அப்போஸ்தலர் 18

fullscreen1 அதன்பின்பு பவுல் அத்தேனே பட்டணத்தை விட்டு, கொரிந்து பட்டணத்துக்கு வந்து;

fullscreen2 யூதரெல்லாரும் ரோமாபுரியை விட்டுப்போகும்படி கிலவுதியுராயன் கட்டளையிட்டபடியினாலே, இத்தாலியாவிலிருந்து புதிதாய் வந்திருந்த பொந்துதேசத்தானாகிய ஆக்கில்லா என்னும் நாமுள்ள ஒரு யூதனையும் அவன் மனைவியாகிய பிரிஸ்கில்லாவையும் அங்கே கண்டு, அவர்களிடத்திற்குப் போனான்.

fullscreen3 அவர்கள் கூடாரம்பண்ணுகிற தொழிலாளிகளாயிருந்தார்கள்; தானும் அந்தத் தொழில் செய்கிறவனானபடியினாலே அவர்களிடத்தில் தங்கி வேலைசெய்துகொண்டு வந்தான்.

fullscreen4 ஓய்வுநாள் தோறும் அவன் ஜெபஆலயத்திலே சம்பாஷணைபண்ணி, யூதருக்கும் கிரேக்கருக்கும் புத்திசொன்னான்.

fullscreen5 மக்கெதோனியாவிலிருந்து சீலாவும் தீமோத்தேயும் வந்தபோது, பவுல் ஆவியில் வைராக்கியங்கொண்டு, இயேசுவே கிறிஸ்து என்று யூதருக்குத் திருஷ்டாந்தப்படுத்தினான்.

fullscreen6 அவர்கள் எதிர்த்து நின்று தூஷித்தபோது, அவன் தன் வஸ்திரங்களை உதறி: உங்கள் இரத்தப்பழி உங்கள் தலையின்மேல் இருக்கும்; நான் சுத்தமாயிருக்கிறேன்; இதுமுதல் புறஜாதியாரிடத்திற்குப் போகிறேனென்று அவர்களுடனே சொல்லி,

fullscreen7 அவ்விடத்தைவிட்டு, தேவனை வணங்குகிறவனாகிய யுஸ்து என்னும் பேருள்ள ஒருவனுடைய வீட்டிற்கு வந்தான்; அவன் வீடு ஜெபஆலயத்திற்கு அடுத்ததாயிருந்தது.

fullscreen8 ஜெபஆலயத்தலைவனாகிய கிறிஸ்பு என்பவன் தன் வீட்டார் அனைவரோடும் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவனானான். கொரிந்தியரில் அநேகரும் சுவிசேஷத்தைக் கேட்டு, விசுவாசித்து, ஞானஸ்நானம் பெற்றார்கள்.

fullscreen9 இராத்திரியிலே கர்த்தர் பவுலுக்குத் தரிசனமாகி: நீ பயப்படாமல் பேசு, மவுனமாயிராதே;

fullscreen10 நான் உன்னுடனேகூட இருக்கிறேன், உனக்குத் தீங்குசெய்யும்படி ஒருவனும் உன்மேல் கைபோடுவதில்லை; அந்தப் பட்டணத்தில் எனக்கு அநேக ஜனங்கள் உண்டு என்றார்.

fullscreen11 அவன் ஒரு வருஷமும் ஆறு மாதமும் அங்கே தங்கி, தேவவசனத்தை அவர்களுக்குள்ளே உபதேசம்பண்ணிக்கொண்டுவந்தான்.

fullscreen12 கல்லியோன் என்பவன் அகாயா நாட்டிற்கு அதிபதியானபோது, யூதர்கள் ஒருமனப்பட்டு, பவுலுக்கு விரோதமாய் எழும்பி, அவனை நியாயாசனத்துக்கு முன்பாகக் கொண்டுபோய்:

fullscreen13 இவன் வேதப்பிரமாணத்துக்கு விகற்பமாய் தேவனைச் சேவிக்குபடி மனுஷருக்குப் போதிக்கிறான் என்றார்கள்.

fullscreen14 பவுல் பேசுவதற்கு எத்தனப்படுகையில், கல்லியோன் யூதரை நோக்கி: யூதர்களே இது ஒரு அநியாயமாய், அல்லது பொல்லாத நடக்கையாயிருக்குமேயானால் நான் உங்களுக்குப் பொறுமையாய்ச் செவிகொடுப்பது நியாயமாயிருக்கும்.

