1 பெரிய மனிதனே, நீ செய்யும் தீய செயல்களைக் குறித்து ஏன் பெருமை கொள்கிறாய்? நீ தேவனுக்கு முன் மதிப்பற்றவனாவாய். நாள் முழுவதும் தீமை செய்யவே திட்டமிடுகிறாய்.
2 நீ மூடத்தனமான திட்டங்களை வகுக்கிறாய். உன் நாவு தீட்டப்பட்ட சவரக்கத்தியைப் போன்று ஆபத்தானது. நீ எப்போதும் பொய் பேசி, யாரையேனும் ஏமாற்ற முயல்கிறாய்.
3 நீ நன்மையைப் பார்க்கிலும் தீமையை விரும்புகிறாய். உண்மையைக் காட்டிலும் பொய்பேச முயல்கிறாய்.
4 நீயும் உனது பொய்கூறும் நாவும் ஜனங்களைத் துன்புறுத்த விரும்பும்.
5 எனவே தேவன் உன்னை என்றைக்கும் அழிப்பார்! அவர் உன்னை உனது வீட்டிலிருந்து இழுத்து எறிவார். அவர் உன்னைக் கொல்வார், உனக்குச் சந்ததி இராது.
6 நல்லோர் இதனைக் காண்பார்கள். தேவனுக்குப் பயந்து அவரை மதித்து வாழ அவர்கள் கற்பார்கள். அவர்கள் உன்னைப் பார்த்து நகைத்து,
7 “தேவனைச் சார்ந்து வாழாத மனிதனுக்கு நிகழ்ந்ததைப் பாருங்கள். அம்மனிதன் தனது செல்வமும், பொய்களும் தன்னைக் காக்கும் என்று நம்பிக்கொண்டிருந்தான்” என்பார்கள்.
8 ஆனால் நான் தேவனுடைய ஆலயத்தில், நெடுங்காலம் வாழும் பச்சையான ஒலிவ மரத்தைப்போலிருப்பேன். தேவனுடைய அன்பை நான் என்றென்றும் நம்புவேன்.
9 தேவனே, நீர் செய்த காரியங்களுக்காக நான் உம்மைத் துதிப்பேன். நான் உமது நாமத்தை உம் சீடர்களுக்கு முன்பாகப் பேசுவேன். ஏனெனில் அது மிகவும் நல்லதாக இருக்கிறது.
சங்கீதம் 52 ERV IRV TRV