1 எரேமியாவிற்கு கர்த்தரிடமிருந்து வார்த்தை வந்தது. நேபுகாத்நேச்சார் பாபிலோனின் அரசனாக இருந்தபோது வார்த்தை வந்தது. அவன் எருசலேமிற்கும் அதைச்சுற்றிலும் உள்ள நகரங்களுக்கும் எதிராகச் சண்டையிட்டு கொண்டிருந்தான். நேபுகாத்நேச்சார் தன்னோடு தனது படை முழுவதையும் ஜனங்களிடமும் அவனுடைய ஆளுகைக்குட்பட்ட பூமியின் சகல இராஜ்யங்களுக்கும் உரிய படைகளையும் வைத்திருந்தான்.
2 இதுதான் செய்தி: “இதைத்தான் கர்த்தரும் இஸ்ரவேல் ஜனங்களின் தேவனுமானவர் கூறுகிறார்: எரேமியா, யூதாவின் அரசனான சிதேக்கியாவிடம் போ, அவனிடம் இந்தச் செய்தியைக் கொடு, ‘சிதேக்கியா, இதைத்தான் கர்த்தர் கூறுகிறார். நான் விரைவில் பாபிலோனின் அரசனுக்கு எருசலேம் நகரத்தைக் கொடுப்பேன். அவன் அதனை எரிப்பான்.
3 சிதேக்கியா, பாபிலோன் அரசனிடமிருந்து நீ தப்பிக்கவே முடியாது. நீ உறுதியாகப் பிடிபடுவாய். அவனிடம் கொடுக்கப்படுவாய். பாபிலோன் அரசனை நீயே உன் சொந்தக் கண்களால் பார்ப்பாய். அவன் உன்னோடு நேருக்கு நேராகப் பேசுவான். நீ பாபிலோனிடம் போவாய்.
4 ஆனால் கர்த்தருடைய வாக்குறுதிபற்றி யூதாவின் அரசனான சிதேக்கியாவே கவனி. இதுதான் கர்த்தர் உன்னைப்பற்றி சொன்னது. நீ வாளால் கொல்லப்படமாட்டாய்.
5 நீ சமாதானமான வழியில் மரிப்பாய். ஜனங்கள் இறுதி சடங்குக்கான நெருப்பை உருவாக்கி நீ அரசனாகு முன் ஆண்ட அரசர்களான உன் முற்பிதாக்களைப் பெருமைபடுத்தினார்கள். இதே வழியில், உன்னைப் பெருமைபடுத்தவும் ஜனங்கள் இறுதி சடங்கு நெருப்பை மூட்டுவார்கள். அவர்கள் உனக்காக அழுவார்கள். அவர்கள் சோகத்தோடு, “ஓ எஜமானனே” என்பார்கள். நான் நானே உமக்கு இந்த வாக்குறுதியைச் செய்கிறேன்’” இந்த வார்த்தைக் கர்த்தரிடமிருந்து வந்தது.
6 எனவே, எரேமியா இச்செய்தியைக் கர்த்தரிடமிருந்து எருசலேமில் சிதேக்கியாவிற்குக் கொடுத்தான்.
7 பாபிலோனது அரசனின் படை எருசலேமிற்கு எதிராகச் சண்டையிட்டபோது இது இருந்தது. பாபிலோனின் படையும் யூதாவின் கைப்பற்றப்படாத நகரங்களுக்கு எதிராகச் சண்டையிட்டனர். லாகீசும் அசெக்காவும் அந்நகரங்களாகும். யூதா தேசத்தில் மீதியுள்ள கோட்டைகளால் அமைந்த நகரங்கள் இவை.
8 அனைத்து எருசலேம் ஜனங்களோடும் சிதேக்கியா அரசன் அனைத்து எபிரெய அடிமைகளுக்கும் விடுதலை தருவதாக ஒப்பந்தம் செய்திருந்தான். சிதேக்கியா அந்த ஒப்பந்தம் செய்த பிறகு கர்த்தரிடமிருந்து எரேமியாவிற்கு வார்த்தை வந்தது.
9 ஒவ்வொருவனும் எபிரெய அடிமையையும் விடுதலை செய்யவேண்டும். ஆணும் பெண்ணுமான எபிரெய அடிமைகள் விடுதலை செய்யப்படவேண்டும். எவரும் இன்னொரு யூதா கோத்திரத்தில் உள்ளவனை அடிமையாக வைத்திருக்கக்கூடாது.
10 எனவே யூதாவில் உள்ள அனைத்துத் தலைவர்களும் ஜனங்களனைவரும் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டனர். ஒவ்வொருவனும் ஆண் மற்றும் பெண் அடிமைகளை விடுதலை செய்வார்கள். அவர்களை இனிமேலும் அடிமையாக வைத்திருக்க முடியாது. ஒவ்வொருவரும் ஏற்றுக்கொண்டனர். எனவே, அனைத்து அடிமைகளும் விடுதலை செய்யப்பட்டனர்.
11 ஆனால், அதற்குப் பிறகு, அடிமைகளை வைத்து இருந்த ஜனங்கள் தங்கள் மனதை மாற்றிக்கொண்டனர். எனவே, விடுவிக்கப்பட்ட ஜனங்களை எடுத்து மீண்டும் அடிமைகளாக்கிக் கொண்டனர்.
12 பிறகு கர்த்தரிடமிருந்து எரேமியாவிற்கு வார்த்தை வந்தது.
