நியாயாதிபதிகள் 11

fullscreen1 கீலேயாத்தியனான யெப்தா பலத்த பராக்கிரமசாலியாயிருந்தான்; அவன் பரஸ்திரீயின் குமாரன்; கிலெயாத் அவனைப் பெற்றான்.

fullscreen2 கிலெயாத்தின் மனைவியும் அவனுக்குக் குமாரர்களைப் பெற்றாள்; அவன் மனைவி பெற்ற குமாரர் பெரியவர்களான பின்பு, அவர்கள் யெப்தாவை நோக்கி: உனக்கு எங்கள் தகப்பன் வீட்டிலே சுதந்தரம் இல்லை; நீ அந்நிய ஸ்திரீயின் மகன் என்று சொல்லி அவனைத் துரத்தினார்கள்.

fullscreen3 அப்பொழுது யெப்தா: தன் சகோதரரை விட்டு ஓடிப்போய், தோப்தேசத்திலே குடியிருந்தான்; வீணரான மனுஷர் யெப்தாவோடே கூடிக்கொண்டு, அவனோடேகூட யுத்தத்திற்குப் போவார்கள்.

fullscreen4 சில நாளைக்குப்பின்பு, அம்மொன் புத்திரர் இஸ்ரவேலின் மேல் யுத்தம் பண்ணினார்கள்.

fullscreen5 அவர்கள் இஸ்ரவேலின்மேல் யுத்தம் பண்ணும்போது கீலேயாத்தின் மூப்பர் யெப்தாவைத் தோப்தேசத்திலிருந்து அழைத்துவரப்போய்,

fullscreen6 யெப்தாவை நோக்கி: நீ வந்து, நாங்கள் அம்மோன் புத்திரரோடு யுத்தம் பண்ண எங்கள் சேனாபதியாயிருக்க வேண்டும் என்றார்கள்.

fullscreen7 அதற்கு யெப்தா கீலேயாத்தி மூப்பரைப் பார்த்து: நீங்கள் அல்லவா என்னைப் பகைத்து, என் தகப்பன் வீட்டிலிருந்து என்னைத் துரத்தினவர்கள்? இப்பொழுது உங்களுக்கு ஆபத்து நேரிட்டிருக்கிற சமயத்தில் நீங்கள் என்னிடத்தில் ஏன் வருகிறீர்கள் என்றான்.

fullscreen8 அதற்குக் கீலேயாத்தின் மூப்பர் யெப்தாவை நோக்கி: நீ எங்களுடனேகூட வந்து, அம்மோன் புத்திரரோடு யுத்தம்பண்ணி, கீலேயாத்தின் குடிகளாகிய எங்கள் அனைவர்மேலும் தலைவனாயிருக்க வேண்டும்; இதற்காக இப்பொழுது உன்னிடத்தில் வந்தோம் என்றார்கள்.

fullscreen9 அதற்கு யெப்தா: அம்மோன் புத்திரரோடே யுத்தம்பண்ண, நீங்கள் என்னைத் திரும்ப அழைத்துப்போனபின்பு, கர்த்தர் அவர்களை என் முன்னிலையாய் ஒப்புக்கொடுத்தால், என்னை உங்களுக்குத் தலைவனாய் வைப்பீர்களா என்று கீலேயாத்தின் மூப்பரைக் கேட்டான்.

fullscreen10 கீலேயாத்தின் மூப்பர் யெப்தாவைப் பார்த்து: நாங்கள் உன் வார்த்தையின்படியே செய்யாவிட்டால், கர்த்தர் நமக்கு நடுநின்று கேட்பாராக என்றார்கள்.

fullscreen11 அப்பொழுது யெப்தா கீலேயாத்தின் மூப்பரோடே கூடப்போனான்; ஜனங்கள் அவனைத் தங்கள்மேல் தலைவனும் சேனாபதியுமாக வைத்தார்கள். யெப்தா தன் காரியங்களையெல்லாம் மிஸ்பாவிலே கர்த்தருடைய சந்நிதியிலே சொன்னான்.

fullscreen12 பின்பு யெப்தா அம்மோன் புத்திரரின் ராஜாவினிடத்திற்கு ஸ்தானாபதிகளை அனுப்பி: நீ என் தேசத்தில் எனக்கு விரோதமாக யுத்தம்பண்ண வருகிறதற்கு, எனக்கும் உனக்கும் என்ன வழக்கு இருக்கிறது என்று கேட்கச்சொன்னான்.

fullscreen13 அம்மோன் புத்திரரின் ராஜா யெப்தாவின் ஸ்தானாபதிகளை நோக்கி: இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வருகிறபோது, அர்னோன் துவக்கி யாபோக்மட்டும், யோர்தான்மட்டும் இருக்கிற என் தேசத்தைக் கட்டிக்கொண்டார்களே; இப்பொழுது அதை எனக்குச் சமாதானமாய்த் திரும்பக்கொடுத்துவிட வேண்டும் என்று சொல்லுங்கள் என்றான்.

