எரேமியா 34

fullscreen1 பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரும், அவனுடைய சர்வசேனையும், அவன் ஆளுகைக்குட்பட்ட பூமியின் சகல ராஜ்யங்களும், சகல ஜனங்களும் எருசலேமுக்கும் அதைச் சேர்ந்த சகல பட்டணங்களுக்கும் விரோதமாக யுத்தம்பண்ணுகையில் எரேமியாவுக்குக் கர்த்தரால் உண்டான வார்த்தை:

fullscreen2 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: நீ போய், யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவினிடத்தில் பேசி, அவனுக்குச் சொல்லவேண்டியது: இதோ, நான் இந்த நகரத்தைப் பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கிறேன்; அவன் இதை அக்கினியால் சுட்டெரிப்பான்.

fullscreen3 நீ அவன் கைக்குத் தப்பிப்போகாமல், நிச்சயமாய்ப் பிடிபட்டு, அவன் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவாய்; உன் கண்கள் பாபிலோன் ராஜாவின் கண்களைக் காணும்; அவன் வாய் உன் வாயோடே பேசும்; நீ பாபிலோனுக்குப் போவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

fullscreen4 ஆகிலும் யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவே, கர்த்தருடைய வார்த்தையைக் கேள்; உன்னைக் குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ பட்டயத்தாலே சாவதில்லை.

fullscreen5 சமாதானத்தோடே சாவாய்; உனக்கு முன்னிருந்த ராஜாக்களாகிய உன் பிதாக்களினிமித்தம் கந்தவர்க்கங்களைக் கொளுத்தினதுபோல உன்னிமித்தமும் கொளுத்தி, ஐயோ! ஆண்டவனே, என்று சொல்லி, உனக்காகப் புலம்புவார்கள்; இது நான் சொன்ன வார்த்தையென்று கர்த்தர் உரைத்தார் என்று சொல் என்றார்.

fullscreen6 இந்த வார்த்தைகளையெல்லாம் தீர்க்கதரிசியாகிய எரேமியா எருசலேமிலே யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவினிடத்தில் சொன்னான்.

fullscreen7 அப்பொழுது பாபிலோன் ராஜாவின் சேனைகள் எருசலேமுக்கு விரோதமாகவும் மீந்த பட்டணங்களாகிய லாகீசுக்கும், அசெக்காவுக்கும் விரோதமாகவும் யுத்தம்பண்ணிக்கொண்டிருந்தது; யூதாவின் அரணிப்பான பட்டணங்களில் இவைகளே மீந்திருந்தவைகள்.

fullscreen8 ஒருவனும் யூதஜாதியானாகிய தன் சகோதரனை அடிமைகொள்ளாதபடிக்கு, அவனவன் எபிரெயனாகிய தன் வேலைக்காரனையும், எபிரெய ஸ்திரீயாகிய தன் வேலைக்காரியையும் சுயாதீனராக அனுப்பிவிடவேண்டுமென்று அவர்களுக்கு விடுதலையைக் கூறும்படி,

fullscreen9 ராஜாவாகிய சிதேக்கியா எருசலேமின் இருக்கிற எல்லா ஜனத்தோடும் உடன்படிக்கை பண்ணினபின்பு, எரேமியாவுக்குக் கர்த்தரால் வார்த்தை உண்டாயிற்று.

fullscreen10 ஒவ்வொருவனும் தன் வேலைக்காரனையும் தன் வேலைக்காரியையும் இனி அடிமை கொள்ளாதபடிக்கு, சுயாதீனராக அனுப்பிவிடவேண்டுமென்று உடன்படிக்கைக்கு உட்பட்ட எல்லாப் பிரபுக்களுக்கும் எல்லா ஜனங்களும் கேட்டபோது, செவிகொடுத்து அவர்களை அனுப்பிவிட்டார்கள்.

fullscreen11 ஆனாலும் அதற்குப்பின்பு அவர்கள் மாறாட்டம்பண்ணி, தாங்கள் சுயாதீனராக அனுப்பிவிட்ட வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும் மறுபடியும் அழைப்பித்து, அவர்களை வேலைக்காரரும் வேலைக்காரிகளுமாயிருக்கும்படி, அடிமைப்படுத்திக்கொண்டார்கள்.

