எண்ணாகமம் 31

fullscreen1 கர்த்தர் மோசேயை நோக்கி:

fullscreen2 இஸ்ரவேல் புத்திரர் நிமித்தம் மீதியானியரிடத்தில் பழிவாங்குவாயாக; அதன்பின்பு உன் ஜனத்தாரிடத்தில் சேர்க்கப்படுவாய் என்றார்.

fullscreen3 அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி: கர்த்தர் நிமித்தம் மீதியானியரிடத்தில் பழிவாங்கும்பொருட்டு, உங்களில் அவர்கள்மேல் யுத்தத்திற்குப் போகத்தக்கதாக மனிதரைப் பிரித்தெடுங்கள்.

fullscreen4 இஸ்ரவேலுடைய எல்லாக் கோத்திரங்களிலும் ஒவ்வொரு கோத்திரத்தில் ஆயிரம்பேரை யுத்தத்திற்கு அனுப்பவேண்டும் என்றான்.

fullscreen5 அப்படியே இஸ்ரவேலராகிய அநேகம் ஆயிரங்களில், ஒவ்வொரு கோத்திரத்தில் ஆயிரமாயிரம் பேராகப் பன்னீராயிரம்பேர் யுத்தசன்னத்தராய் நிறுத்தப்பட்டார்கள்.

fullscreen6 மோசே அவர்களையும் ஆசாரியனாகிய எலெயாசரின் குமாரன் பினெகாசையும் யுத்தத்திற்கு அனுப்புகையில், அவன் கையிலே பரிசுத்த தட்டுமுட்டுகளையும், தொனிக்கும் பூரிகைகளையும் கொடுத்து அனுப்பினான்.

fullscreen7 கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே அவர்கள் மீதியானியருடன் யுத்தம்பண்ணி, புருஷர்கள் யாவரையும் கொன்றுபோட்டார்கள்.

fullscreen8 அவர்களைக் கொன்றுபோட்டதுமன்றி, மீதியானியரின் ஐந்து ராஜாக்களாகிய ஏவி, ரேக்கேம், சூர், ஊர், ரேபா என்பவர்களையும் கொன்றுபோட்டார்கள். பேயோரின் குமாரனாகிய பிலேயாமையும் பட்டயத்தினாலே கொன்றுபோட்டார்கள்.

fullscreen9 அன்றியும் இஸ்ரவேல் புத்திரர் மீதியானியரின் ஸ்திரீகளையும் குழந்தைகளையும் சிறைபிடித்து, அவர்களுடைய மிருகஜீவன்களாகிய ஆடுமாடுகள் யாவையும், மற்ற ஆஸ்திகள் யாவையும் கொள்ளையிட்டு,

fullscreen10 அவர்கள் குடியிருந்த ஊர்கள் கோட்டைகள் யாவையும் அக்கினியால் சுட்டெரித்து,

fullscreen11 தாங்கள் கொள்ளையிட்ட பொருளையும் தாங்கள் பிடித்த நரஜீவன் மிருகஜீவன் அனைத்தையும் சேர்த்து,

fullscreen12 சிறைபிடிக்கப்பட்ட மனிதரையும், மிருகங்களையும், கொள்ளையிட்ட பொருள்களையும் எரிகோவின் அருகேயுள்ள யோர்தானுக்கு இக்கரையில் மோவாபின் சமனான வெளிகளிலுள்ள பாளயத்திலிருந்த மோசேயினிடத்துக்கும், ஆசாரியனாகிய எலெயாசாரினிடத்துக்கும், இஸ்ரவேல் புத்திரராகிய சபையாரிடத்துக்கும் கொண்டுவந்தார்கள்.

fullscreen13 மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் சபையின் பிரபுக்கள் எல்லாரும் அவர்களைச் சந்திக்கப் பாளயத்திற்கு வெளியே புறப்பட்டுப்போனார்கள்.

fullscreen14 அப்பொழுது மோசே யுத்தத்திலிருந்து வந்த ஆயிரம்பேருக்குத் தலைவரும், நூறுபேருக்குத் தலைவருமாகிய சேனாபதிகள்மேல் கோபங்கொண்டு,

fullscreen15 அவர்களை நோக்கி: ஸ்திரீகள் எல்லாரையும் உயிரோடே விட்டுவிட்டீர்களா?

fullscreen16 பேயோரின் சங்கதியிலே பிலேயாமின் ஆலோசனையினால் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணக் காரணமாயிருந்தவர்கள் இவர்கள்தானே; அதினால் கர்த்தரின் சபையிலே வாதையும் நேரிட்டதே.