13 “எரேமியா, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொன்னது இதுதான்: ‘நான் உங்கள் முற்பிதாக்களை அடிமையாயிருந்த எகிப்துக்கு வெளியே கொண்டுவந்தேன். நான் அதைச் செய்த போது நான் அவர்களோடு உடன்படிக்கைச் செய்துக்கொண்டேன்.
14 நான் உங்கள் முற்பிதாக்களுக்குச் சொன்னேன். “ஒவ்வொரு ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒவ்வொருவனும் தனது எபிரெய அடிமையையும் விடுவிக்கவேண்டும். உங்களிடம் ஒரு எபிரெய அடிமை தன்னையே விற்றுக்கொண்டவன் இருந்தால் அவன் உனக்கு ஆறு ஆண்டுகள் சேவை செய்த பிறகு நீ அவனை விடுதலை செய்ய வேண்டும்.” ஆனால், உங்கள் முற்பிதாக்கள் என்னை கவனிக்கவில்லை. என் பேச்சைக் கேட்கவில்லை.
15 கொஞ்ச காலத்துக்கு முன் சரியானது எதுவோ அதனைச் செய்ய உங்கள் மனதை மாற்றினீர்கள். உங்களில் ஒவ்வொருவரும் அடிமையாயிருந்த எபிரெய நபருக்கு விடுதலை கொடுத்தீர்கள். என் நாமத்தால் அழைக்கப்படுகிற ஆலயத்தில் எனக்கு முன் ஒரு உடன்படிக்கை நீங்கள் செய்தீர்கள்.
16 ஆனால் இப்போது, நீங்கள் உங்கள் மனங்களை மாற்றியுள்ளீர்கள். நீங்கள் என் நாமத்தை மகிமைப்படுத்தவில்லை என்பதைக் காட்டினீர்கள். எப்படி நீங்கள் இதனைச் செய்தீர்கள். நீங்கள் விடுவித்திருக்கிற ஒவ்வொருவரும் ஆண் மற்றும் பெண் அடிமைகளைத் திரும்ப எடுத்திருக்கிறீர்கள். அவர்களை மீண்டும் அடிமைகளாகும்படி வற்புறுத்தியிருக்கிறீர்கள்.’
17 “எனவே இதுதான் கர்த்தர் சொல்கிறது: ‘ஜனங்களாகிய நீங்கள் எனக்கு அடிபணியவில்லை. நீங்கள் உங்கள் எபிரெய அடிமைகளுக்கு விடுதலை கொடுக்கவில்லை. ஏனென்றால் நான் விடுதலை கொடுப்பேன் என்ற உங்கள் உடன்படிக்கையைக் காக்கவில்லை, இது கர்த்தருடைய வார்த்தை. உங்களைக் கொல்வதற்காக வாள், பயங்கர நோய், பசி ஆகியவற்றுக்கு விடுதலை கொடுப்பேன். அவர்கள் உன்னைப்பற்றி கேள்விப்படும்போது, நான் உன்னைப் பூமியிலுள்ள இராஜ்யங்களிலேயே அஞ்சத்தக்க உதாரணமாகச் செய்வேன்.
18 எனக்கு முன்னால் செய்த வாக்குறுதியை காப்பாற்றாத, உடன்படிக்கையை முறித்த மனிதர்களை நான் ஒப்புக்கொடுப்பேன். அந்த மனிதர்கள் ஒரு கன்றுகுட்டியை இரண்டாக எனக்கு முன் வெட்டினார்கள்: இரண்டு துண்டுகளுக்கு இடையில் நடந்தனர்.
19 கன்றின் இரண்டு துண்டுகளுக்கு இடையில் நடந்தவர்கள் இவர்கள்தான். யூதா மற்றும் எருசலேமின் தலைவர்கள், சபையின் முக்கியமான அதிகாரிகள், ஆசாரியர்கள் மற்றும் தேசத்தின் ஜனங்கள்.
20 எனவே, நான் அந்த ஜனங்களை அவர்களது பகைவர்களிடமும் அவர்களைக் கொல்ல விரும்புகிற ஒவ்வொருவரிடமும் கொடுப்பேன். அந்த ஜனங்களின் உடல்கள் வானத்துப் பறவைகளுக்கும் காட்டு மிருகங்களுக்கும் உணவாகும்.
21 நான் யூதாவின் அரசனான சிதேக்கியாவையும் அவனது அலுவலக அதிகாரிகளையும் அவர்களது பகைவருக்கும் அவர்களைக் கொல்ல விரும்புகிற ஒவ்வொருவருக்கும் கொடுப்பேன். நான் சிதேக்கியாவையும் அவனது ஜனங்களையும் பாபிலோன் அரசனது படைக்கு, அப்படை எருசலேமை விட்டு விலகி இருந்தாலும் கொடுப்பேன்.
22 ஆனால், நான் பாபிலோன் படை எருசலேமிற்குத் திரும்பி வருமாறு ஆணையிடுவேன்’ என்று கர்த்தர் சொல்லுகிறார். ‘அப்படை எருசலேமிற்கு எதிராகச் சண்டையிடும். அவர்கள் அதைப் பிடித்து நெருப்பிட்டு எரித்துப் போடுவார்கள். நான் யூதா தேசத்திலுள்ள நகரங்களை அழித்துப்போடுவேன். அந்நகரங்கள் வெறுமை வனாந்தரங்கள் ஆகும். ஜனங்கள் எவரும் வாழமாட்டார்கள்.’”
எரேமியா 34 ERV IRV TRV