நெகேமியா 9

fullscreen1 அந்த மாதம் இருபத்துநாலாந்தேதியிலே இஸ்ரவேல் புத்திரர் உபவாசம்பண்ணி, இரட்டுடுத்தி, தங்கள்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டவர்களாய்க் கூடிவந்தார்கள்.

fullscreen2 இஸ்ரவேல் சந்ததியார் மறு ஜாதியாரையெல்லொம் விட்டுப்பிரிந்து வந்து நின்று தங்கள் பாவங்களையும் தங்கள் பிதாக்களின் அக்கிரமங்களையும் அறிக்கையிட்டார்கள்.

fullscreen3 அவர்கள் எழுந்திருந்து, தங்கள் நிலையில் நின்றார்கள்; அப்பொழுது ஒரு ஜாமமட்டும் அவர்களுடைய தேவனாகிய கர்த்தரின் நியாயப்பிரமாணப் புஸ்தகம் வாசிக்கப்பட்டது; பின்பு ஒரு ஜாமமட்டும் அவர்கள் பாவ அறிக்கை பண்ணி, தங்கள் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டார்கள்.

fullscreen4 யெசுவா, பானி கத்மியேல் செப்பனியா, புன்னி, செரெபியா பானி, கெனானி என்பவர்கள் லேவியருடையபடிகளின்மேல் நின்று தங்கள் தேவனாகிய கர்த்தரை நோக்கி மகா சத்தமாய் ஓலமிட்டார்கள்.

fullscreen5 பின்பு லேவியரான யெசுவா, கத்மியேல், பானி, ஆசாப்நெயா, செரெபியா, ஒதியா, செபனியா, பெத்தகியா என்பவர்கள் ஜனங்களைப் பார்த்து: நீங்கள் எழுந்திருந்து, அநாதியாய் என்றென்றைக்குமிருக்கிற உங்கள் தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள் என்று சொல்லி, கர்த்தரை நோக்கி: எந்த ஸ்துதி ஸ்தோத்திரத்துக்கும் மேலான உம்முடைய மகிமையுள்ள நாமத்துக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக.

fullscreen6 நீர் ஒருவரே கர்த்தர்; நீர் வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகளுடைய சர்வ சேனைகளையும் பூமியையும் அதிலுள்ள எல்லாவற்றையும், சமுத்திரங்களையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கினீர்; அவைகளையெல்லாம் நீர் காப்பாற்றுகிறீர்; வானசேனைகள் உம்மைப் பணிந்துகொள்ளுகிறது.

fullscreen7 ஆபிராமைத் தெரிந்துகொண்டு, அவனை ஊர் என்னும் கல்தேயரின் பட்டணத்திலிருந்து புறப்படப்பண்ணி, அவனுக்கு ஆபிரகாம் என்னும் பேரிட்ட தேவனாகிய கர்த்தர் நீர்.

fullscreen8 அவன் இருதயத்தை உமக்கு முன்பாக உண்மையுள்ளதாகக்கண்டு, கானானியர் ஏத்தியர், எமோரியர், பெரிசியர், எபூசியர், கிர்காசியருடைய தேசத்தை அவன் சந்ததிக்குக் கொடுக்கும்படி, அவனோடு உடன்படிக்கைபண்ணி, உம்முடைய வார்த்தைகளை நிறைவேற்றினீர்; நீர் நீதியுள்ளவர்.

fullscreen9 எகிப்திலே எங்கள் பிதாக்கள் அநுபவித்த சிறுமையை நீர் கண்டு, சிவந்த சமுத்திரத்தில் அவர்கள் கூப்பிடுதலைக்கேட்டீர்.

fullscreen10 பார்வோனிடத்திலும், அவனுடைய எல்லா ஊழியக்காரரிடத்திலும், அவன் தேசத்தின் சகல ஜனத்தினிடத்திலும், அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்தீர்; அவர்கள் உமது ஜனங்களை அகந்தையாய் நடத்தினார்கள் என்பதை அறிந்திருந்தீர்; இப்படியே இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி உமக்குக் கீர்த்தியை உண்டாக்கினீர்.

fullscreen11 நீர் அவர்களுக்கு முன்பாகச் சமுத்திரத்தைப் பிரித்ததினால், கடலின் நடுவாகக் கால்நனையாமல் நடந்தார்கள்; வலுவான தண்ணீர்களிலே கல்லைப்போடுகிறதுபோல, அவர்களைத் தொடர்ந்தவர்களை ஆழங்களிலே போட்டுவிட்டீர்.

