதுவும் என்னை வெல்ல முடியாது என உணர்ந்தேன். சிலகாலம், நீர் என்னை விட்டு விலகினீர், நான் மிகவும் பயந்தேன்.

8 தேவனே, நான் உம்மிடம் திரும்பி ஜெபித்தேன். எனக்கு இரக்கம் காட்டுமாறு வேண்டினேன்.

9 நான், “தேவனே, நான் மரித்துக் கல்லறைக்குள் அடக்கம் பண்ணப்பட்டால் என்ன பயன்? மரித்தோர் புழுதியில் கிடப்பார்கள். அவர்கள் உம்மைத் துதிப்பதில்லை! என்றென்றும் தொடரும் உம் நன்மையை அவர்கள் பேசார்கள்” என்றேன்.

10 கர்த்தாவே என் ஜெபத்தைக் கேளும். என்னிடம் தயவாயிரும்! கர்த்தாவே, எனக்கு உதவும்.

11 நான் ஜெபித்தேன், நீர் எனக்கு உதவினீர்! என் அழுகையை நடனக்களிப்பாய் மாற்றினீர். அழுகையின் ஆடைகளை நீர் அகற்றிப்போட்டீர். மகிழ்ச்சியால் என்னைப் பொதிந்து வைத்தீர்.

12 எனது தேவனாகிய கர்த்தாவே, உம்மை என்றென்றும் நான் துதிப்பேன். ஒருபோதும் அமைதியாயிராமல் நான் இதைச் செய்வேன். எப்போதும் யாராவது ஒருவர் உம்மை கனப்படுத்திக் கொண்டிருப்பார்கள்.