அதற்குப்பின்பு யோபு தன் வாயைத் திறந்து, தான் பிறந்த நாளைச் சபித்து,
யோபு 3:2வசனித்துச் சொன்னது என்னவென்றால்:
யோபு 3:3நான் பிறந்தநாளும் ஒரு ஆண்பிள்ளை உற்பத்தியாயிற்றென்று சொல்லப்பட்ட ராத்திரியும் அழிவதாக.
யோபு 3:4அந்த நாள் அந்தகாரப்படுவதாக; தேவன் உயரத்திலிருந்து அதை விசாரியாமலும், ஒளி அதின்மேல் பிரகாசியாமலும்,
யோபு 3:5அந்தகாரமும் மகா இருளும் அதைக் கறைப்படுத்தி, மப்பு அதைமூடி, மந்தாரநாளின் பயங்கரங்கள் அதை அருக்களிப்பாக்குவதாக.
யோபு 3:6அந்த ராத்திரியை அந்தகாரம் பிடிப்பதாக; வருஷத்தின் நாட்களில் அது சந்தோஷப்படுகிற நாளாயிராமலும் மாதங்களின் கணக்கிலே அது வராமலும் போவதாக.
யோபு 3:7அந்த ராத்திரி தனிமையாயிருப்பதாக; அதிலே கெம்பீரசத்தம் இல்லாமற்போவதாக.
யோபு 3:8நாளைச் சபிக்கிறவர்களும், லிவியாதானை எழும்பப்பண்ணத்தக்கவர்களும், அதைச் சபிப்பார்களாக.
யோபு 3:9அதின் அஸ்தமனகாலத்தில் தோன்றிய நட்சத்திரங்கள் இருண்டு, அது எதிர்பார்த்திருந்த வெளிச்சம் உண்டாகமலும், விடியற்காலத்து வெளுப்பை அது காணாமலும் இருப்பதாக.
யோபு 3:10நான் இருந்த கர்ப்பத்தின் வாசலை அது அடைக்காமலும், என் கண்கள் காண்கிற வருத்தத்தை மறைத்துவிடாமலும் இருந்ததே.
யோபு 3:11நான் கர்ப்பத்தில்தானே அழியாமலும், கர்ப்பத்திலிருந்து புறப்படுகிறபோதே சாகாமலும் போனதென்ன?
யோபு 3:12என்னை ஏந்திக்கொள்ள மடியும், நான் பாலுண்ண ஸ்தனங்களும் உண்டாயிருந்ததென்ன?
யோபு 3:13அப்படியில்லாதிருந்தால், அசையாமல் கிடந்து அமர்ந்திருந்து,
யோபு 3:14பாழ்நிலங்களில் தங்களுக்கு மாளிகையைக்கட்டின பூமியின் ராஜாக்களோடும் மந்திரிமார்களோடும்,
யோபு 3:15அல்லது, பொன்னை உடையவர்களோடும், தங்கள் வீடுகளை வெள்ளியினால் நிரப்பினவர்களுமான பிரபுக்களோடுங்கூட நான் இப்பொழுது தூங்கி இளைப்பாறுவேனே.
யோபு 3:16அல்லது, வெளிப்படாத முதிராப்பிண்டம்போலவும் வெளிச்சத்தைக்காணாத சிசுக்கள் போலவும் இருப்பேனே.
யோபு 3:17துன்மார்க்கருடைய தொந்தரவு அங்கே ஓய்ந்திருக்கிறது; பெலனற்று விடாய்த்துப்போனவர்கள் அங்கே இளைப்பாறுகிறார்கள்.
யோபு 3:18கட்டுண்டிருந்தவர்கள் அங்கே ஏகமாக அமைந்திருக்கிறார்கள்; ஒடுக்குகிறவனுடைய சத்தம் அங்கே கேட்கப்படுகிறதில்லை.
யோபு 3:19சிறியவனும் பெரியவனும் அங்கே சரியாயிருக்கிறார்கள்; அடிமை தன் எஜமானுக்கு நீங்கலாயிருக்கிறான்.
யோபு 3:20மரணத்துக்கு ஆசையாய்க் காத்திருந்து, புதையலைத் தேடுகிறதுபோல அதைத் தேடியும் அடையாமற்போகிறவர்களும்,
யோபு 3:21பிரேதக்குழியைக் கண்டுபிடித்ததினால் மிகவும் களிகூர்ந்து,
யோபு 3:22அதற்காகச் சந்தோஷப்படுகிற நிர்ப்பாக்கியருமாகிய இவர்களுக்கு வெளிச்சமும், மனச்சஞ்சலமுள்ள இவர்களுக்கு ஜீவனும் கொடுக்கப்படுகிறதினால் பலன் என்ன?
யோபு 3:23தன் வழியைக் காணக் கூடாதபடிக்கு, தேவனால் வளைந்துகொள்ளப்பட்டவனுக்கு வெளிச்சத்தினால் பலன் என்ன?
யோபு 3:24என் போஜனத்துக்கு முன்னே எனக்குப் பெருமூச்சு உண்டாகிறது; என் கதறுதல் வெள்ளம்போல புரண்டுபோகிறது.
யோபு 3:25நான் பயந்த காரியம் எனக்குநேரிட்டது; நான் அஞ்சினது எனக்கு வந்தது.
யோபு 3:26எனக்குச் சுகமுமில்லை, இளைப்பாறுதலுமில்லை, அமைதலுமில்லை; எனக்குத் தத்தளிப்பே நேரிட்டது.