பின்னும் மோசே, லேவியராகிய ஆசாரியர்களும்கூட இருக்கையில், இஸ்ரவேலர் எல்லாரையும் நோக்கி: இஸ்ரவேலே, கவனித்துக் கேள்; இந்நாளிலே உன் தேவனாகிய கர்த்தருக்கு ஜனமானாய்.
உபாகமம் 27:10ஆகையால் நீ உன் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து, இன்று நான் உனக்கு விதிக்கிற அவருடைய கற்பனைகளின்படியும் அவருடைய கட்டளைகளின்படியும் செய்வாயாக என்று சொன்னான்.
உபாகமம் 27:11மேலும் அந்நாளிலே மோசே ஜனங்களை நோக்கி:
உபாகமம் 27:12நீங்கள் யோர்தானைக் கடந்தபின்பு, ஜனங்கள் ஆசீர்வதிக்கப்படும்படி கெரிசீம் மலையில் சிமியோன், லேவி, யூதா, இசக்கார், யோசேப்பு, பென்யமீன் என்னும் கோத்திரங்கள் நிற்கவேண்டும்.
உபாகமம் 27:13சாபங்கூறப்படும்பொருட்டு ஏபால்மலையில் ரூபன், காத், ஆசேர், செபுலோன், தாண், நப்தலி என்னும் கோத்திரங்கள் நிற்கவேண்டும்.
உபாகமம் 27:14அப்பொழுது லேவியர் உரத்த சத்தமிட்டு இஸ்ரவேல் மனிதர் எல்லாரையும் பார்த்து:
உபாகமம் 27:15கர்த்தருக்கு அருவருப்பான காரியமாகிய தொழிலாளிகளுடைய கைவேலையால் செய்யப்பட்டதும் வார்ப்பிக்கப்பட்டதுமான யாதொரு விக்கிரகத்தை உண்டுபண்ணி ஒளிப்பிடத்திலே வைக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; அதற்கு ஜனங்களெல்லாரும் பிரதியுத்தரமாக ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
உபாகமம் 27:16தன் தகப்பனையும் தன் தாயையும் தூஷிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்கள்; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
உபாகமம் 27:17பிறனுடைய எல்லைக்குறியை ஒற்றிப்போடுகிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
உபாகமம் 27:18குருடனை வழிதப்பச்செய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
உபாகமம் 27:19பரதேசி திக்கற்றவன் விதவை ஆகிய இவர்களுடைய நியாயத்தைப் புரட்டுகிறவன் சபிக்கப்படவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
உபாகமம் 27:20தன் தகப்பன் மனைவியோடே சயனிக்கிறவன், தன் தகப்பனுடைய மானத்தைத் திறந்தபடியினாலே, சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
உபாகமம் 27:21யாதொரு மிருகத்தோடே புணர்ச்சிசெய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
உபாகமம் 27:22தன் தகப்பனுக்காவது தாய்க்காவது குமாரத்தியாகிய தன் சகோதரியோடே சயனிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
உபாகமம் 27:23தன் மாமியோடே சயனிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
உபாகமம் 27:24ஒளிப்பிடத்திலே பிறனைக் கொலைசெய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
உபாகமம் 27:25குற்றமில்லாதவனைக் கொலைசெய்யும்படி பரிதானம் வாங்குகிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
உபாகமம் 27:26இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளையெல்லாம் கைக்கொண்டு நடவாதவன் சபிக்கப்பட்டவன் என்பர்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.