சங்கீதம் 79 ERV ஒப்பிடு Tamil Easy Reading Version
1 தேவனே, சில ஜனங்கள் மற்ற நாடுகளிலிருந்து உமது ஜனங்களோடு போரிட வந்தார்கள். அந்த ஜனங்கள் உமது பரிசுத்த ஆலயத்தை அழித்தார்கள். அவர்கள் எருசலேமைப் பாழக்கிச் சென்றார்கள்.
2 காட்டுப் பறவைகள் உண்ணும்படி பகைவர்கள் உமது ஊழியக்காரனின் சரீரங்களைக் கொடுத்தார்கள். உம்மைப் பின்பற்றுவோரின் சரீரங்களைக் காட்டு விலங்குகள் உண்ணும்படி விட்டுச்சென்றார்கள்.
3 தேவனே, இரத்தம் தண்ணீராகப் பெருக்கெடுத்தோடும் வரைக்கும் பகைவன் உமது ஜனங்களைக் கொன்றான். மரித்த உடல்களைப் புதைப்பதற்கென ஒருவனும் விட்டு வைக்கப்படவில்லை.
4 எங்களைச் சுற்றிலுமுள்ள நாடுகள் எங்களை இழிவுப்படுத்தின. எங்களைச் சூழ வாழ்ந்த ஜனங்கள் எங்களை மனம் நோகச்செய்தனர்.
5 தேவனே, என்றென்றும் எங்களோடு கோபம்கொள்வீரா? உமது ஆழ்ந்த உணர்ச்சிகள் தொடர்ந்து நெருப்பைப் போல் எரியுமா?
6 தேவனே, உம்மை அறியாத தேசங்களின் மீது உமது கோபத்தைத் திருப்பும். உமது நாமத்தை தொழுதுகொள்ளாத தேசங்களின்மீது உமது கோபத்தைத் திருப்பும்.
7 அத்தேசங்கள் யாக்கோபை அழித்தன. அவர்கள் யாக்கோபின் நாட்டை அழித்தார்கள்.
8 தேவனே, எங்கள் முற்பிதாக்களின் பாவத்திற்காக எங்களைத் தண்டியாதேயும். விரையும், எங்களுக்கு உமது இரக்கத்தைக் காட்டும்! நீர் எங்களுக்கு மிகவும் தேவையானவர்!
9 எங்கள் மீட்பராகிய தேவனே, எங்களுக்கு உதவும்! எங்களுக்கு உதவும்! எங்களைக் காப்பாற்றும்! உமது நாமத்துக்கு அது மகிமையை தரும். உமது நாமத்தின் நன்மைக்காக எங்கள் பாவங்களை அழித்துவிடும்.
10 பிறதேசங்கள் எங்களிடம், “உங்கள் தேவன் எங்கே? அவர் உங்களுக்கு உதவக் கூடாதா?” என்று கேட்கவிடாதேயும். தேவனே, நாங்கள் பார்க்கும்படி அவர்களைத் தண்டியும். உமது பணியாட்களைக் கொன்றதற்காக அவர்களைத் தண்டியும்.
11 சிறைப்பட்டவர்களின் துன்பக் குரலை நீர் கேளும்! தேவனே, உமது மிகுந்த வல்லமையைப் பயன்படுத்தி மரணத்திற்கென்று தேர்ந்து கொண்ட அந்த ஜனங்களைக் காப்பாற்றும்.
12 தேவனே, எங்களைச் சுற்றிலும் வாழும் ஜனங்கள் எங்களுக்குச் செய்ததைப் பார்க்கிலும் ஏழு மடங்கு அவர்களைத் தண்டியும். உம்மை அவமானப்படுத்தியதற்காய் அவர்களைத் தண்டியும்.
13 நாங்கள் உமது ஜனங்கள். நாங்கள் உமது மந்தையின் ஆடுகள். நாங்கள் உம்மை என்றென்றும் துதிப்போம். தேவனே, என்றென்றும் எப்போதும் நாங்கள் உம்மைத் துதிப்போம்.