fullscreen12 ஆதலால், கர்த்தராலே எரேமியாவுக்கு வார்த்தையுண்டாகி, அவர்:

fullscreen13 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், அவனவன் தனக்கு விற்கப்பட்ட எபிரெயனாகிய தன் சகோதரனை முடிவிலே நீங்கள் ஏழாம் வருஷத்திலே அனுப்பிவிடவேண்டும் என்றும், அவன் உனக்கு ஆறுவருஷம் அடிமையாயிருந்தபின்பு, அவனை உன்னிடத்தில் வைக்காமல் சுயாதீனனாக அனுப்பிவிடவேண்டும் என்றும்,

fullscreen14 நான் உங்கள் பிதாக்களை அடிமை வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின நாளிலே அவர்களோடே உடன்படிக்கைபண்ணினேன்; ஆனாலும் உங்கள் பிதாக்கள் என் சொல்லைக் கேளாமலும், தங்கள் செவியைச் சாயாமலும் போனார்கள்.

fullscreen15 நீங்களோ, இந்நாளிலே மனந்திரும்பி, அவனவன் தன் அயலானுக்கு விடுதலையைக் கூறின விஷயத்திலே என் பார்வைக்குச் செம்மையானதைச் செய்து, என் நாமம் தரிக்கப்பட்ட ஆலயத்திலே இதற்காக என் முகத்துக்குமுன் உடன்படிக்கைபண்ணியிருந்தீர்கள்.

fullscreen16 ஆனாலும் நீங்கள் மாறாட்டம்பண்ணி, என் நாமத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, நீங்கள் அவனவன் விடுதலையாகவும் சுயாதீனனாகவும் அனுப்பிவிட்ட தன் வேலைக்காரனையும் வேலைக்காரியையும் திரும்ப அழைத்து வந்து, அவர்களை உங்களுக்கு வேலைக்காரரும் வேலைக்காரிகளுமாயிருக்கும்படி அடிமைப்படுத்தினீர்கள்.

fullscreen17 ஆகையால் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நீங்கள் அவனவன் தன் சகோதரனுக்கும் அவனவன் தன் அயலானுக்கும் விடுதலையைக் கூறினவிஷயத்தில் என் சொல்லைக் கேளாமற்போனீர்களே; இதோ நான் உங்களைப் பட்டயத்துக்கும், கொள்ளைநோய்க்கும், பஞ்சத்துக்கும் ஒப்புக்கொடுக்கிற விடுதலையை உங்களுக்குக் கூறுகிறேன்; பூமியின் ராஜ்யங்களிலெல்லாம் அலைகிறதற்கும் உங்களை ஒப்புக்கொடுப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

fullscreen18 என் முகத்துக்குமுன் பண்ணின உடன்படிக்கையின் வார்த்தைகளை நிறைவேற்றாமல், என் உடன்படிக்கையை மீறின மனுஷரை நான் துண்டங்களின் நடுவாகக் கடந்துபோகும்படி அவர்களை இரண்டாகத் துண்டித்த கன்றுக்குட்டியைப்போல் ஆக்குவேன்.

fullscreen19 கன்றுக்குட்டியின் துண்டுகளின் நடுவே கடந்துபோன யூதாவின் பிரபுக்களையும், எருசலேமின் பிரபுக்களையும், பிரதானிகளையும், ஆசாரியர்களையும், தேசத்தின் சகல ஜனங்களையும் அப்படிச் செய்து,

fullscreen20 நான் அவர்களை அவர்கள் சத்துருக்களின் கையிலும், அவர்கள் பிராணனை வாங்கத்தேடுகிறவர்களின் கையிலும் ஒப்புக்கொடுப்பேன்; அவர்களுடைய பிரேதம் ஆகாயத்தின் பறவைகளுக்கும் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகும்.

fullscreen21 யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவையும் அவனுடைய பிரபுக்களையும் அவர்கள் சத்துருக்களின் கையிலும் அவர்கள் பிராணனை வாங்கத் தேடுகிறவர்களின் கையிலும், உங்களை விட்டுப் பேர்ந்துபோன பாபிலோன் ராஜாவினுடைய சேனைகளின் கையிலும் ஒப்புக்கொடுப்பேன்.

fullscreen22 இதோ, நான் கட்டளைகொடுத்து, அவர்களை இந்த நகரத்துக்குத் திரும்பப்பண்ணுவேன்; அவர்கள் அதற்கு விரோதமாக யுத்தம்பண்ணி, அதைப் பிடித்து, அதை அக்கினியால் சுட்டெரிப்பார்கள்; யூதாவின் பட்டணங்களையும், ஒருவரும் அவைகளில் குடியிராதபடிப் பாழாய்ப்போகப்பண்ணுவேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.