fullscreen12 நீர் பகலிலே மேகஸ்தம்பத்தினாலும் அவர்கள் நடக்கவேண்டிய வழியை அவர்களுக்கு வெளிச்சமாக்க இரவிலே அக்கினி ஸ்தம்பத்தினாலும், அவர்களை வழிநடத்தினீர்.

fullscreen13 நீர் சீனாய் மலையிலிறங்கி வானத்திலிருந்து அவர்களோடே பேசி, அவர்களுக்குச் செம்மையான நீதிநியாயங்களையும், நல்ல கட்டளைகளும் கற்பனைகளுமாகிய உண்மையான பிரமாணங்களையும் கொடுத்தீர்.

fullscreen14 உமது பரிசுத்த ஓய்வுநாளை அவர்களுக்குத் தெரியப்படுத்தி, உமது தாசனாகிய மோசேயைக்கொண்டு, அவர்களுக்குக் கற்பனைகளையும், கட்டளைகளையும் நியாயப்பிரமாணங்களையும் கற்பித்தீர்.

fullscreen15 அவர்கள் பசிக்கு வானத்திலிருந்து அப்பம் கொடுத்து, அவர்கள் தாகத்துக்குக் கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படப்பண்ணி, நீர் அவர்களுக்குக் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளப் பிரவேசியுங்கள் என்று அவர்களுக்குச் சொன்னீர்.

fullscreen16 எங்கள் பிதாக்களாகிய அவர்களோ அகங்காரமாய் நடந்து, தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தி, உம்முடைய கற்பனைகளுக்குச் செவிகொடாதேபோனார்கள்.

fullscreen17 அவர்கள் செவிகொடுக்க மனதில்லாமலும், அவர்களிடத்திலே நீர் செய்த உம்முடைய அற்புதங்களை நினையாமலும் போய், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தி, தங்கள் அடிமைத்தனத்துக்குத் திரும்பும்படிக்கு அவர்கள் கலகம்பண்ணி, ஒரு தலைவனை ஏற்படுத்தினார்கள்; ஆகிலும் வெகுவாய் மன்னிக்கிறவரும் இரக்கமும் மனஉருக்கமும், நீடிய சாந்தமும், மகா கிருபையுமுள்ளவருமான தேவனாகிய நீர் அவர்களைக் கைவிடவில்லை.

fullscreen18 அவர்கள் வார்ப்பிக்கப்பட்ட ஒரு கன்றுக்குட்டியைத் தங்களுக்கு உண்டாக்கி: இது உன்னை எகிப்திலிருந்து கொண்டுவந்த உன் தெய்வம் என்று சொல்லி, கோபமூட்டத்தக்க பெரிய அக்கிரமங்களைச் செய்திருந்தாலும்,

fullscreen19 நீர் உம்முடைய மிகுந்த மன உருக்கத்தின்படியே, அவர்களை வனாந்தரத்திலே கைவிடவில்லை; அவர்களை வழிநடத்தப் பகலிலே மேகஸ்தம்பமும், அவர்களுக்கு வெளிச்சத்தையும் அவர்கள் நடக்கவேண்டிய வழியையும் காட்ட இரவிலே அக்கினி ஸ்தம்பமும், அவர்களை விட்டு விலகவில்லை.

fullscreen20 அவர்களுக்கு அறிவை உணர்த்த உம்முடைய நல்ல ஆவியைக் கட்டளையிட்டீர், அவர்கள் வாய்க்கு உம்முடைய மன்னாவை அருளி, அவர்கள் தாகத்துக்குத் தண்ணீரைக் கொடுத்தீர்.

fullscreen21 இப்படி நாற்பது வருஷமாக வனாந்தரத்தில் அவர்களுக்கு ஒன்றும் குறைவுபடாதபடிக்கு அவர்களைப் பராமரித்துவந்தீர்; அவர்கள் வஸ்திரங்கள் பழமையாய்ப்போகவுமில்லை, அவர்கள் கால்கள் வீங்கவுமில்லை.

