ஆதியாகமம் 22

fullscreen1 இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, தேவன் ஆபிரகாமைச் சோதித்தார்; எப்படியெனில், அவர் அவனை நோக்கி: ஆபிரகாமே என்றார்; அவன்: இதோ அடியேன் என்றான்.

fullscreen2 அப்பொழுது அவர்: உன் புத்திரனும் உன் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக் கொண்டு, மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார்.

fullscreen3 ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, தன் கழுதையின்மேல் சேணங்கட்டி, தன் வேலைக்காரரில் இரண்டுபேரையும் தன் குமாரன் ஈசாக்கையும் கூட்டிக்கொண்டு, தகனபலிக்குக் கட்டைகளையும் பிளந்து கொண்டு, தேவன் தனக்குக் குறித்த இடத்திற்குப் புறப்பட்டுப்போனான்.

fullscreen4 மூன்றாம் நாளில் ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்து, தூரத்திலே அந்த இடத்தைக் கண்டான்.

fullscreen5 அப்பொழுது ஆபிரகாம் தன் வேலைக்காரரை நோக்கி: நீங்கள் கழுதையை நிறுத்தி இங்கே காத்திருங்கள், நானும் பிள்ளையாண்டானும் அவ்விடமட்டும் போய், தொழுதுகொண்டு, உங்களிடத்துக்குத் திரும்பி வருவோம் என்றான்.

fullscreen6 ஆபிரகாம் தகனபலிக்குக் கட்டைகளை எடுத்து, தன் குமாரனாகிய ஈசாக்கின்மேல் வைத்து, தன் கையிலே நெருப்பையும் கத்தியையும் எடுத்துக்கொண்டான்; இருவரும் கூடிப்போனார்கள்.

fullscreen7 அப்பொழுது ஈசாக்கு தன் தகப்பனாகிய ஆபிரகாமை நோக்கி: என் தகப்பனே என்றான்; அதற்கு அவன்: என் மகனே, இதோ, இருக்கிறேன் என்றான்; அப்பொழுது அவன்: இதோ, நெருப்பும் கட்டையும் இருக்கிறது, தகனபலிக்கு ஆட்டுக்குட்டி எங்கே என்றான்.

fullscreen8 அதற்கு ஆபிரகாம்: என் மகனே, தேவன் தமக்குத் தகனபலிக்கான ஆட்டுக்குட்டியைப் பார்த்துக்கொள்வார் என்றான்; அப்புறம் இருவரும் கூடிப்போய்,

fullscreen9 தேவன் அவனுக்குச் சொல்லியிருந்த இடத்துக்கு வந்தார்கள்; அங்கே ஆபிரகாம் ஒரு பலிபீடத்தை உண்டாக்கி, கட்டைகளை அடுக்கி, தன் குமாரனாகிய ஈசாக்கைக் கட்டி, அந்தப் பலிபீடத்தில் அடுக்கிய கட்டைகளின்மேல் அவனைக் கிடத்தினான்.

fullscreen10 பின்பு ஆபிரகாம் தன் குமாரனை வெட்டும்படிக்குத் தன் கையை நீட்டிக் கத்தியை எடுத்தான்.

fullscreen11 அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர் வானத்திலிருந்து, ஆபிரகாமே, ஆபிரகாமே என்று கூப்பிட்டார்; அவன்: இதோ, அடியேன் என்றான்.

fullscreen12 அப்பொழுது அவர்: பிள்ளையாண்டான்மேல் உன் கையைப் போடாதே, அவனுக்கு ஒன்றும் செய்யாதே; நீ அவனை உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் எனக்காக ஒப்புக்கொடுத்தபடியினால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றார்.

fullscreen13 ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, பின்னாகப் புதரிலே தன் கொம்புகள் சிக்கிக்கொண்டிருந்த ஒரு ஆட்டுக்கடாவைக் கண்டான்; அப்பொழுது ஆபிரகாம் போய், கடாவைப்பிடித்து, அதைத் தன் குமாரனுக்குப் பதிலாகத் தகனபலியிட்டான்.

fullscreen14 ஆபிரகாம் அந்த இடத்துக்கு யேகோவாயீரே என்று பேரிட்டான்; அதினாலே கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும் என்று இந்நாள்வரைக்கும் சொல்லப்பட்டு வருகிறது.

fullscreen15 கர்த்தருடைய தூதனானவர் இரண்டாந்தரம் வானத்திலிருந்து ஆபிரகாமைக் கூப்பிட்டு:

fullscreen16 நீ உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதனென்றும் பாராமல் அவனை ஒப்புக்கொடுத்து இந்தக்காரியத்தைச் செய்தபடியால்;

fullscreen17 நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்தின் நட்சத்திரங்களைப் போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகப் பண்ணுவேன் என்றும், உன் சந்ததியார் தங்கள் சத்துருக்களின் வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் என்றும்,

fullscreen18 நீ என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தபடியினால், உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றும் என்பேரில் ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.

fullscreen19 ஆபிரகாம் தன் வேலைக்காரரிடத்துக்குத் திரும்பி வந்தான்; அவர்கள் எழுந்து புறப்பட்டு, ஏகமாய்ப் பெயர்செபாவுக்குப் போனார்கள்; ஆபிரகாம் பெயர்செபாவிலே குடியிருந்தான்.

fullscreen20 இந்தக்காரியங்கள் நடந்தபின்பு, ஒருவன் ஆபிரகாமிடத்தில் வந்து: மில்க்காளும் உன் சகோதரனாகிய நாகோருக்குப் பிள்ளைகளைப் பெற்றாள்;

fullscreen21 அவர்கள் யாரென்றால், முதற்பேறான ஊத்ஸ், அவன் தம்பியாகிய பூஸ், ஆராமுக்குத் தகப்பனாகிய கேமுவேல்,

fullscreen22 கேசேத், ஆசோ, பில்தாஸ், இத்லாப், பெத்துவேல் என்பவர்கள்; பெத்துவேல் ரெபெக்காளைப் பெற்றான் என்று அறிவித்தான்.

fullscreen23 அந்த எட்டுப்பேரை மில்க்காள் ஆபிரகாமுடைய சகோதரனாகிய நாகோருக்குப் பெற்றாள்.

fullscreen24 ரேயுமாள் என்று பேர் கொண்ட அவனுடைய மறுமனையாட்டியும், தேபா, காகாம், தாகாஸ், மாகா என்பவர்களைப் பெற்றாள்.