1 இவையனைத்தையும் எசேக்கியா உண்மையுடன் செய்து முடித்தப் பிறகு, சனகெரிப் எனும் அசீரியா அரசன் யூதா நாட்டைத் தாக்க வந்தான். சனகெரிப்பும் அவனது படைகளும் கோட்டைக்கு வெளியே முகாமிட்டனர். அந்நகரங்களைத் தோற்கடிக்கத் திட்டங்கள் தீட்டும்பொருட்டு அவன் இவ்வாறுச் செய்தான். அவன் அனைத்து நகரங்களையும் தானே வென்றுவிட விரும்பினான்.

2 எருசலேமைத் தாக்குவதற்காக சனகெரிப் வந்திருக்கும் செய்தியை எசேக்கியா அறிந்துகொண்டான்.

3 பிறகு எசேக்கியா தனது அதிகாரிகளோடும் படை அதிகாரிகளோடும் கலந்தாலோசித்தான். அவர்கள் அனைவரும் நகரத்துக்கு வெளியே தண்ணீரை விநியோகிக்கும் ஊற்றுக் கண்களை அடைத்துவிட ஒப்புக் கொண்டனர். அந்த அதிகாரிகளும் அலுவலர்களும் எசேக்கியாவிற்கு உதவினார்கள்.

4 நாட்டின் நடுவில் ஓடிக்கொண்டிருந்த ஓடைகளையும் ஊற்றுகளையும் எராளமான ஜனங்கள் சேர்ந்து வந்தடைத்தனர். அவர்கள், “அசீரியா அரசன் இங்கு வரும்போது அவனுக்கு அதிகம் தண்ணீர் கிடைக்காது!” என்றனர்.

5 எசேக்கியா எருசலேமைப் பலமுள்ளதாக ஆக்கினான். இடிந்துபோன சுவர்களை மீண்டும் கட்டினான். சுவர்களின் மேல் கோபுரங்களைக் கட்டினான். முதல் சுவருக்கு அடுத்தாக இரண்டாம் சுவரையும் கட்டினான். எருசலேமின் பழைய பகுதியில் உள்ள கிழக்கு பாகத்தைப் பலமுள்ளதாகக் கட்டினான். அவன் பல்வேறு ஆயுதங்களையும் கேடயங்களையும் செய்தான்.

6 ஜனங்களுக்குத் தலைமைத் தாங்கும் போர்த் தலைவர்களை எசேக்கியா தேர்ந்தெடுத்தான். நகர வாசலுக்கருகில் அவன் இந்த அதிகாரிகளை அழைத்துப் பேசினான். எசேக்கியா அவர்களோடு பேசி அவர்களை உற்சாகப்படுத்தினான். அவன், “நீங்கள் பலமாகவும், தைரியமாகவும் இருங்கள். அசீரியா அரசனைப்பற்றியோ, அவனது பெரும் படையைப் பற்றியோ பயமும் கவலையும் அடையாதீர்கள். அசீரியா அரசனுக்கு இருக்கிற பலத்தைவிட மாபெரும் வல்லமை நமக்கு பலமாக இருக்கிறது.

8 அசீரியா அரசனிடம் மனிதர்கள் மட்டுமே உள்ளனர். ஆனால் நம்மிடமோ நமது தேவனாகிய கர்த்தர் இருக்கிறார்! நமது தேவன் நமக்கு உதவுவார். நமது போர்களில் அவர் சண்டையிடுவார்” என்று பேசினான். இவ்வாறு யூதா அரசனான எசேக்கியா ஜனங்களை உற்சாகப்படுத்தி அவர்களைப் பலமுள்ளவர்களாக உணரச்செய்தான்.