fullscreen14 யெப்தா மறுபடியும் அம்மோன் புத்திரரின் ராஜாவினிடத்திற்கு ஸ்தானாபதிகளை அனுப்பி, அவனுக்குச் சொல்லச் சொன்னதாவது:

fullscreen15 யெப்தா சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேலர் மோவாபியரின் தேசத்தையாகிலும், அம்மோன் புத்திரரின் தேசத்தையாகிலும் கட்டிக்கொண்டதில்லையே.

fullscreen16 இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வருகிறபோது, வனாந்தரத்தில் சிவந்த சமுத்திர மட்டும் நடந்து, பின்பு காதேசுக்கு வந்து,

fullscreen17 இஸ்ரவேலர் ஏதோமின் ராஜாவினிடத்திற்கு ஸ்தானாபதிகளை அனுப்பி: நாங்கள் உன் தேசத்துவழியாய்க் கடந்து போகட்டும் என்று சொல்லச்சொன்னார்கள்; அதற்கு ஏதோமின் ராஜா செவிகொடுக்கவில்லை; அப்படியே மோவாபின் ராஜாவிடத்திற்கும் அனுப்பினார்கள்; அவனும் சம்மதிக்கவில்லை. ஆதலால் இஸ்ரவேலர் காதேசிலே தரித்திருந்து,

fullscreen18 பின்பு வனாந்தரவழியாய் நடந்து ஏதோம் தேசத்தையும் மோவாப் தேசத்தையும் சுற்றிப்போய், மோவாபின் தேசத்திற்குக் கிழக்கே வந்து, மோவாபின் எல்லைக்குள் பிரவேசியாமல், மோவாபின் எல்லையான அர்னோன் நதிக்கு அப்பாலே பாளயமிறங்கினார்கள்.

fullscreen19 அப்பொழுது இஸ்ரவேலர் எஸ்போனில் ஆளுகிற சீகோன் என்னும் எமோரியரின் ராஜாவினிடத்திற்கு ஸ்தானாபதிகளை அனுப்பி: நாங்கள் உன் தேசத்து வழியாய் எங்கள் ஸ்தானத்திற்குக் கடந்துபோக இடங்கொடு என்று சொல்லச்சொன்னார்கள்.

fullscreen20 சீகோன் இஸ்ரவேலரை நம்பாததினால், தன் எல்லையைக் கடந்துபோகிறதற்கு இடங்கொடாமல் தன் ஜனங்களையெல்லாம் கூட்டி, யாகாசிலே பாளயமிறங்கி, இஸ்ரவேலரோடே யுத்தம் பண்ணினான்.

fullscreen21 அப்பொழுது இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சீகோனையும் அவனுடைய எல்லா ஜனங்களையும் இஸ்ரவேலரின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவர்களை முறிய அடித்தார்கள்; அப்படியே இஸ்ரவேலர் அந்த தேசத்திலே குடியிருந்த எமோரியரின் சீமையையெல்லாம் பிடித்து, அர்னோன் துவக்கி,

fullscreen22 யாபோக்மட்டும் வனாந்தரம் துவக்கி யோர்தான்மட்டும் இருக்கிற எமோரியரின் எல்லையையெல்லாம் சுதந்தரமாய்க் கட்டிக்கொண்டார்கள்.

fullscreen23 இப்படி இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் எமோரியரைத் தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு முன்பாகத் துரத்தியிருக்க, நீர் அந்த தேசத்தைக் கட்டிக்கொள்ளத்தகுமா?

fullscreen24 உம்முடைய தேவனாகிய காமோஸ் உமக்கு முன்பாகத் துரத்துகிறவர்களின் தேசத்தை நீர் கட்டிக்கொள்ளமாட்டீரோ? அப்படியே எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு முன்பாகத் துரத்துகிறவர்களின் தேசத்தையெல்லாம் நாங்களும் கட்டிக்கொள்ளுகிறோம்.

fullscreen25 மேலும் சிப்போரின் குமாரனாகிய பாலாக் என்னும் மோவாபின் ராஜாவைப் பார்க்கிலும் உமக்கு அதிக நியாயம் உண்டோ? அவன் இஸ்ரவேலோடே எப்போதாகிலும் வழக்காடினானா? எப்போதாகிலும் அவர்களுக்கு விரோதமாக யுத்தம் பண்ணினானா?

fullscreen26 இஸ்ரவேலர் எஸ்போனிலும் அதின் கிராமங்களிலும், ஆரோவேரிலும் அதின் கிராமங்களிலும், அர்னோன் நதியருகான எல்லா ஊர்களிலும், முந்நூறு வருஷம் குடியிருக்கையில், இவ்வளவுகாலமாய் நீங்கள் அதைத் திருப்பிக்கொள்ளாதே போனதென்ன?

fullscreen27 நான் உமக்கு விரோதமாய்க் குற்றம் செய்யவில்லை; நீர் எனக்கு விரோதமாய் யுத்தம் பண்ணுகிறதினால் நீர் தான் எனக்கு அநியாயம் செய்கிறீர்; நியாயாதிபதியாகிய கர்த்தர் இன்று இஸ்ரவேல் புத்திரருக்கும் அம்மோன் புத்திரருக்கும் நடுநின்று நியாயம் தீர்க்கக்கடவர் என்று சொல்லி அனுப்பினான்.