fullscreen17 ஆகையால் குழந்தைகளில் எல்லா ஆண்பிள்ளைகளையும், புருஷசம்யோகத்தை அறிந்த எல்லா ஸ்திரீகளையும் கொன்றுபோடுங்கள்.

fullscreen18 ஸ்திரீகளில் புருஷசம்யோகத்தை அறியாத எல்லாப் பெண்பிள்ளைகளையும் உங்களுக்காக உயிரோடே வையுங்கள்.

fullscreen19 பின்பு நீங்கள் ஏழுநாள் பாளயத்திற்குப் புறம்பே தங்குங்கள்; நரஜீவனைக் கொன்றவர்களும், வெட்டுண்டவர்ளைத் தொட்டவர்களுமாகிய நீங்கள் யாவரும் மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் உங்களையும் உங்களால் சிறைபிடிக்கப்பட்டவர்களையும் சுத்திகரித்து,

fullscreen20 அந்தப்படியே எல்லா வஸ்திரத்தையும், தோலால் செய்த கருவிகளையும், வெள்ளாட்டுமயிரினால் நெய்தவைகளையும், மரச்சாமான்களையும் சுத்திகரிக்கக்கடவீர்கள் என்றான்.

fullscreen21 ஆசாரியனாகிய எலெயாசாரும் யுத்தத்திற்குப் போய்வந்த படைவீரரை நோக்கி: கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்ட விதிப்பிரமாணம் என்னவென்றால்:

fullscreen22 அக்கினிக்கு நிற்கத்தக்கவைகளாகிய பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு, தகரம், ஈயம் ஆகிய இவைகளெல்லாம் சுத்தமாகும்படிக்கு,

fullscreen23 அவைகளை அக்கினியிலே போட்டெடுக்கக்கடவீர்கள்; தீட்டுக்கழிக்கும் தண்ணீராலும் அவைகள் சுத்திகரிக்கப்படவேண்டும்; அக்கினிக்கு நிற்கத்தகாதவைகளையெல்லாம் தண்ணீரினால் சுத்தம்பண்ணக்கடவீர்கள்.

fullscreen24 ஏழாம் நாளில் உங்கள் வஸ்திரங்களைத் தோய்க்கவேண்டும்; அப்பொழுது சுத்தமாயிருப்பீர்கள்; பின்பு நீங்கள் பாளயத்திற்குள் வரலாம் என்றான்.

fullscreen25 கர்த்தர் மோசேயை நோக்கி:

fullscreen26 பிடித்துக்கொண்டு வரப்பட்ட மனிதரையும் மிருகங்களையும் நீயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் சபையினுடைய பிதாக்களாகிய தலைவரும் தொகைபார்த்து,

fullscreen27 கொள்ளையிடப்பட்டதை இரண்டு பங்காகப் பங்கிட்டு, யுத்தத்திற்குப் படையெடுத்துப்போனவர்களுக்கும் சபையனைத்திற்கும் கொடுங்கள்.

fullscreen28 மேலும் யுத்தத்திற்குப்போன படைவீரரிடத்தில் கர்த்தருக்காக மனிதரிலும் மாடுகளிலும் கழுதைகளிலும் ஆடுகளிலும் ஐந்நூற்றிற்கு ஒரு பிராணி வீதமாக பகுதி வாங்கி,

fullscreen29 அவர்களுடைய பாதிப்பங்கில் எடுத்து, கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் படைப்பாக ஆசாரியனாகிய எலெயாசாருக்குக் கொடுக்கவேண்டும்.

fullscreen30 இஸ்ரவேல் புத்திரரின் பாதிப்பங்கிலோ மனிதரிலும், மாடுகள் கழுதைகள் ஆடுகளாகிய சகலவித மிருகங்களிலும், ஐம்பதிற்கு ஒன்று வீதமாய் வாங்கி அவைகளைக் கர்த்தருடைய வாசஸ்தலத்தின் காவலைக்காக்கும் லேவியருக்குக் கொடுக்கவேண்டும் என்றார்.

fullscreen31 கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே, மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் செய்தார்கள்.

fullscreen32 படைவீரர் கொள்ளையிட்ட பொருளில், ஆறுலட்சத்து எழுபத்தையாயிரம் ஆடுகளும்,

fullscreen33 எழுபத்தீராயிரம் மாடுகளும்,

fullscreen34 அறுபத்தோராயிரம் கழுதைகளும் மீதியாயிருந்தது.