9 சனகெரிப்பும் அவனது படைகளும் லாகீசுக்கு எதிராக முற்றுகை இட்டனர். அதனைத் தோற்கடிக்க முடியும் என்றும் எண்ணினர். சனகெரிப் தனது வேலைக்காரர்களை யூதாவின் அரசனான எசேக்கியாவிடமும் எருசலேமில் உள்ள யூதா ஜனங்களிடமும் அனுப்பினான். எசேக்கியாவிற்கும், எருசலேமில் உள்ள ஜனங்களுக்கும் எடுத்துச்சொல்ல சனகெரிப்பின் வேலைக்காரர்களிடம் ஒரு செய்தி இருந்தது.

10 அவர்கள், “அசீரியாவின் அரசனான சனகெரிப் சொல்வதாவது, ‘முற்றுகை இடப்பட்ட எருசலேமிற்குள் எந்த நம்பிக்கையின் பேரில் நீங்கள் அனைவரும் இருக்கிறீர்கள்?

11 எசேக்கியா உங்களை முட்டாளாக்குகிறான். நீங்கள் தந்திரமாக எருசலேமிற்குள் தங்கவைக்கப்படுகிறீர்கள். எனவே நீங்கள் பசியாலும் தாகத்தாலும் மரித்துப்போவீர்கள். எசேக்கியா உங்களிடம், “நமது தேவனாகிய கர்த்தர் அசீரியா அரசனிடமிருந்து நம்மைக் காப்பாற்றுவார்” என்று கூறுகிறான்.

12 எசேக்கியாவே கர்த்தருடைய மேடைகளையும் பலிபீடங்களையும் அப்புறப்படுத்தினான். அவன் யூதாவுக்கும் எருசலேமிற்கும் ஒரே பலிபீடத்தையே தொழுதுகொள்ளுங்கள், நறு மணப்பொருட்களை எரியுங்கள் என்று சொன்னான்.

13 நானும் என் முற்பிதாக்களும் மற்ற நாடுகளிலிருந்த அனைத்து ஜனங்களுக்கும் என்ன செய்தோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். மற்ற நாடுகளில் உள்ள தெய்வங்களால் தம் ஜனங்களையே காப்பாற்ற முடியாமல்போனது. அந்தத் தெய்வங்களின் ஜனங்களை நான் அழிக்கும்போதுகூட, அவர்களால் அதைத் தடுக்க முடியவில்லை.

14 என் முற்பிதாக்கள் அந்நாடுகளை அழித்தார்கள். தனது ஜனங்களை அழிப்பதிலிருந்து என்னைத் தடுக்கும் தேவன் யாரும் இல்லை. எனவே, உங்கள் தெய்வம் என்னிடமிருந்து உங்களைக் காப்பாற்றுவார் என்று நினைக்கிறீர்களா?

15 எசேக்கியா உங்களை முட்டாளாக்கவோ, உங்களிடம் தந்திரம் செய்யவோ அனுமதிக்காதீர்கள். அவனை நம்பாதீர்கள். ஏனென்றால் எந்த நாட்டையும், அரசையும் என்னிடமிருந்தும், என் முற்பிதாக்களிடமிருந்தும் எந்தத் தெய்வமும் காப்பாற்றவில்லை. எனவே என்னுடைய தாக்குதலில் இருந்து உங்கள் தெய்வம் உங்களைக் காப்பாற்றுவார் என்று எண்ணாதீர்கள்’” என்றார்கள்.

16 அசீரியா அரசனின் வேலைக்காரர்கள், தேவனாகிய கர்த்தருக்கும், அவரது தொண்டனான எசேக்கியாவுக்கும் எதிராக மிக மோசமாகப் பேசினார்கள்.

17 அசீரியா அரசன் மேலும் தேவனாகிய கர்த்தரை நிந்தித்து கடிதங்கள் பல எழுதினான். அசீரியா அரசன் தம் கடிதத்தில் எழுதியிருந்த செய்திகள் பின் வருமாறு: “மற்ற நாடுகளில் உள்ள தெய்வங்களால் தம் ஜனங்களைக்கூட என்னிடமிருந்து காப்பாற்ற முடியவில்லை. இதைப் போலவே எசேக்கியாவின் தெய்வம் உங்களை எனது தாக்குதலிலிருந்து காப்பாற்ற முடியாது.”

