ஆதலால், நியாயம் எங்களுக்குத் தூரமாயிருக்கிறது, நீதி எங்களைத் தொடர்ந்து பிடிக்காது; வெளிச்சத்துக்குக் காத்திருந்தோம், இதோ, இருள்; பிரகாசத்துக்குக் காத்திருந்தோம், ஆனாலும் அந்தகாரத்திலே நடக்கிறோம்.
ஏசாயா 59:10நாங்கள் குருடரைப்போல் சுவரைப் பிடித்து, கண்ணில்லாதவர்களைப்போல் தடவுகிறோம்; இரவில் இடறுகிறதுபோலப் பட்டப்பகலிலும் இடறுகிறோம்; செத்தவர்களைப்போல் பாழிடங்களில் இருக்கிறோம்.
ஏசாயா 59:11நாங்கள் அனைவரும் கரடிகளைப்போல உறுமி, புறாக்களைப்போலக் கூவிக்கொண்டிருக்கிறோம், நியாயத்துக்குக் காத்திருந்தோம், அதைக்காணோம்; இரட்சிப்புக்குக் காத்திருந்தோம், அது எங்களுக்குத் தூரமாயிற்று.
ஏசாயா 59:12எங்கள் மீறுதல்கள் உமக்கு முன்பாக மிகுதியாயிருந்து, எங்கள் பாவங்கள் எங்களுக்கு விரோதமாய்ச் சாட்சிசொல்லுகிறது, எங்கள் மீறுதல்கள் எங்களோடே இருக்கிறது; எங்கள் அக்கிரமங்களை அறிந்திருக்கிறோம்.
ஏசாயா 59:13கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணி, பொய்பேசி, எங்கள் தேவனைவிட்டுப் பின்வாங்கினோம்; கொடுமையாகவும் கலகமாகவும் பேசினோம்; கள்ளவார்த்தைகளைக் கர்ப்பந்தரித்து, இருதயத்திலிருந்து பிறப்பிக்கப்பண்ணினோம்.
ஏசாயா 59:14நியாயம் பின்னிட்டு அகன்றது; நீதி தூரமாய் நின்றது; சத்தியம் வீதியிலே இடறி, யதார்த்தம் வந்து சேரமாட்டாமற்போகிறது.
ஏசாயா 59:15சத்தியம் தள்ளுபடியாயிற்று; பொல்லாப்பை விட்டு விலகுகிறவன் கொள்ளையாகிறான்; இதைக் கர்த்தர் பார்த்து நியாயமில்லையென்று விசனமுள்ளவரானார்.
ஏசாயா 59:16ஒருவரும் இல்லையென்று கண்டு, விண்ணப்பம் பண்ணுகிறவன் இல்லையென்று ஆச்சரியப்பட்டார்; ஆதலால் அவருடைய புயமே அவருக்கு இரட்சிப்பாகி, அவருடைய நீதியே அவரைத் தாங்குகிறது.
ஏசாயா 59:17அவர் நீதியை மார்க்கவசமாக அணிந்து, இரட்சிப்பென்னும் சீராவைத் தமது சிரசில் தரித்து, நீதிசரிக்கட்டுதலென்னும் வஸ்திரங்களை உடுப்பாக உடுத்து, வைராக்கியத்தைச் சால்வையாகப் போர்த்துக்கொண்டார்.
ஏசாயா 59:18கிரியைகளுக்குத்தக்க பலனை அளிப்பார், தம்முடைய சத்துருக்களிடத்தில் உக்கிரத்தை சரிக்கட்டி, தம்முடைய பகைஞருக்குத் தக்க பலனையும், தீவுகளுக்குத்தக்க பலனையும் சரிக்கட்டுவார்.
ஏசாயா 59:19அப்பொழுது சூரியன் அஸ்தமிக்குந்திசைதொடங்கி கர்த்தரின் நாமத்துக்கும், சூரியன் உதிக்குந்திசைதொடங்கி அவருடைய மகிமைக்கும் பயப்படுவார்கள்; வெள்ளம்போல் சத்துரு வரும்போது, கர்த்தருடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாய்க் கொடியேற்றுவார்.
ஏசாயா 59:20மீட்பர் சீயோனுக்கும், யாக்கோபிலே மீறுதலைவிட்டுத் திரும்புகிறவர்களுக்கும், வருவார் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
ஏசாயா 59:21உன்மேலிருக்கிற என் ஆவியும், நான் உன் வாயில் அருளிய என் வார்த்தைகளும், இதுமுதல் என்றென்றைக்கும் உன் வாயிலிருந்தும், உன் சந்ததியின் வாயிலிருந்தும், உன் சந்ததியினுடைய சந்ததியின் வாயிலிருந்தும் நீங்குவதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்; இது எனக்கு அவர்களோடிருக்கும் என் உடன்படிக்கையென்று கர்த்தர் சொல்லுகிறார்.