ஏசாயா 44

fullscreen1 இப்போதும், என் தாசனாகிய யாக்கோபே, நான் தெரிந்துகொண்ட இஸ்ரவேலே, கேள்.

fullscreen2 உன்னை உண்டாக்கினவரும், தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவரும், உனக்குத் துணைசெய்கிறவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது; என் தாசனாகிய யாக்கோபே, நான் தெரிந்துகொண்ட யெஷூரனே, பயப்படாதே.

fullscreen3 தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன்; உன் சந்ததியின்மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின்மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன்.

fullscreen4 அதினால் அவர்கள் புல்லின் நடுவே நீர்க்கால்களின் ஓரத்திலுள்ள அலரிச்செடிகளைப்போல வருவார்கள்.

fullscreen5 ஒருவன், நான் கர்த்தருடையவன் என்பான்; ஒருவன் யாக்கோபின்பேரைத் தரித்துக்கொள்வான்; ஒருவன், தான் கர்த்தருடையவன் என்று கையெழுத்துப்போட்டு, இஸ்ரவேலின் நாமத்தைத் தரித்துக்கொள்வான்.

fullscreen6 நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே; என்னைத்தவிர தேவன் இல்லையென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும், சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்லுகிறார்.

fullscreen7 பூர்வகாலத்து ஜனங்களை நான் ஸ்தாபித்தது முதற்கொண்டு, என்னைப்போல எதையாகிலும் வரவழைத்து, இன்னின்னதென்று முன்னறிவித்து, எனக்கு முன்னே வரிசையாக நிறுத்தத்தக்கவன் யார்? நிகழ்காரியங்களையும் வருங்காரியங்களையும் தங்களுக்கு அவர்கள் அறிவிக்கட்டும்.

fullscreen8 நீங்கள் கலங்காமலும் பயப்படாமலும் இருங்கள்; அக்காலமுதற்கொண்டு நான் அதை உனக்கு விளங்கப்பண்ணினதும் முன்னறிவித்ததுமில்லையோ? இதற்கு நீங்களே என் சாட்சிகள், என்னைத் தவிர தேவனுண்டோ? வேறொரு கன்மலையும் இல்லையே; ஒருவனையும் அறியேன்.

fullscreen9 விக்கிரகங்களை உருவாக்குகிற யாவரும் வீணர்; அவர்களால் இச்சிக்கப்பட்டவைகள் ஒன்றுக்கும் உதவாது; அவைகள் ஒன்றும் காணாமலும், ஒன்றும் அறியாமலும் இருக்கிறதென்று தங்களுக்கு வெட்கமுண்டாக அவைகளுக்குத் தாங்களே சாட்சிகளாயிருக்கிறார்கள்.

fullscreen10 ஒன்றுக்கும் உதவாத தெய்வத்தை உருவாக்கி, விக்கிரகத்தை வார்ப்பிக்கிறவன் எப்படிப்பட்டவன்?

fullscreen11 இதோ, அவனுடைய கூட்டாளிகளெல்லாரும் வெட்கமடைவார்கள்; தொழிலாளிகள் நரஜீவன்கள்தானே; அவர்கள் எல்லாரும் கூடிவந்து நிற்கட்டும், அவர்கள் ஏகமாய்த் திகைத்துவெட்கப்படுவார்கள்.

fullscreen12 கொல்லன் இரும்பைக் குறட்டால் இடுக்கி, உலையிலே காயவைத்து, சுத்திகளால் அதை உருவாக்கி, தன்புயபலத்தினால் அதைப் பண்படுத்துகிறான்; பட்டினியாயிருந்து பெலனற்றுப்போகிறான்; தண்ணீர் குடியாமல் களைத்துப்போகிறான்.

fullscreen13 தச்சன் நூல்பிடித்து, மட்டப்பலகையால் மரத்துக்குக் குறிபோட்டு உளிகளினால் உருப்படுத்தி கவராசத்தினால் அதை வகுத்து, மனுஷ சாயலாக மனுஷரூபத்தின்படி உருவமாக்குகிறான்; அதைக் கோவிலிலே நாட்டி வைக்கிறான்.

fullscreen14 அவன் தனக்குக் கேதுருக்களை வெட்டுகிறான்; ஒரு மருதமரத்தையாவது கர்வாலிமரத்தையாவது, தெரிந்துகொண்டு, காட்டுமரங்களிலே பெலத்த மரத்தைத் தன் காரியத்துக்காக வளர்க்கிறான்; அல்லது அசோகமரத்தை நடுகிறான், மழை அதை வளரச்செய்யும்.

fullscreen15 மனுஷனுக்கு அவைகள் அடுப்புக்காகும்போது, அவன் அவைகளில் எடுத்துக் குளிர்காய்கிறான்; நெருப்பைமூட்டி அப்பமும் சுடுகிறான்; அதினால் ஒரு தெய்வத்தையும் உண்டுபண்ணி, அதைப் பணிந்துகொள்ளுகிறான்; ஒரு விக்கிரகத்தையும் அதினால் செய்து, அதை வணங்குகிறான்.