fullscreen35 புருஷசம்யோகத்தை அறியாத ஸ்திரீகளில் முப்பத்தீராயிரம்பேர் இருந்தார்கள்.

fullscreen36 யுத்தஞ்செய்யப் போனவர்களுக்குக் கிடைத்த பாதிப்பங்கின் தொகையாவது: ஆடுகள் மூன்றுலட்சத்து முப்பத்தேழாயிரத்து ஐந்நூறு.

fullscreen37 இந்த ஆடுகளிலே கர்த்தருக்குப் பகுதியாக வந்தது அறுநூற்று எழுபத்தைந்து.

fullscreen38 மாடுகள் முப்பத்தாறாயிரம்; அவைகளில் கர்த்தருக்குப் பகுதியாக வந்தது எழுபத்திரண்டு.

fullscreen39 கழுதைகள் முப்பதினாயிரத்து ஐந்நூறு; அவைகளில் கர்த்தருக்குப் பகுதியாக வந்தது அறுபத்தொன்று.

fullscreen40 நரஜீவன்கள் பதினாறாயிரம் பேர்; அவர்களில் கர்த்தருக்குப் பகுதியாக வந்தவர்கள் முப்பத்திரண்டுபேர்.

fullscreen41 கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் அந்தப் பகுதியை, மோசே கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, ஆசாரியனாகிய எலெயாசாரிடத்தில் கொடுத்தான்.

fullscreen42 யுத்தம்பண்ணின பேர்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் மோசே பாதிபாதியாகப் பங்கிட்டதின்படியே சபையாருக்கு வந்த பாதிப்பங்காவது:

fullscreen43 ஆடுகளில் முன்றுலட்சத்து முப்பத்தேழாயிரத்து ஐந்நூறு,

fullscreen44 மாடுகளில் முப்பத்தாறாயிரம்,

fullscreen45 கழுதைகளில் முப்பதினாயிரத்து ஐந்நூறு,

fullscreen46 நரஜீவன்களில் பதினாயிரம் பேருமே.

fullscreen47 இஸ்ரவேல் புத்திரரின் பாதிப்பங்குக்கு வந்த இந்த நரஜீவன்களிலும் மிருகங்களிலும் மோசே ஐம்பதுக்கு ஒன்று வீதமாக எடுத்து, அவைகளைக் கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, கர்த்தருடைய வாசஸ்தலத்தின் காவலைக் காக்கிற லேவியருக்குக் கொடுத்தான்.

fullscreen48 பின்பு ஆயிரம்பேருக்குத் தலைவரும் நூறுபேருக்குத் தலைவருமான சேனாபதிகள் மோசேயினிடத்தில் வந்து,

fullscreen49 ஊழியக்காரராகிய நாங்கள் எங்கள் கையின் கீழிருக்கிற யுத்தமனிதரைத் தொகைபார்த்தோம்; அவர்களுக்குள்ளே ஒரு ஆளும் குறையவில்லை.

fullscreen50 ஆகையால், கர்த்தருடைய சந்நிதியில் எங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்பொருட்டு, எங்களுக்குக் கிடைத்த பொற்பணிகளாகிய பாதசரங்களையும், அஸ்தகடகங்களையும், மோதிரங்களையும், காதணிகளையும், காப்புகளையும் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தோம் என்றார்கள்.

fullscreen51 அப்பொழுது மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் சகலவித வேலைப்பாடான பணிதிகளான அந்தப் பொன்னாபரணங்களை அவர்களிடத்தில் வாங்கினார்கள்.

fullscreen52 இப்படி ஆயிரம்பேருக்குத் தலைவரானவர்களாலும் நூறுபேருக்குத் தலைவரானவர்களாலும் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் காணிக்கையாகச் செலுத்தப்பட்ட பொன் முழுவதும் பதினாறாயிரத்து எழுநூற்று ஐம்பது சேக்கல் நிறையாயிருந்தது.

fullscreen53 யுத்தத்திற்குப் போன மனிதர் ஒவ்வொருவரும் தங்கள் தங்களுக்காகக் கொள்ளையிட்டிருந்தார்கள்.

fullscreen54 அந்தப் பொன்னை மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் ஆயிரம்பேருக்குத் தலைவரானவர்களின் கையிலும், நூறுபேருக்குத் தலைவரானவர்களின் கையிலும் வாங்கி, இஸ்ரவேல் புத்திரருக்கு ஞாபகக்குறியாக ஆசரிப்புக் கூடாரத்திலே கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து வைத்தார்கள்.