ஏசாயா 48

fullscreen1 இஸ்ரவேலென்னும் பெயர்பெற்று, யூதாவின் நீரூற்றிலிருந்து சுரந்தவர்களும், கர்த்தருடைய நாமத்தின்மேல் ஆணையிட்டு, உண்மையும் நீதியும் இல்லாமல் இஸ்ரவேலின் தேவனை அறிக்கையிடுகிறவர்களுமான யாக்கோபின் வம்சத்தாரே, கேளுங்கள்.

fullscreen2 அவர்கள் தங்களைப் பரிசுத்த நகரத்தார் என்று சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ள இஸ்ரவேலின் தேவன்மேல் பற்றுதலாயிருக்கிறார்கள்.

fullscreen3 பூர்வகாலத்தில் நடந்தவைகளை ஆதிமுதல் அறிவித்தேன், அவைகள் என் வாயிலிருந்து பிறந்தன, அவைகளை வெளிப்படுத்தினேன்; அவைகளைச் சடிதியாய்ச் செய்தேன், அவைகள் நடந்தன.

fullscreen4 நீ கடினமுள்ளவனென்றும், உன் பிடரி நரம்பு இரும்பென்றும், உன் நெற்றி வெண்கலமென்றும் அறிந்திருக்கிறேன்.

fullscreen5 ஆகையால்: என் விக்கிரகம் அவைகளைச் செய்ததென்றும், நான் செய்த சுரூபமும், நான் வார்ப்பித்த விக்கிரகமும் அவைகளைக் கட்டளையிட்டதென்றும் நீ சொல்லாதபடிக்கு, நான் அவைகளை முன்னமே உனக்கு அறிவித்து, அவைகள் வராததற்குமுன்னே உனக்கு வெளிப்படுத்தினேன்.

fullscreen6 அவைகளைக் கேள்விப்பட்டாயே, அவைகளையெல்லாம் பார், இப்பொழுது நீங்களும் அவைகளை அறிவிக்கலாமல்லவோ? இதுமுதல் புதியவைகளானவைகளையும், நீ அறியாத மறைபொருளானவைகளையும் உனக்குத் தெரிவிக்கிறேன்.

fullscreen7 அவைகள் ஆதிமுதற்கொண்டு அல்ல, இப்பொழுதே உண்டாக்கப்பட்டன; இதோ, அவைகளை அறிவேன் என்று நீ சொல்லாதபடிக்கு, இந்நாட்களுக்கு முன்னே நீ அவைகளைக் கேள்விப்படவில்லை.

fullscreen8 நீ கேள்விப்படவுமில்லை, அறியவுமில்லை; ஆதிமுதல் உன் செவி திறந்திருக்கவுமில்லை; நீ துரோகம்பண்ணுவாயென்பதையும், தாயின் கர்ப்பந்தொடங்கி நீ மீறுகிற பெயர்பெற்றதையும் அறிந்திருக்கிறேன்.

fullscreen9 என் நாமத்தினிமித்தம் என் கோபத்தை நிறுத்திவைத்தேன்; உன்னைச் சங்கரிக்காதபடிக்கு நான் என் புகழ்ச்சியினிமித்தம் உன்மேல் பொறுமையாயிருப்பேன்.

fullscreen10 இதோ, உன்னைப் புடமிட்டேன்; ஆனாலும் வெள்ளியைப்போலல்ல, உபத்திரவத்தின் குகையிலே உன்னைத் தெரிந்துகொண்டேன்.

fullscreen11 என்னிமித்தம், என்னிமித்தமே அப்படிச் செய்வேன்; என் நாமத்தின் பரிசுத்தம் எப்படிக் குலைக்கப்படலாம்? என் மகிமையை நான் வேறொருவருக்குங்கொடேன்.

fullscreen12 யாக்கோபே, நான் அழைத்திருக்கிற இஸ்ரவேலே, எனக்குச் செவிகொடு; நான் அவரே, நான் முந்தினவரும் நான் பிந்தினவருமாமே.

fullscreen13 என் கரமே பூமியை அஸ்திபாரப்படுத்தி, என் வலதுகை வானங்களை அளவிட்டது; நான் அவைகளுக்குக் கட்டளையிட, அவைகள் அனைத்தும் நிற்கும்.

fullscreen14 நீங்களெல்லாரும் கூடிவந்து கேளுங்கள்; கர்த்தருக்குப் பிரியமானவன் அவருக்குச் சித்தமானதைப் பாபிலோனில் செய்வான்; அவன் புயம் கல்தேயரின்மேல் இருக்கும் என்பதை இவர்களில் அறிவித்தவன் யார்?

fullscreen15 நான், நானே அதைச் சொன்னேன்; நான் அவனை அழைத்தேன்; நான் அவனை வரப்பண்ணினேன்; அவன் வழி வாய்க்கும்.

fullscreen16 நீங்கள் என் சமீபத்தில் வந்து நான் சொல்வதைக் கேளுங்கள்; நான் ஆதிமுதற்கொண்டு அந்தரங்கத்தில் பேசவில்லை; அது உண்டான காலந்துவக்கி அங்கே நான் இருந்தேன்; இப்பொழுதோ கர்த்தராகிய ஆண்டவரும், அவருடைய ஆவியும் என்னை அனுப்புகிறார்.

fullscreen17 இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற உன் மீட்பரான கர்த்தர் சொல்லுகிறதாவது: பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே.

fullscreen18 ஆ, என் கற்பனைகளைக் கவனித்தாயானால் நலமாயிருக்கும்; அப்பொழுது உன் சமாதானம் நதியைப்போலும், உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப்போலும் இருக்கும்.

fullscreen19 அப்பொழுது உன் சந்ததி மணலத்தனையாகவும், உன் கர்ப்பப்பிறப்பு அதின் அணுக்களத்தனையாகவும் இருக்கும்; அப்பொழுது அதின் பெயர் நம்மை விட்டு அற்றுப்போகாமலும் அழிக்கப்படாமலும் இருக்கும்.

fullscreen20 பாபிலோனிலிருந்து புறப்படுங்கள்; கல்தேயரைவிட்டு ஓடிவாருங்கள்; கர்த்தர் தம்முடைய தாசனாகிய யாக்கோபை மீட்டுக்கொண்டாரென்று சொல்லுங்கள்; இதைக் கெம்பீரசத்தமாய்க் கூறிப் பிரசித்தப்படுத்துங்கள் பூமியின் கடையாந்தரமட்டும் வெளிப்படுத்துங்கள் என்கிறார்.

fullscreen21 அவர் அவர்களை வனாந்தரங்களில் நடத்தும்போது, அவர்களுக்குத் தாகவிடாயிருந்ததில்லை; கன்மலையிலிருந்து தண்ணீரை அவர்களுக்குச் சுரக்கப்பண்ணினார், கன்மலையைப் பிளந்தார், தண்ணீர் ஓடிவந்தது.

fullscreen22 துன்மார்க்கருக்குச் சமாதானம் இல்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்.