fullscreen15 இது சொற்களுக்கும், நாமங்களுக்கும், உங்கள் வேதத்துக்கும் அடுத்த தர்க்கமானபடியினாலே, இப்படிப்பட்டவைகளைக்குறித்து விசாரணைசெய்ய எனக்கு மனதில்லை, நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி,

fullscreen16 அவர்களை நியாயாசனத்தினின்று துரத்திவிட்டான்.

fullscreen17 அப்பொழுது கிரேக்கரெல்லாரும் ஜெபஆலயத்தலைவனாகிய சொஸ்தேனயைப் பிடித்து, நியாயாசனத்துக்கு முன்பாக அடித்தார்கள். இவைகளில் ஒன்றையுங்குறித்துக் கல்லியோன் கவலைப்படவில்லை

fullscreen18 பவுல் அநேகநாள் அங்கே தரித்திருந்தபின்பு, சகேξதரரிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு, தனக்கு ஒரு பிரார்த்தனை உண்டாயிருந்தபடியினால் கெங்கிரேயா பட்டணத்தில் தலைச்சவரம் பண்ணிக்கொண்டு, சீரியாதேசத்துக்குப் போகக் கப்பல் ஏறினான். பிரிஸ்கில்லாளும் ஆக்கில்லாவும் அவனுடனே கூடப்போனார்கள்.

fullscreen19 அவன் எபேசு பட்டணத்துக்கு வந்தபோது, அங்கே அவர்களை விட்டு நீங்கி, ஜெபஆலயத்தில் பிரவேசித்து, யூதருடனே சம்பாஷணைபண்ணினான்.

fullscreen20 அவன் இன்னுஞ் சிலகாலம் தங்களுடனே இருக்கவேண்டுமென்று அவர்கள் கேட்டுக்கொண்டபோது, அவன் சம்மதியாமல்,

fullscreen21 வருகிற பண்டிகையிலே எப்படியாயினும் நான் எருசலேமில் இருக்கவேண்டும், தேவனுக்குச் சித்தமானால் திரும்பி உங்களிடத்திற்கு வருவேனென்று சொல்லி, அவர்களிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு, கப்பல் ஏறி, எபேசுவை விட்டுப் புறப்பட்டு,

fullscreen22 செசரியா பட்டணத்துக்கு வந்து, எருசலேமுக்குப் போய், சபையைச் சந்தித்து, அந்தியோகியாவுக்குப் போனான்.

fullscreen23 அங்கே சிலகாலம் சஞ்சரித்தபின்பு, புறப்பட்டு, கிரமமாய்க் கலாத்தியா நாட்டிலேயும் பிரிகியா நாட்டிலேயும் சுற்றித்திரிந்து, சீஷரெல்லாரையும் திடப்படுத்தினான்.

fullscreen24 அப்பொழுது அலெக்சந்திரியா பட்டணத்தில் பிறந்தவனும் சாதுரியவானும் வேதாகமங்களில் வல்லவனுமான அப்பொல்லோ என்னும் பேர்கொண்ட ஒரு யூதன் எபேசு பட்டணத்துக்கு வந்தான்.

fullscreen25 அவன் கர்த்தருடைய மார்க்கத்திலே உபதேசிக்கப்பட்டு, யோவான் கொடுத்த ஸ்நானத்தைமாத்திரம் அறிந்தவனாயிருந்து, ஆவியில் அனலுள்ளவனாய்க் கர்த்தருக்கு அடுத்தவைகளைத் திட்டமாய்ப் போதகம்பண்ணிக்கொண்டுவந்தான்.

fullscreen26 அவன் ஜெபஆலயத்தில் தைரியமாய்ப் பேசத்தொடங்கினபோது, ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் அவன் பேசுகிறதைக் கேட்டு, அவனைச் சேர்த்துக்கொண்டு, தேவனுடைய மார்க்கத்தை அதிக திட்டமாய் அவனுக்கு விவரித்துக்காண்பித்தார்கள்.

fullscreen27 பின்பு அவன் அகாயா நாட்டிற்குப் போகவேண்டுமென்றிருக்கையில், சீஷர்கள் அவனை ஏற்றுக்கொள்ளும்படி சகோதரர் அவர்களுக்கு எழுதினார்கள்.

fullscreen28 அவன் அங்கே வந்தபின்பு வெளியரங்கமாக யூதர்களுடனே பலமாய்த் தர்க்கம்பண்ணி, இயேசுவே கிறிஸ்து என்று வேதவாக்கியங்களைக்கொண்டு திருஷ்டாந்தப்படுத்தினபடியால், கிருபையினாலே விசுவாசிகளானவர்களுக்கு மிகவும் உதவியாயிருந்தான்.