பாபிலோன் ராஜா அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவைத் தேசத்தின்மேல் அதிகாரியாக்கினான் என்றும், பாபிலோனுக்குச் சிறைகளாகக் கொண்டுபோகப்பட்டிராத குடிகளில் ஏழைகளான புருஷரையும் ஸ்திரீகளையும் குழந்தைகளையும் அவனுடைய விசாரிப்புக்கு ஒப்புவித்தான் என்றும், வெளியிலிருக்கிற இராணுவர் சேர்வைக்காரர் அனைவரும் அவர்களுடைய மனுஷரும் கேட்டபோது,
எரேமியா 40:8அவர்கள் மிஸ்பாவுக்குக் கெதலியாவினிடத்தில் வந்தார்கள்; யாரெனில், நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலும், கரேயாவின் குமாரராகிய யோகனானும், யோனத்தானும், தன்கூமேத்தின் குமாரனாகிய செராயாவும், நெத்தோபாத்தியனாகிய ஏப்பாயின் குமாரரும், மகாத்தியனாகியனான ஒருவனுடைய குமாரனாகிய யெசனியாவும் ஆகிய இவர்களும் இவர்களைச் சேர்ந்தவர்களுமே.
எரேமியா 40:9அப்பொழுது சாப்பானுடைய குமாரனாகிய அகிக்காமின் மகன் கெதலியா அவர்களையும் அவர்கள் மனுஷரையும் நோக்கி: நீங்கள் கல்தேயரைச் சேவிக்கப் பயப்படவேண்டாம், நீங்கள் தேசத்திலிருந்து பாபிலோன் ராஜாவைச் சேவியுங்கள்; அப்பொழுது உங்களுக்கு நன்மையுண்டாகும்.
எரேமியா 40:10நானோவெனில், இதோ, நம்மிடத்திலே வருகிற கல்தேயரிடத்தில் சேவிக்கும்படி மிஸ்பாவிலே குடியிருக்கிறேன்; நீங்களோ போய், திராட்சரசத்தையும் பழங்களையும் எண்ணெயையும் சேர்த்து, உங்கள் பாண்டங்களில் வைத்து, உங்கள் வசமாயிருக்கிற ஊர்களில் குடியிருங்கள் என்று ஆணையிட்டுச் சொன்னான்.
எரேமியா 40:11மோவாபிலும் அம்மோன் புத்திரரிடத்திலும் ஏதோமிலும் சகல தேசங்களிலும் இருக்கிற யூதரும், பாபிலோன் ராஜா யூதாவில் சிலர் மீதியாயிருக்கக் கட்டளையிட்டானென்றும், சாப்பானுடைய குமாரனாகிய அகிக்காமின் மகனான கெதலியாவை அவர்கள்மேல் அதிகாரியாக்கினானென்றும், கேட்டபோது,
எரேமியா 40:12எல்லா யூதரும் தாங்கள் துரத்துண்ட எல்லா இடங்களிலுமிருந்து, யூதா தேசத்தில் கெதலியாவினிடத்தில் மிஸ்பாவுக்கு வந்து, திராட்சரசத்தையும் பழங்களையும் மிகுதியாய்ச் சேர்த்துவைத்தார்கள்
எரேமியா 40:13அப்பொழுது கரேயாவின் குமாரனாகிய யோகனானும் வெளியிலே இருந்த சகல இராணுவச் சேர்வைக்காரரும் மிஸ்பாவுக்குக் கெதலியாவினிடத்தில் வந்து,
எரேமியா 40:14உம்மைக் கொன்றுபோடும்படிக்கு, அம்மோன் புத்திரரின் ராஜாவாகிய பாலிஸ் என்பவன், நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலை அனுப்பினானென்பதை நீர் அறியவில்லையோ என்றார்கள்’ ஆனாலும் அகிக்காமின் குமாரனாகிய கெதலியா அவர்கள் வார்த்தையை நம்பவில்லை.
எரேமியா 40:15பின்னும் கரேயாவின் குமாரனாகிய யோகனான் மிஸ்பாவிலே கெதலியாவோடே இரகசியமாய்ப் பேசி: நான் போய் ஒருவரும் அறியாமல் நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலை வெட்டிப்போட உத்தரவாகவேண்டும்; உம்மிடத்தில் சேர்ந்த யூதரெல்லாரும் சிதறுண்டுபோகவும் யூதாவில் மீந்தவர்கள் அழியவும் அவன் உம்மைக் கொன்றுபோடவேண்டியதென்ன என்றான்.
எரேமியா 40:16ஆனாலும் அகிக்காமின் குமாரனாகிய கெதலியா கரேயாவின் குமாரனாகிய யோகனானை நோக்கி: நீ இந்தக் காரியத்தைச் செய்யாதே; இஸ்மவேலின்மேல் நீ பொய் சொல்லுகிறாய் என்றான்.