fullscreen22 அவர்களுக்கு ராஜ்யங்களையும் ஜனங்களையும் ஒப்புக்கொடுத்து, அவைகளை எல்லை எல்லையாக அவர்களுக்குப் பங்கிட்டீர்; எஸ்போனின் ராஜாவாகிய சீகோனின் தேசத்தையும் பாசானின் ராஜாவாகிய ஓகின் தேசத்தையும் கட்டிக்கொண்டார்கள்.

fullscreen23 அவர்கள் பிள்ளைகளை வானத்து நட்சத்திரங்களைப்போலப் பெருகப்பண்ணி, சுதந்தரித்துக்கொள்ளும்படி நீர் அவர்கள் பிதாக்களுக்குச் சொன்ன தேசத்திலே அவர்களை அழைத்து வந்தீர்.

fullscreen24 அப்படியே பிள்ளைகள் உட்பிரவேசித்து, தேசத்தைச் சுதந்தரித்துக்கொண்டார்கள்; நீர் அவர்களுக்கு முன்பாகத் தேசத்தின் குடிகளாகிய கானானியரைத் தாழ்த்தி, அவர்களையும் அவர்கள் ராஜாக்களையும், தேசத்தின் ஜனங்களையும், தங்கள் இஷ்டப்படி செய்ய, அவர்கள் கையிலே ஒப்புக்கொடுத்தீர்.

fullscreen25 அவர்கள் அரணான பட்டணங்களையும், செழுமையான பூமியையும் கட்டிக்கொண்டு, சகலவித உடமைகள் நிறைந்த வீடுகளையும், வெட்டப்பட்ட துரவுகளையும் ஏராளமான திராட்சத்தோட்டங்களையும் ஒலிவத்தோப்புகளையும், கனிகொடுக்கும் விருட்சங்களையும் சுதந்தரித்துக்கொண்டு புசித்துத் திருப்தியாகிக் கொழுத்து, உம்முடைய பெரிய தயையினால் செல்வமாய் வாழ்ந்தார்கள்.

fullscreen26 ஆனாலும் அவர்கள் கீழ்ப்படியாதவர்களாகி உமக்கு விரோதமாய்க் கலகம்பண்ணி, உம்முடைய நியாயப்பிரமாணத்தை தங்களுக்குப் புறம்பே எறிந்துவிட்டு, தங்களை உம்மிடத்தில் திருப்பும்படி அவர்களைத் திடசாட்சியாய்க் கடிந்துகொண்ட உம்முடைய தீர்க்கதரிசிகளைக் கொன்றுபோட்டு, கோபமூட்டுகிற பெரிய அக்கிரமங்களைச் செய்தார்கள்.

fullscreen27 ஆகையால் அவர்களை நெருக்குகிற அவர்கள் சத்துருக்களின் கையில் அவர்களை ஒப்புக்கொடுத்தீர்; அவர்கள் நெருக்கம் அநுபவிக்கிற காலத்தில் அவர்கள் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறபோதோ, நீர் பரலோகத்திலிருந்து கேட்டு உம்முடைய மிகுந்த இரக்கத்தினால் அவர்களை அவர்கள் சத்துருக்களுக்கு நீங்கலாக்கிவிடுகிற இரட்சகர்களை அவர்களுக்குக் கொடுத்தீர்.

fullscreen28 அவர்களுக்கு இளைப்பாறுதல் உண்டானபோதோ, உமக்கு முன்பாக மறுபடியும் பொல்லாப்புச் செய்யத்தொடங்கினார்கள்; ஆகையால் அவர்கள் சத்துருக்கள் அவர்களை ஆளும்படிக்கு அவர்கள் கையிலே ஒப்புவித்தீர்; அவர்கள் மனந்திரும்பி உம்மை நோக்கிக் கூப்பிட்டபோதோ, நீர் பரலோகத்திலிருந்து கேட்டு, அவர்களை உம்முடைய இரக்கங்களின்படியே அநேகந்தரம், விடுதலையாக்கிவிட்டீர்.

fullscreen29 அவர்களை உம்முடைய நியாயப்பிரமாணத்துக்குத் திருப்ப அவர்களைத் திடசாட்சியாய்க் கடிந்துகொண்டீர்; அவர்கள் அகங்காரங் கொண்டு, உம்முடைய கற்பனைகளுக்குச் செவிகொடாமல் கீழ்ப்படிந்து நடக்கிற மனுஷன் செய்து பிழைக்கிற உம்முடைய நீதி நியாயங்களுக்கு விரோதமாகப் பாவஞ்செய்து, தங்கள் தோளை முரண்டுத்தனமாய் விலக்கி, செவிகொடாமல் தங்கள் கழுத்தைக் கடினப்படுத்திக்கொண்டார்கள்.