18 பிறகு அசீரியா அரசனின் வேலைக்காரர்கள் சுவர்களின் மேலே இருந்த எருசலேமின் ஜனங்களைப் பார்த்து சத்தமிட்டார்கள். அப்போது அவர்கள் எபிரெய மொழியைப் பயன்படுத்தினர். எருசலேம் ஜனங்கள் அஞ்சவேண்டும் என்பதற்காகவே இவ்வாறு நடந்துக்கொண்டனர். தாம் அந்நகரத்தைக் கைப்பற்றிவிடுவோம் என்று நம்பினார்கள்.

19 உலக ஜனங்கள் தொழுதுகொண்ட தேவனுக்கு எதிராக அந்த வேலைக்காரர்கள் கெட்ட செய்திகளைக் கூறினார்கள். அந்த தெய்வங்கள் அந்த ஜனங்களின் கைகளால் செய்யப்பட்ட பொருட்கள் மட்டுமே. இதைப்போலவே எருசலேமின் தேவனுக்கும் அதேபோன்ற தீமைகளை அந்த வேலைக்காரர்கள் செய்தார்கள்.

20 இந்தப் பிரச்சனையைப்பற்றி எசேக்கியா அரசனும், ஆமோத்தின் மகனாகியா ஏசாயா தீர்க்கதரிசியும் கர்த்தரிடம் ஜெபம் செய்தார்கள். அவர்கள் பரலோகத்தை நோக்கி மிகச் சத்தமாக ஜெபம் செய்தனர்.

21 பிறகு கர்த்தர் அசீரியா அரசனின் முகாமிற்கு ஒரு தேவ தூதனை அனுப்பினார். தேவதூதன் அசீரியாவின் படையில் உள்ள எல்லா வீரர்களையும், தலைவர்களையும், அதிகாரிகளையும் கொன்றான். எனவே, அசீரியா அரசன் தனது சொந்த நாட்டிற்குத் திரும்பிப் போனான். அவனது ஜனங்கள் அவனுக்காக வெட்கப்பட்டனர். அவன் தனது பொய்த் தெய்வங்களின் கோவிலிற்குப் போனான். அங்கே அவனது மகன்கள் அவனை வாளால் கொன்றனர்.

22 இவ்வாறு கர்த்தர், அசீரியா அரசனாகிய சனகெரிபிடமிருந்தும் மற்ற ஜனங்களிடமிருந்தும் எசேக்கியாவையும், அவனது ஜனங்களையும் காப்பாற்றினார். கர்த்தர் எசேக்கியா மீதும் எருசலேம் ஜனங்கள் மீதும் அக்கறைக்கொண்டார்.

23 எருசலேமில் உள்ள கர்த்தருடைய ஆலயத்திற்கு பலரும் காணிக்கைகளைக் கொண்டு வந்தனர். அவர்கள் யூதா அரசனாகிய எசேக்கியாவுக்கும் விலையுயர்ந்த பொருட்களைக் கொண்டுவந்தனர். அந்நாளிலிருந்து அனைத்து நாடுகளும் எசேக்கியாவை மதித்தன.

24 அந்நாட்களில் எசேக்கியா நோய்வாய்ப் பட்டு மரணப்படுக்கையில் விழுந்தான். அவன் கர்த்தரிடம் ஜெபித்தான். கர்த்தர் எசேக்கியாவிடம் பேசினார். அவனுக்கு ஒரு அடையாளம் காட்டினார்.