fullscreen28 ஆனாலும் அம்மோன் புத்திரரின் ராஜா தனக்கு யெப்தா சொல்லியனுப்பின வார்த்தைகளுக்குச் செவிகொடாதே போனான்.

fullscreen29 அப்பொழுது கர்த்தருடைய ஆவி யெப்தாவின் மேல் இறங்கினார்; அவன் கீலேயாத்தையும் மனாசே நாட்டையும் கடந்துபோய், கீலேயாத்திலிருக்கிற மிஸ்பாவுக்கு வந்து, அங்கேயிருந்து அம்மோன் புத்திரருக்கு விரோதமாகப் போனான்.

fullscreen30 அப்பொழுது யெப்தா கர்த்தருக்கு ஒரு பொருத்தனையைப் பண்ணி: தேவரீர் அம்மோன் புத்திரரை என் கையில் ஒப்புக்கொடுக்கவே ஒப்புக்கொடுத்தால்,

fullscreen31 நான் அம்மோன் புத்திரரிடத்திலிருந்து சமாதானத்தோடே திரும்பி வரும்போது, என் வீட்டு வாசற்படியிலிருந்து எனக்கு எதிர்கொண்டு வருவது எதுவோ அது கர்த்தருக்கு உரியதாகும். அதைச் சர்வாங்க தகனபலியாகச் செலுத்துவேன் என்றான்.

fullscreen32 யெப்தா அம்மோன் புத்திரரின்மேல் யுத்தம்பண்ண, அவர்களுக்கு விரோதமாய்ப் புறப்பட்டுப்போனான்; கர்த்தர் அவர்களை அவன் கையில் ஒப்புக்கொடுத்தார்.

fullscreen33 அவன் அவர்களை ஆரோவேர் துவக்கி மின்னித்திற்குப் போகுமட்டும், திராட்சத்தோட்டத்து நிலங்கள் வரைக்கும், மகா சங்காரமாய் முறிய அடித்து, இருபது பட்டணங்களைப் பிடித்தான்; இப்படி அம்மோன் புத்திரர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் தாழ்த்தப்பட்டார்கள்.

fullscreen34 யெப்தா மிஸ்பாவிலிருக்கிற தன் வீட்டுக்கு வருகிறபோது, இதோ, அவன் குமாரத்தி தம்புரு வாசித்து நடனஞ்செய்து, அவனுக்கு எதிர்கொண்டு வந்தாள்; அவள் அவனுக்கு ஒரே பிள்ளையானவள்; அவளையல்லாமல் அவனுக்குக் குமாரனும் இல்லை குமாரத்தியும் இல்லை.

fullscreen35 அவன் அவளைக் கண்டவுடனே தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: ஐயோ! என் மகளே, என்னை மிகவும் மனமடியவும் கலங்கவும் பண்ணுகிறாய்; நான் கர்த்தரை நோக்கி என் வாயைத் திறந்து சொல்லிவிட்டேன்; அதை நான் மாற்றக் கூடாது என்றான்.

fullscreen36 அப்பொழுது அவள்: என் தகப்பனே, நீர் கர்த்தரை நோக்கி உம்முடைய வாயைத் திறந்து பேசினீரல்லவோ? அம்மோன் புத்திரராகிய, உம்முடைய சத்துருக்களுக்கு நீதியைச் சரிக்கட்டும் ஜெயத்தைக் கர்த்தர் உமக்குக் கட்டளையிட்டபடியினால், உம்முடைய வாயிலிருந்து புறப்பட்டபடியே எனக்குச் செய்யும் என்றாள்.

fullscreen37 பின்னும் அவன் தன் தகப்பனை நோக்கி: நீர் எனக்கு ஒரு காரியம் செய்ய வேண்டும்; நான் மலைகளின்மேல் போய்த்திரிந்து, நானும் என் தோழிமார்களும் என் கன்னிமையினிமித்தம் துக்கங்கொண்டாட, எனக்கு இரண்டுமாதம் தவணைகொடும் என்றாள்.

fullscreen38 அதற்கு அவன்: போய் வா என்று அவளை இரண்டு மாதத்திற்கு அனுப்பிவிட்டான்; அவள் தன் தோழிமார்களோடும் கூடப்போய், தன் கன்னிமையினிமித்தம் மலைகளின் மேல் துக்கங்கொண்டாடி,

fullscreen39 இரண்டுமாதம் முடிந்தபின்பு, தன் தகப்பனிடத்திற்குத் திரும்பிவந்தாள்; அப்பொழுது அவன் பண்ணியிருந்த தன் பொருத்தனையின் படி அவளுக்குச் செய்தான்; அவள் புருஷனை அறியாதிருந்தாள்.

fullscreen40 இதினிமித்தம் இஸ்ரவேலின் குமாரத்திகள் வருஷந்தோறும் போய், நாலு நாள் கீலேயாத்தியனான யெப்தாவின் குமாரத்தியைக்குறித்துப் புலம்புவது இஸ்ரவேலிலே வழக்கமாயிற்று.