fullscreen30 நீர் அநேக வருஷமாக அவர்கள்மேல் பொறுமையாயிருந்து, உம்முடைய ஆவியினால் பேசின உம்முடைய தீர்க்கதரிசிகளைக்கொண்டு அவர்களைத் திடசாட்சியாய்க் கடிந்துகொண்டாலும், அவர்கள் செவிகொடாதபடியினாலே, அவர்களை அந்நிய தேசஜனங்களின் கையில் ஒப்புக்கொடுத்தீர்.

fullscreen31 ஆகிலும் உம்முடைய மிகுந்த இரக்கங்களின்படியே, அவர்களை நிர்மூலமாக்காமலும் அவர்களைக் கைவிடாமலும் இருந்தீர்; நீர் கிருபையும் இரக்கமுமுள்ள தேவன்.

fullscreen32 இப்பொழுதும் உடன்படிக்கையையும் கிருபையையும் காக்கிற வல்லமையும் பயங்கரமுமுள்ள மகா தேவனாகிய எங்கள் தேவனே, அசீரியா ராஜாக்களின் நாட்கள் முதற்கொண்டு இந்நாள்வரைக்கும் எங்களுக்கும் எங்கள் ராஜாக்களுக்கும், எங்கள் பிரபுக்களுக்கும், எங்கள் ஆசாரியர்களுக்கும் எங்கள் தீர்க்கதரிசிகளுக்கும், எங்கள் பிதாக்களுக்கும் உம்முடைய ஜனங்கள் அனைவருக்கும் நேரிட்ட சகல வருத்தமும் உமக்கு முன்பாக அற்பமாய்க் காணப்படாதிருப்பதாக.

fullscreen33 எங்களுக்கு நேரிடப்பண்ணின எல்லாவற்றிலும் நீர் நீதியுள்ளவர்; நீர் உண்மையாய் நடப்பித்தீர்; நாங்களோ ஆகாமியம் பண்ணினோம்.

fullscreen34 எங்கள் ராஜாக்களும், எங்கள் பிரபுக்களும், எங்கள் ஆசாரியர்களும் எங்கள் பிதாக்களும் உம்முடைய நியாயப்பிரமாணத்தின்படி செய்யாமலும், உம்முடைய கற்பனைகளையும் நீர் அவர்களைக் கடிந்துகொண்ட உம்முடைய சாட்சிகளையும் கவனியாமலும்போனார்கள்.

fullscreen35 அவர்கள் தங்கள் ராஜ்யத்திலும், நீர் அவர்களுக்குக் கொடுத்த உம்முடைய பெரிய தயையிலும், நீர் அவர்களுக்கு முன்பாகத் திறந்துவைத்த விசாலமும் செழிப்புமான தேசத்திலும் உமக்கு ஊழியஞ்செய்யாமலும், தங்கள் துர்க்கருமங்களை விட்டுத் திரும்பாமலும் போனார்கள்.

fullscreen36 இதோ, இன்றையதினம் நாங்கள் அடிமைகளாயிருக்கிறோம், இதோ பலனையும் நன்மையையும் அனுபவிக்கும்படி நீர் எங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த இந்தத் தேசத்தில்தானே நாங்கள் அடிமைகளாயிருக்கிறோம்.

fullscreen37 அதின் வருமானம் எங்கள் பாவங்களினிமித்தம் நீர் எங்கள்மேல் வைத்த ராஜாக்களுக்குத் திரளாகப்போகிறது; அவர்கள் தங்களுக்கு இஷ்டமானபடியே எங்கள் சரீரங்களையும் எங்கள் மிருக ஜீவன்களையும் ஆளுகிறார்கள்; நாங்கள் மகா இக்கட்டில் அகப்பட்டிருக்கிறோம்.

fullscreen38 இவையெல்லாம் இப்படி இருக்கிறபடியால் நாங்கள் உறுதியான உடன்படிக்கைபண்ணி அதை எழுதிவைக்கிறோம்; எங்கள் பிரபுக்களும் எங்கள் லேவியரும், எங்கள் ஆசாரியரும் அதற்கு முத்திரைபோடுவார்கள் என்றார்கள்.