25 ஆனால் எசேக்கியாவின் மனதில் கர்வ உணர்வு தோன்றியது. எனவே அவன் தேவனுடைய கருணைக்காக அவருக்கு நன்றி செலுத்தவில்லை. இதனால் தேவனுக்கு எசேக்கியாவின் மீது கோபம் ஏற்பட்டது. அதோடு யூதா மற்றும் எருசலேம் ஜனங்கள் மீதும் கோபம் ஏற்பட்டது.

26 ஆனால் எசேக்கியாவும் எருசலேமில் உள்ள ஜனங்களும் தங்கள் இதயத்தையும், வாழ்வையும் மாற்றிக்கொண்டார்கள். அவர்கள் பணிவுள்ளவர்கள் ஆனார்கள். பெருமை உணர்வுக்கொள்வதை நிறுத்தினார்கள். அவர்கள் மேல் கர்த்தருக்கு எசேக்கியா உயிரோடு இருந்தவரை கோபம் வரவில்லை.

27 எசேக்கியாவுக்கு ஏராளமான செல்வமும், சிறப்பும் இருந்தது. அவன் வெள்ளி, தங்கம், விலைமதிப்புள்ள நகைகள், நறுமணப்பொருட்கள், கேடயங்கள் மற்றும் அனைத்துப் பொருட்களைப் பண்டக சாலைகள் கட்டி சேமித்தான்.

28 ஜனங்கள் அனுப்பித் தரும் உணவு தானியங்களையும், புதிய திராட்சைரசத்தையும், எண்ணெயையும் சேகரித்து வைக்கும் கட்டிடங்கள் அவனிடம் இருந்தன. அவன் ஆடுகளுக்கும் மாடுகளுக்கும் தொழுவங்களை அமைத்தான்.

29 எசேக்கியா அநேக நகரங்களையும் கட்டினான். அவன் ஏராளமான ஆட்டு மந்தைகளையும், மாட்டு மந்தைகளையுங்கூட பெற்றான். கர்த்தர் அவனுக்கு ஏராளமான செல்வத்தைக் கொடுத்தார்.

30 எசேக்கியா கீகோன் என்னும் ஆற்றிலே அணையைக் கட்டினான். அந்த நீரை மேற்கேயிருந்து தாழ தாவீதின் நகரத்திற்குத் திரும்பினான். அவனது செயல்கள் அனைத்திலும் வெற்றிபெற்றான்.

31 ஒருமுறை பாபிலோனில் உள்ள தலைவர்கள் எசேக்கியாவுக்குத் தூதுவர்களை அனுப்பினார்கள். அவர்கள் தம் நாட்டில் ஏற்பட்ட ஒரு புதுவிதமான அடையாளத்தைப் பற்றிக் கேட்டனர். அப்போது தேவன் அவனைத் தனியாகவிட்டார். அவன் இதயத்தில் உண்டான அத்தனையையும் அறியும்படி அவனைச் சோதித்தார்.

32 எசேக்கியா செய்த மற்ற செயல்களும், அவன் எவ்வாறு கர்த்தரை நேசித்தான் என்ற விபரமும் 'ஆமோத்தின் மகனாகிய ஏசாயாவின் தரிசனம்' என்ற புத்தகத்திலும் யூதா மற்றும் 'இஸ்ரவேல் அரசர்களின் வரலாறு' என்ற புத்தகத்திலும் எழுதப்பட்டுள்ளன.

33 எசேக்கியா மரித்தான். அவன்தன் முற்பிதாக்களோடு அடக்கம் செய்யப்பட்டான். தாவீதின் முற்பிதாக்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைகள் உள்ள மலைப் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டான். எசேக்கியா மரித்ததும் யூதா மற்றும் எருசலேமில் வாழ்ந்த ஜனங்கள் அனைவரும் அவனுக்கு மரியாதைச் செய்தார்கள். மனாசே என்பவன் அவனுக்குப் பிறகு எசேக்கியாவின் இடத்தில் புதிய அரசன் ஆனான். மனாசே எசேக்கியாவின் மகன்.

2 நாளாகமம் 32 ERV IRV TRV