1 ஏழைகள் வெற்றிபெற உதவி செய்யும் ஒருவன் பல ஆசீர்வாதங்களைப் பெறுவான். தொல்லைகள் வரும்போது கர்த்தர் அவனை மீட்பார்.
2 கர்த்தர் அவனைக் காத்து அவன் வாழ்வை மீட்பார். பூமியில் அவன் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பான். அவனை அழிக்க அவனுடைய பகைவர்களை தேவன் அனுமதிக்கமாட்டார்.
3 அவன் நோயுற்றுப் படுக்கையில் விழும்போது கர்த்தர் அவனுக்குப் பலமளிப்பார். அவன் நோயுற்றுப் படுக்கையில் இருக்கலாம், ஆனால் கர்த்தர் அவனைக் குணப்படுத்துவார்.
4 நான், “கர்த்தாவே, என்னிடம் இரக்கமாயிரும். நான் உமக்கெதிராகப் பாவம் செய்தேன். ஆனால் என்னை மன்னித்து என்னைக் குணப்படுத்தும்!” என்றேன்.
5 என் பகைவர்கள் என்னைக் குறித்துத் தீமையானவற்றைப் பேசினார்கள். அவர்கள், “அவன் எப்போது மரித்து, மறக்கப்படுவான்?” என்றார்கள்.
6 சிலர் என்னைச் சந்திக்க வந்தார்கள். ஆனால் அவர்கள் உண்மையில் நினைப்பதை என்னிடம் கூறவில்லை. அவர்கள் என்னைப்பற்றியச் செய்திகளை தெரிந்து கொள்ள வந்தார்கள். அதன் பிறகு அவர்கள் சென்று வதந்திகளை பரப்புகிறார்கள்.
7 என்னைப்பற்றிய தீயசொற்களை என் பகைவர்கள் இரகசியமாக முணுமுணுக்கிறார்கள். அவர்கள் எனக்கெதிராகத் திட்டமிடுகிறார்கள்.
8 அவர்கள், “அவன் ஏதோ தவுறு செய்தான், எனவே நோயுற்றான். அவன் குணப்படப் போவதில்லை” என்கிறார்கள்.
9 என் சிறந்த நண்பன் என்னோடு சாப்பிட்டான். நான் அவனை நம்பினேன். ஆனால் இப்போது அவனும் எனக்கெதிராகத் திரும்பிவிட்டான்.
10 எனவே கர்த்தாவே, என்னிடம் இரக்கமாயிரும். நான் குணமாகி எழுந்திருக்கட்டும், அவர்களுக்குப் பதில் அளிப்பேன்.
11 கர்த்தாவே, என் பகைவர்கள் என்னை காயப்படுத்தாதிருக்கட்டும். அப்போது நீர் என்னை ஏற்றுக்கொண்டீர் என்பதை அறிவேன்.
12 நான் களங்கமற்றிருந்தேன். நீர் எனக்கு ஆதரவளித்தீர். என்னை எழுந்திருக்கப் பண்ணி, என்றென்றும் உமக்குச் சேவை செய்யப்பண்ணும்.
13 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை வாழ்த்துங்கள். இவர் இருந்தவரும் இருக்கிறவருமானவர். ஆமென்! ஆமென்!
சங்கீதம் 41 ERV IRV TRV