ஐந்துநாளைக்குப்பின்பு பிரதான ஆசாரியனாகிய அனனியா மூப்பர்களோடும் தெர்த்துல்லு என்னும் ஒரு நியாயசாதுரியனோடும்கூடப் போனான், அவர்கள் பவுலுக்கு விரோதமாய்த் தேசாதிபதியினிடத்தில் பிராதுபண்ணினார்கள்.
அப்போஸ்தலர் 24:2அவன் அழைக்கப்பட்டபோது, தெர்த்துல்லு குற்றஞ்சாட்டத்தொடங்கி:
அப்போஸ்தலர் 24:3கனம்பொருந்தின பேலிக்ஸே உம்மாலே நாங்கள் மிகுந்த சமாதான சவுக்கியத்தை அநுபவிக்கிறதையும் உம்முடைய பராமரிப்பினாலே இந்தத் தேசத்தாருக்குச் சிறந்த நன்மைகள் நடக்கிறதையும் நாங்கள் எப்பொழுதும் எங்கும் மிகுந்த நன்றியறிதலுடனே அங்கிகாரம்பண்ணுகிறோம்.
அப்போஸ்தலர் 24:4உம்மை நான் அநேக வார்த்தைகளிலே அலட்டாதபடிக்கு, நாங்கள் சுருக்கமாய்ச் சொல்வதை நீர் பொறுமையாய்க் கேட்கவேண்டுமென்று பிரார்த்திக்கிறேன்.
அப்போஸ்தலர் 24:5என்னவென்றால், இந்த மனுஷன் கொள்ளைநோயாகவும், பூச்சக்கரத்திலுள்ள சகல யூதர்களுக்குள்ளும் கலகமெழுப்புகிறவனாகவும், நசரேயருடைய மதபேதத்துக்கு முதலாளியாகவும் இருக்கிறானென்று கண்டறிந்தோம்.
அப்போஸ்தலர் 24:6இவன் தேவாலயத்தையும் தீட்டுப்படுத்தப் பார்த்தான். நாங்களோ இவனைப்பிடித்து எங்கள் வேதப்பிரமாணத்தின்படியே நியாயந்தீர்க்க மனதாயிருந்தோம்.
அப்போஸ்தலர் 24:7அப்பொழுது சேனாபதியாகிய லீசியா வந்து, மிகுந்த பலாத்காரமாய் இவனை எங்கள் கைகளிலிருந்து பறித்துக்கொண்டுபோய்,
அப்போஸ்தலர் 24:8இவன்மேல் குற்றஞ்சாட்டுகிறவர்கள் உம்மிடத்தில் வரும்படி கட்டளையிட்டார். இவனிடத்தில் நீர் விசாரித்தால் நாங்கள் இவன்மேல் சாட்டுகிற குற்றங்கள் யாவையும் அறிந்துகொள்ளலாம் என்றான்.
அப்போஸ்தலர் 24:9யூதர்களும் அதற்கு இசைந்து, இவைகள் யதார்த்தந்தான் என்றார்கள்.