fullscreen16 அதில் ஒரு துண்டை அடுப்பில் எரிக்கிறான்; ஒரு துண்டினால் இறைச்சியைச் சமைத்துப் புசித்து, பொரியலைப்பொரித்து திருப்தியாகி குளிருங்காய்ந்து: ஆஆ, அனலானேன்; நெருப்பைக் கண்டேன் என்று சொல்லி;

fullscreen17 அதில் மீதியான துண்டைத் தனக்கு விக்கிரகதெய்வமாகச் செய்து, அதற்குமுன் விழுந்து, அதை வணங்கி; நீ என் தெய்வம், என்னை இரட்சிக்க வேண்டும் என்று அதை நோக்கி மன்றாடுகிறான்.

fullscreen18 அறியாமலும் உணராமலுமிருக்கிறார்கள்; காணாதபடிக்கு அவர்கள் கண்களும், உணராதபடிக்கு அவர்கள் இருதயமும் அடைக்கப்பட்டிருக்கிறது.

fullscreen19 அதில் பாதியை அடுப்பில் எரித்தேன்; அதின் தழலின்மேல் அப்பத்தையும் சுட்டு, இறைச்சியையும் பொரித்துப் புசித்தேன்; அதில் மீதியான துண்டை நான் அருவருப்பான விக்கிரகமாக்கலாமா? ஒரு மரக்கட்டையை வணங்கலாமா என்று சொல்ல, தன் மனதில் அவனுக்குத் தோன்றவில்லை; அம்மாத்திரம் அறிவும் சொரணையும் இல்லை.

fullscreen20 அவன் சாம்பலை மேய்கிறான்; வஞ்சிக்கப்பட்ட மனம் அவனை மோசப்படுத்தினது; அவன் தன் ஆத்துமாவைத் தப்புவிக்காமலும்; என் வலதுகையிலே அபத்தம் அல்லவோ இருக்கிறதென்று சொல்லாமலும் இருக்கிறான்.

fullscreen21 யாக்கோபே, இஸ்ரவேலே, இவைகளை நினை; நீ என் தாசன்; நான் உன்னை உருவாக்கினேன்; நீ என் தாசன்; இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை.

fullscreen22 உன் மீறுதல்களை மேகத்தைப்போலவும், உன் பாவங்களைக் கார்மேகத்தைப்போலவும் அகற்றிவிட்டேன்; என்னிடத்தில் திரும்பு; உன்னை நான் மீட்டுக்கொண்டேன்.

fullscreen23 வானங்களே, களித்துப் பாடுங்கள்; கர்த்தர் இதைச் செய்தார்; பூதலத்தின் தாழ்விடங்களே, ஆர்ப்பரியுங்கள்; பர்வதங்களே, காடுகளே, காட்டிலுள்ள சகல மரங்களே, கெம்பீரமாய் முழங்குங்கள்; கர்த்தர் யாக்கோபை மீட்டு, இஸ்ரவேலிலே மகிமைப்படுகிறார்.

fullscreen24 உன் மீட்பரும், தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவருமான கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே எல்லாவற்றையும் செய்கிற கர்த்தர், நான் ஒருவராய் வானங்களை விரித்து, நானே பூமியைப் பரப்பினவர்.

fullscreen25 நான் கட்டுக்கதைக்காரரின் குறிகளை அபத்தமாக்கி, குறிசொல்லுகிறவர்களை நிர்மூடராக்கி, ஞானிகளை வெட்கப்படுத்தி, அவர்கள் அறிவைப் பைத்தியமாகப் பண்ணுகிறவர்.

fullscreen26 நான் என் ஊழியக்காரரின் வார்த்தையை நிலைப்படுத்தி, என் ஸ்தானாபதிகளின் ஆலோசனையை நிறைவேற்றி: குடியேறுவாய் என்று எருசலேமுக்கும், கட்டப்படுவீர்கள் என்று யூதாவின் பட்டணங்களுக்கும் சொல்லி, அவைகளின் பாழான ஸ்தலங்களை எடுப்பிப்பவர்.

fullscreen27 நான் ஆழத்தை நோக்கி: வற்றிப்போ என்றும், உன் நதிகளை வெட்டாந்தரையாக்குவேன் என்றும் சொல்லுகிறவர்.

fullscreen28 கோரேசைக் குறித்து: அவன் என் மேய்ப்பன்; அவன் எருசலேமை நோக்கி நீ கட்டப்படு என்றும்; தேவாலயத்தை நோக்கி: நீ அஸ்திபாரப்படு என்றும் சொல்லி, எனக்குப் பிரியமானதையெல்லாம் நிறைவேற்றுவான் என்று சொல்லுகிறவர் நான்.